##~##

 'கோயில்களில் எத்தனையோ வழிபாடுகள், பூஜைகளை மேற்கொண்டாலும்... முன்னோருக்குச் செய்யும் வழிபாடுகள்தான் மிகமிக முக்கியமானவை’ என்று வேதங்கள் சொல்கின்றன. அதனால்தான், இறந்துவிட்ட நிலையிலும் நமக்குத் தொடர்ந்து அருள் புரிந்துவரும் முன்னோர்களை, குலதெய்வங்களாகக் கொண்டாடி வருகிறோம். அப்படி ஒரு தெய்வமாக இருந்து, தன் குலத்துக்கே அருள்பாலித்து வருகிறாள், சந்தியம்மன்.  

திருவண்ணாமலை மாவட்டம், பண்டிதப்பட்டு, செ.அகரம், சின்னக்கோளப்பாடி, தாணிப்பாடிசத்திரம் உள்ளிட்ட சில கிராமங்களில் ஒரே வம்சாவளியைச் சேர்ந்த மக்கள் பல நூறு ஆண்டுகளாக வசிக்கின்றனர். இந்த வம்சத்தில் செ.அகரம் கிராமத்தில் பிறந்த சந்தியம்மாள்தான், இந்த சந்தியம்மன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சந்தியம்மாள் தெய்வமாக மாறியதன் பின்னணியில்... பரவசப்படுத்தும் 'பாசமலர்' கதை இருக்கிறது. அதை, செ.அகரம் கிராமத்தைச் சேர்ந்த அருணாசலம் நமக்கு அழகாக விவரித்தார்.

''அப்பா, அம்மா இல்லாததால... அண்ணன்தான் சந்தியம்மாளை வளர்க்கறார். ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் தீராத பாசத்தோட இருக்காங்க. ஆனா, சந்தியம்மாளுக்கும் அண்ணிக்கும் சுத்தமா ஆகல. அண்ணன் - தங்கச்சி பாசத்தைக் கண்டு, அவளுக்கு ஒரே பொறாமை. இந்த நிலையில, கல்யாணம் ஆகிப்போன சந்தியம்மா கர்ப்பமாகவே... சீமந்தம் பண்ணி பொறந்த வீட்டுக்கு கூட்டிட்டு வர்றாங்க.

ஒரு நாள், வடை திங்கணும்னு ஆசைப்பட்டு அண்ணன்கிட்ட கேட்கிறா சந்தியம்மா. வடைக்குத் தேவையான பலசரக்கு சாமான், எண்ணெய் எல்லாத்தையும் வாங்கிட்டு வந்து மனைவிகிட்ட கொடுத்து, தங்கச்சிக்கு வடை சுட்டு தரச் சொன்னார் அண்ணன். உடனே அண்ணி மாவாட்ட ஆரம்பிக்கவே.. அதைப் பார்த்து சந்தோஷப்பட்ட சந்தியம்மா, குஷியோட வெளியில கிளம்பிப் போயி குளிச்சுட்டு, சிநேகிதிகள்கிட்ட எல்லாம் பேசிட்டு வடை நினைப்போட வீட்டுக்குத் திரும்பினா. ஆனா, வடை சட்டியில ஒரு வடைகூட இல்ல. அவ்வளவையும் அண்ணியே சாப்பிட்டுட்டா.

இதோ எந்தன் தெய்வம்! - 10

ஏமாந்து போன சந்தியம்மாவுக்கு... கோவம் தாங்கல. எப்ப பார்த்தாலும் தன்கிட்ட சண்டை கட்டிக்கிட்டே இருக்கற அண்ணி, இப்ப புள்ளதாச்சியா வந்திருக்கறப்பயாச்சும் நம்மள நல்லா பார்த்துக்கக் கூடாதானு நினைச்சு நினைச்சு அழுதவ, ஒரு கட்டத்துல உசுரையே மாய்ச்சுக்க முடிவெடுத்து, பக்கத்துல இருக்கற பாழுங்கிணத்துக்குள்ள குதிச்சுட்டா. வீட்டுக்கு வந்த அண்ணன், தங்கச்சியைக் காணாம, 'சந்தி, சந்தி...’னு கத்திக்கிட்டே அலைபாயறார். அப்படியே கிணத்து பக்கமா போனப்ப... உள்ள இருந்து சந்தியம்மாவோட குரல் கேக்குது. அங்கிருந்தபடியே விஷயத்தை சொல்லுறா.

'ஐயோ, இப்படி நடந்து போச்சே'னு தலையில அடிச்சுக்கிட்டு அண்ணன் புலம்ப...

'நான் இப்படி அநியாயமா செத்துப் போறேன்னு நீங்க கவலைப்படாதீங்க. இதுக்கு மேல நான் வாழ ஆசைப்படல.  ஒரு தடவை முடிவெடுத்தது எடுத்ததுதான். என் ஆசை நிறைவேறாததாலதான் இப்படி சாகுறேன். இனிமே நீங்க யாரும் எண்ணெய் பலகாரம் செஞ்சு சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிடாம இருந்து என்னைக் கும்பிட்டா... நான் சாமியா இருந்து உங்களையெல்லாம் காப்பாத்துவேன்'னு சொல்லிட்டு உசுர விடுறா சந்தியம்மா.

அதிலிருந்து இன்னிவரைக்கும் எங்க குலத்துல யாரும் வீட்டுல எண்ணெய் பலகாரம் செய்றதுல்ல. பக்கத்துல யாராவது செஞ்சு கொடுத்தா... சாப்பிடுவோம். பிள்ளைக ஆசைப்பட்டாலும் கடையில வாங்கித் தருவோமே ஒழிய... வீட்டுல செய்றதுல்ல. தோசைகூட சுடறதில்லை'' என்று சிலிர்த்தபடியே கதை சொல்லி முடித்தார் அருணாசலம்.

சந்தியம்மாள் உயிரை மாய்த்துக் கொண்ட கிணற்றிலிருந்து கூம்பு வடிவில் நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு கல்லை வெகு காலமாக சந்தியம்மன் நினைவாக வழிபட்டு வந்த மக்கள், ஒரு கட்டத்துக்குப் பிறகு, அருகிலேயே ஒரு கோயிலைக் கட்டி, வெண்கலம் மற்றும் கல் ஆகியவற்றில் உருவச்சிலைகளை ஸ்தாபித்து வழிபட ஆரம்பித்துவிட்டனர். ஆரம்ப காலங்களில் 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆடி மாதத்தில் திருவிழா எடுத்த மக்கள், பின்னர் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை என மாற்றி, தற்போது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை எனக் கொண்டாடி வருகின்றனர்.

''ஆடி மாசம் மூணாம் செவ்வாய்க்கிழமை அன்னிக்கு சந்தியம்மனுக்கு கும்பிடு நடத்துவோம். எங்க வம்சத்துல இருக்குற ஒட்டுமொத்த ஜனமும் திரண்டு வந்துடுவோம். வேலைக்காக வெளியூர்கள்ல இருந்தாலும், அன்னிக்கு கண்டிப்பா ஊருக்குப் புறப்பட்டு வந்துடுவோம். அன்னிக்கு ஒரு நாள் மட்டும்தான் வீட்டுலயே வடை சுட்டு அம்மனுக்கு படைச்சு சாப்பிட்டுக்கலாம். அதுவும், கல்யாணம் ஆகி வாழ வந்த பொண்ணுங்க வடை சுடக்கூடாது. பிறந்த வீட்டுல இருக்கற பொண்ணுங்கதான் வடை சுடணும். கல்யாணம் ஆகிப்போயிருந்தாலும்... அன்னிக்கு இதுக்காகவே பிறந்த வீட்டுக்கு வந்திருந்து, எல்லாருக்கும் வடை சுட்டுக் கொடுப்பாங்க. பெண் வாரிசு இல்லாத வீடுங்கள்ல, வடை சுடவே மாட் டாங்க'' என்று தங்கள் குல வழக்கம் சொன்னார் அந்த ஊரைச் சேர்ந்த பொன்னம்மாள்.

இதோ எந்தன் தெய்வம்! - 10

''திருவிழா அன்னிக்கு சாயங்காலம், கோயில்ல கொதிக்கிற நெய்ல கரண்டி இல்லாம வெறும் கையாலயே வடை சுட்டு அம்மனுக்கு படைப்பாங்க. யாராவது, விதவைப் பொண்ணுங்கதான் இந்த மாதிரி வடை சுடணும். இப்படி வடை சுடறப்போ ஊரே ஆச்சர்யப்பட்டு வேடிக்கை பாப்பாங்க. அம்மனோட அருளால கை சுடாது. அந்த சமயத்துல நிறைய பேருக்கு சாமி அருள் இறங்கும்'' என்றார் கன்னங்களில் கைகளை ஒத்திக் கொண்ட பொன்னம்மாள்,

''இன்னிவரைக்கும் அம்மனோட ஆசையை நாங்க நிறைவேத்திட்டு இருக்குறதால... எங்க வம்சத்தை நல்லபடியா காப்பாத்திக்கிட்டு வர்றா சந்தியம்மா. குழந்தை இல்லாதவங்க, கல்யாணம் ஆகாத பொண்ணுங்க இங்க வந்து வேண்டிக்கிட்டா... உடனே வரம் கொடுத்துடுவா!'' என்றார் நம்பிக்கையூட்டும் வகையில்!

- தெய்வங்கள் பேசும்...

படங்கள்: கா.முரளி

வழிகாட்டி

திருவண்ணாமலையிலிருந்து செங்கம் செல்லும் சாலையில் அரசுக் கல்லூரி இருக்கிறது. இங்கிருந்து இடதுபுறம் பெரும்பாக்கம் செல்லும் சாலையில் பத்தாவது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது, செ.அகரம். அதிகாலையிலிருந்து இரவு வரை கோயில் திறந்தே இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் செல்லலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism