Published:Updated:

சின்ன ஐடியா... பெரிய லாபம்... அசத்தும் இல்லத்தரசிகள்!

சிறுதொழில் சிறப்பிதழ்

சின்ன ஐடியா... பெரிய லாபம்... அசத்தும் இல்லத்தரசிகள்!

சிறுதொழில் சிறப்பிதழ்

Published:Updated:
##~##

 த்தாயிரம் ரூபாயை முதலீடாக வைத்துக்கொண்டு, 'அம்பானி' ஆக கனவு காணாமல், தங்களுக்கு செட் ஆகும் ஒரு சின்ன தொழிலை கையில் எடுத்து சலனமில்லாமல் வாழ்க்கையைச் செலுத்திக் கொண்டிருக்கும் பெண்கள் பலர். பியூட்டி பார்லர், பேப்பர் பேக், தையல் என்று அப்படி பெண்களுக்கு இணக்கமான தொழிலில் இறங்கியிருக்கும் இந்தத் தோழிகள், தாங்கள் வென்ற கதை சொல்கிறார்கள்.

''வெற்றி உடனே கிடைச்சுடல!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அகிலா ஜானகிராமன், சென்னையில் பத்து வருடங்களாக பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். ''பெண்களுக்கு ஏற்ற பிஸினஸ்... பியூட்டி பார்லர். அதனாலதான் எனக்கு கெடைச்ச அரசு வேலையை தள்ளிட்டு, பியூட்டீஷியன் வேலையை முழு நேரமா செய்யறேன். பத்து வருஷத்துக்கு முன்ன நான் கோர்ஸ் முடிச்சு, 'விஜீஸ் பியூட்டி பார்லர்’ ஆரம்பிச்சப்போ, வெற்றி உடனே கிடைச்சுடல. ஒரு நாளைக்கு இருபது, ஐம்பதுனுதான் போயிட்டிருந்தது. நம்பிக்கையோட முழு உழைப்பையும் கொட்டினேன்.

கல்யாணப் பொண்ணுக்கு மேக்கப் செய்யப் போகும்போது, கூடவே ஒரு கேமராவும் எடுத்துட்டு போவேன். நேர்ல பாக்குற மாதிரியே போட்டோல இருக்காது. அதனால மேக்கப் முடிச்சதும் போட்டோ எடுத்து பார்த்து, எதையாச்சும் சரி பண்ணணும்னா உடனே பண்ணிடுவேன்.

சின்ன ஐடியா... பெரிய லாபம்... அசத்தும் இல்லத்தரசிகள்!

'பெண்களுக்கு தேவையான பிளவுஸ் டிசைனிங், ஜுவல்லரி மேக்கிங்னு கூடுதலா எதாச்சும் பண்ணு'னு வீட்டுக்காரர் ஐடியா குடுத்தார். ஃப்ரெண்ட்ஸ், அவங்களுக்கு தெரிஞ்ச எல்லார்கிட்டயும் சொல்லி எனக்கான கஸ்டமர்ஸை புடிச்சாங்க. பிஸினஸ் பிக்-அப் ஆச்சு. என்னோட மேற்பார்வையில கடைக்கு எக்ஸ்ட்ரா ஒரு பியூட்டீஷியனை போட்டுட்டு, காஸ்மெடிக் பிரிப்ரேஷன்னு ஒரு கோர்ஸ் படிச்சேன். தவிர ஹேர் கட்டிங் செமினார்ஸ், புது வகை ஃபேஷியல்னு அப்டேட் பண்ணிட்டே இருப்பேன். ஏதாச்சும் பார்லர்ல பிராக்டீஸ் செய்துட்டு சொந்தமா தொடங்கறதுதான் புத்திசாலித்தனம்'' என்றார்.

''புதுமைகளைப் புகுத்த புகுத்தத்தான் சிறக்கும்!''

சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில், வீட்டிலேயே பேப்பர் பேக் செய்வதுடன், பல பெண்களுக்கு வேலை வாய்ப்பையும் அளித்துவருகிறார் கற்பகம். இதற்கு மூலக்காரணமாக தன் அண்ணன்களையும், கணவரையும் குறிப்பிடுகிறார்.

''அரசாங்கம், பிளாஸ்டிக் பைகளை தடை செய்திருந்த நேரம். பேப்பர் பை தொழில் செய்ய சரியான நேரம்னு ஒரு யோசனை. எப்படி செய்யணும்னு தெரியல. புதுச்சட்டை வாங்கும்போது கடையில கொடுத்த பேப்பர் பை மடிப்பை பிரிச்சுப் பார்த்து... நானும் அண்ணன்களும் கத்துக்கிட்டோம். 'ஸ்ரீவாரி பேப்பர் புராடக்ட்ஸ்’ ஆரம்பிச்சோம். அண்ணன்கள், என் வீட்டில் வந்து மெட்டீரியல்களை கொடுத்துட்டுப் போக, நான் பைகள் செய்து கொடுப்பேன். நான் செய்யறதை பார்த்து எங்க ஏரியா பெண்கள் 'நாங்களும் செய்யுறோம்... நிறைய லோடு இறக்கச் சொல்லுங்க’னு கேட்டாங்க. இப்போ எங்க வீட்டுல குறைந்தபட்சம் பத்து பேராவது வேலை பார்த்துட்டே இருக்காங்க.

இந்த பிஸினஸைப் பொறுத்தவரை சிறிய முதலீடே போதும். வீட்ல இருந்தே செய்யலாம். ஆனா, மார்க்கெட்டிங் பண்றதுலதான் வளர்ச்சியே இருக்கு. எல்லாரையும் மாதிரி பிளெய்ன் பைகளா செய்யாம, நிறைய டிசைன்கள் மற்றும் நிறங்களை அறிமுகப்படுத்தினோம். அப்படியே ஜூட், வெல்வெட், ரெக்ஸின் இப்படி பல ரகங்களைக் கொண்டு வந்தோம். இப்படி புதுமைகளைப் புகுத்த புகுத்தத்தான் பிஸினஸ் சிறப்பாவும், வேகமாவும் வளர்ச்சியடைய முடியும்!'' எனும் கற்பகத்தின் அடுத்த இலக்கு, சொந்த கிராமமான வாயலூரில் பேப்பர் பேக் யூனிட் ஆரம்பித்து, அங்குள்ள பெண்களுக்கு வேலை வாய்ப்பைத் தருவது.

சின்ன ஐடியா... பெரிய லாபம்... அசத்தும் இல்லத்தரசிகள்!

''மேல் தையல் போட்டாலே... முன்னுக்கு வரலாம்!''

''விதவிதமான ரெடிமேட் டிரெஸ் கடைக்கு வந்தாலும். டெய்லரிங் தொழிலுக்கு என்னிக்குமே மவுசு கொறையாதுங்க!''

- நம்பிக்கை வார்த்தைகளைக் கூறுகிறார் சென்னை, நுங்கம்பாக்கத்தில் இருக்கும் 'ஸாய்ஸ் நீடில் ஆர்ட்’ உரிமையாளர் சவிதா.

''ஒரு வருஷ டெய்லரிங் கோர்ஸை பண்ணிட்டு, பத்து வருஷமா டெய்லரிங் தொழில் பண்ணிட்டிருக்கேன். ஆரம்பத்துல பிளவுஸ் மட்டும் தைச்சுட்டு இருந்தேன். அப்படியே புடவை ஓரம் அடிக்கறது, ஃபால்ஸ் தைச்சுக் கொடுக்கறது, சல்வார் தைச்சுக் கொடுக்கறதுனு, பிராக்டீஸ் ஆக... கொஞ்சம் கொஞ்சமா வேலையை அதிகப்படுத்திக்கிட்டேன்'' எனும் சவிதா, பி.எஸ்.சி. பட்டதாரி.

''கடினமா உழைக்கணும். அதுவும் தீபாவளி, பொங்கல் சமயத்துல ரொம்ப கஷ்டமா இருக்கும். அந்த சமயத்துலதான் அதிகமா சம்பாதிக்க முடியும். சாதாரண பிளவுஸ் தைக்கும்போது கூடவே கல்யாண பிளவுஸ்களை தைச்சு கொடுத்தா, உங்கள் கடைக்கு கூடுதல் விளம்பரம் கிடைச்சுடும். சல்வாரை லேட்டஸ்ட் டிரெண்டுக்கு ஏத்த மாதிரி தைச்சுக் கொடுத்தாலும் கஸ்டமர்களை கவர்ந்திழுக்கலாம். வேலைக்கு ஆள் போடும்போது கூடுதல் கவனமா இருக்கணும். சிலர் பாதியிலயே வேலையை விட்டுடுவாங்க. சிலர் ஏதாச்சும் காரணம் சொல்லி அட்வான்ஸா பணம் வாங்கிட்டு எஸ்கேப் ஆகிடுவாங்க.

ஒரு முழு டிரெஸ் தைக்கணும்னுகூட இல்ல, தையலடிக்க தெரிஞ்சாலே போதும். ஏன்னா... இப்பல்லாம் மேல் தையல் போடறதுக்கு, தையல் விட்டுப்போன துணிகளை தைக்கிறதுக்கெல்லாம் ஆட்கள் குறைவாத்தான் இருக்கு. ரெண்டாயிரம் ரூபாய்க்கே செகண்ட் ஹேண்ட் மெஷினும் கிடைக்குது. பெரிய செலவே இல்லாம, வீட்லயே தொழிலை ஆரம்பிச்சுடலாம். கடை வெச்சி நடத்தறதுக்கு பேங்க்குல கேக்குற எல்லா டாக்குமென்டும் கொடுத்துட்டா போதும். அதிக பட்சமாக ரெண்டு மாசத்துல லோன் கைக்கு வந்துடும்'' எனும் சவிதாவின் மாத வருமானம், 25 ஆயிரம் வரை!

சின்ன ஐடியாவில் நீங்களும் பெரிய லாபமெடுங்கள் தோழிகளே!

- இந்துலேகா.சி

படம்: இ.ராஜவிபீஷிகா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism