Published:Updated:

“பட்டறிவுதான் வளர்க்கும்... சட்டம் சாதிக்காது!”

ஆடை அலசல் கலந்துரையாடல்

“பட்டறிவுதான் வளர்க்கும்... சட்டம் சாதிக்காது!”

ஆடை அலசல் கலந்துரையாடல்

Published:Updated:
##~##

 ''இருபாலர் படிக்கும் கல்லூரிகளில் மாணவ - மாணவிகள் அணியும் உடைகளால் கவனச்சிதறல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, மாணவர்கள் பேன்ட் மற்றும் சட்டையும், மாணவிகள் சேலை அல்லது சுடிதார் மட்டுமே அணிய வேண்டும்''

- கல்லூரிக் கல்வி இயக்குநர் செந்தமிழ்ச்செல்வி சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு இது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'டிரெஸ் கோட்' எனப்படும் இக்கட்டுப்பாடு, கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே பரபரப்பைப் பற்ற வைத்திருக்கும் நிலையில், இதைப் பற்றி கலந்துரையாடுவதற்காக கல்லூரி மாணவிகள் ஸ்ரீமதி மற்றும் ஹரிட்டா, மாணவர் பாரதிராஜா, பெற்றோர் சரவணன் ராஜேந்திரன், செல்வராணி, கல்லூரிப் பேராசிரியர் வாணி ஆகியோரை அழைத்தோம்.

ஸ்ரீமதி: ஸ்கூல் முடிச்சு, கல்லூரிக்குள் வந்ததும், 12 வருஷமா யூனிஃபார்ம் போட்டு விடுதலையான உற்சாகத்துல மாணவர்கள் இருப்பாங்க. ஆர்வத்தோட விதம்விதமா டிரெஸ் பண்ண துடிப்பாங்க. ஒரு கட்டத்துல, எல்லைகளைத் தாண்ட வைக்கும். சுட்டிச் சொல்லவோ, குட்டவோ யாரும் இல்லைனா, 'இப்படியெல்லாம் டிரெஸ் பண்ணினாதான் நாமளும் யூத்’னு தவறான நம்பிக்கையை வளர்த்து, ஆடையாலயே மதிப்பை குறைச்சுக்குற அளவுக்குப் போயிடுவாங்க. ஃபர்ஸ்ட் இயர்ல சுடிதார் போட்டு வர்ற பொண்ணு, ஃபைனல் இயர்ல ஷார்ட் ஸ்கர்ட் போடுறது இதனாலதான்.

“பட்டறிவுதான் வளர்க்கும்... சட்டம் சாதிக்காது!”

ஹரிட்டா: சில கேர்ள்ஸ் அப்படி டிரெஸ் பண்ணிட்டு வரும்போது, எங்களுக்கே பதறும். அப்போ ஆண்களோட மனசு எப்படி அலைபாயும்னு நினைச்சுப் பாருங்க. இந்தச் சட்டம் நடைமுறையில இருந்தாலும் சரி, இல்லைனாலும் சரி... லெகீங்ஸ், ஷார்ட்ஸ், த்ரீ ஃபோர்த், இதைஎல்லாம்... எங்கே, எப்படி போடணுங்கிறத முதல்ல தெரிஞ்சுக்கணும். இதையெல்லாம் ஃபாலோ பண்ணாலே... பெண்களுக்கான 90 சதவிகித பிரச்னைகள் தடுக்கப்படும்.

வாணி: உடைகள்தான் பாலியல் வன்முறைகளுக்கு தூண்டுதல்ங்கற மாதிரி பேசினா... ஏத்துக்க முடியாது. சட்டம் போடுறதால பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை 100 சதவிகிதம் தடுத்துட முடியும்னும் சொல்ல முடியாது. ஆனாலும், கல்லூரிக்குள் ஆடைக் கட்டுப்பாடு காலத்தின் அவசியம். 'வேண்டாம்’னு சொல்ற எதையுமே... 'வேணும்’னு அடம் பிடிக்கிறது ஸ்டூடன்ட்ஸ் மென்டாலிட்டி. அதை கொஞ்சம் மாத்திக்கணும்.

செல்வராணி: ஒவ்வொரு கல்லூரியும், அந்தந்த பகுதிக்கு ஏற்ப, இப்படி கட்டுப்பாடுகள் கொண்டு வரலாம். ஆனா, இப்படித்தான்னு ஒட்டுமொத்தமா அரசாங்கமே சட்டம் போட்டா... அது நல்லதில்ல.

பாரதிராஜா: எனக்கு சொந்த ஊர் நாமக்கல். அங்க எப்பவுமே ஃபார்மல்ஸ்தான் போடுவேன். சென்னையில யூனிவர்சிட்டிக்கு வந்த பிறகு, என்னுடைய டிரெஸ்ஸைப் பார்த்த நிறைய பொண்ணுங்க, 'சரியான படிப்ஸ்’, 'பாண்டு பையன்’னு கிண்டல் பண்ணுவாங்க. 3, 4-வது செமஸ்டர் வந்தப்போ எனக்கே தன்னம்பிக்கை போயிடுச்சு. நாமளும் ஏன் ஜீன்ஸ் போடக்கூடாதுனு... போட ஆரம்பிச்சுட்டேன். வேஷம் போட வேண்டிய கட்டாயச் சூழல்.

சரவணன் ராஜேந்திரன்: ஜீன்ஸ் போடறதே தப்புனு சொல்றது தப்பு. என்னுடைய பொண்ணுக்கு எப்பவுமே ஜீன்ஸ், டாப்ஸ்தான் வாங்கித் தரேன். அவளுக்கு இதுதான் பாதுகாப்புனு நினைக்கிறேன். எந்த ஒரு விஷயமா இருந்தாலும்... மறைச்சு வெச்சா ஆர்வம் அதிகரிக்கும். பொண்ணுங்கள விட, இந்தக் கால பசங்க டிரெஸ் பண்ற ஸ்டைல் சகிக்க முடியாம போயிட்டிருக்கு. இடுப்புல இருந்து எப்போ அவிழுமோனு நம்மைப் பதற வைக்கிற லோ வெயிஸ்ட் பேன்ட், கண்ட கண்ட வாக்கியங்களோட டி-ஷர்ட், கிழிசல் ஜீன்ஸ்னு முகம் சுளிக்க வைக்கிறாங்க. 'தீதும் நன்றும் பிறர் தர வாரா’ங்கறத அவங்கவங்களே புரிஞ்சுக்கணும். பால்ய வயசுல பட்டுத் தெரிஞ்சுக்குற பட்டறிவுதான் அவங்கள வளர்க்கும். சட்டம் போடறதால, எந்த ஒரு பிரயோஜனமும் இல்ல.

செல்வராணி: முகம் சுளிக்கிற மாதிரி அவங்க உடைகள் மாறினா... பெற்றோர் அனுமதிக்கக்கூடாது. மாடர்ன் உடைகளையே அனுமதிக்கக் கூடாதுனு சொல்ல வரல. மரியாதையா உடுத்தணும்னு புரிய வைக்கணும். ஒரு மாணவனை அறிவாளி ஆக்க நினைச்சா... நடைமுறையில அவங்க எப்படி இருக்காங்களோ அப்படியே விட்டுடுறது நல்லது. அடிமையாக்கப் போறீங்கனா... டிரெஸ் கோட் கொடுங்க. வெற்று சட்டங்கள், அவங்கள ஒருபோதும் மாத்தப்போறதில்ல!

பொதுவாக, 'மாணவர்கள்தான் எதிர்ப்பார்கள்' என்று நினைத்தோம். ஆனால், இங்கே அவர்கள் ஆதரவு முழக்கங்களை முன் வைக்க... பெற்றோர் தரப்பிலிருந்து எதிர்முழக்கம்! காலம்தான் தீர்மானிக்க வேண்டும்!

- வே.கிருஷ்ணவேணி

படங்கள்: எம்.உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism