Published:Updated:

தினமும் 15 நிமிஷம்... மாதம் 2 ஆயிரம்!

மண்ணிலிருந்து ‘பொன்’ எடுக்கும் மகளிர்சிறுதொழில் சிறப்பிதழ்

தினமும் 15 நிமிஷம்... மாதம் 2 ஆயிரம்!

மண்ணிலிருந்து ‘பொன்’ எடுக்கும் மகளிர்சிறுதொழில் சிறப்பிதழ்

Published:Updated:
##~##

 ''தோழிகளே... தினமும் உங்களால 15 நிமிஷம் ஒதுக்க முடிஞ்சா, வீட்டிலிருந்தபடியே மாசம் ரெண்டாயிரம் சம்பாதிக்கலாம். ரெடியா..? மண்புழு உரம் தயாரிக்க களம் இறங்கலாமா..?!''

- திருவள்ளூர் மாவட்ட கிராமப் பெண்களின் குரலில் அத்தனை உற்சாகம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, இம்மாவட்டத்தில் உள்ள இருநூறுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று, அங்கே யுள்ள பெண்கள் சுயஉதவிக் குழுக்களை திரட்டி, அவர்களுக்கெல்லாம் செறிவூட்டப் பட்ட மண்புழு உரத்தின் பயன், தயாரிப்பு முறை, தொழில், லாபம் பற்றியெல்லாம் கற்றுத்தந்து வழிநடத்தி வருகிறது, சென்னை, லயோலா கல்லூரியின் பூச்சியியல் ஆய்வுத் துறை. அதன் வீச்சில், வெற்றிகரமாக காலூன்றியிருக்கும் அந்த மாவட்ட கிராமங்கள் சிலவற்றில் ஒரு வலம் வந்தோம்.

பனப்பாக்கம், பெரிய காலனியைச் சேர்ந்த மஞ்சுளா, ''ஒரு வருஷமா சிறுதொழில் மாதிரி மண்புழு உரத் தயாரிப்பை செய்துட்டு வர்றோம். ஆரம்பத்துல எங்க கிராமத்துல நான் மட்டும்தான் இதுல ஈடுபட்டேன். என்னைப் பார்த்து நிறைய பெண்கள் களமிறங்க... இப்ப எங்க கிராமத்துல மட்டும் 16 பெண்கள் தனித்தனியா இயற்கை முறையில உரம் தயாரிச்சு விற்பனை செய்றோம்.

தொட்டி, மண்புழு எல்லாமே லயோலா காலேஜ் மூலமாக கொடுக்கறாங்க. நாங்க அதுக்குள்ள மாட்டுச் சாணம், வீணான காய்கறி, பழங்களைக் கொட்டி தினமும் லேசா அதுக்கு மேல தண்ணி தெளிச்சு பார்த்துப்போம்... அவ்ளோதான். ஒரு மாசம் அல்லது 45 நாள்ல தரமான மண்புழு உரம் கிடைச்சுடும். அதை எடுத்து வெயில்ல காய வெச்சு பேக் பண்ணி வித்துடுவோம். மணிக்கணக்கா இதுக்காக வேலை செய்யவேண்டியதில்லை. தினமும் கொஞ்ச நேரம் ஒதுக்கினாலே போதும். எங்களோட மற்ற வேலைகளை, இது எந்த விதத்துலயும் பாதிக்கிறதும் இல்ல. அதனால நாங்க சுலபமா வீட்டிலிருந்தபடியே மாதம் 2,000 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கிறோம்'' என்று பெருமை பொங்கச் சொன்னார்.

தினமும் 15 நிமிஷம்... மாதம் 2 ஆயிரம்!

பேரண்டூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி, ''எங்க கிராமத்துல எல்லாருமே சொந்தமா நிலம் வெச்சுருக்கோம். ஒரு வருஷத்துக்கு முன்னவரைக்கும் ரசாயன உரங்களைத்தான் பயன்படுத்தி வந்தோம். போன வருஷம் எங்க கிராமத்துக்கு வந்திருந்த லயோலா கல்லூரிக்காரங்க... ரசாயன உரத்தால பயிர், நிலத்துக்கு ஏற்படுற பாதிப்புகளை எடுத்துச் சொன்னப்போ, அதிர்ந்துட்டோம். அதிலிருந்து தான் மண்புழு உரத் தயாரிப்புல ஆர்வம் காட்ட ஆரம்பிச்சோம்.

இன்னிக்கு எங்க கிராமத்தைச் சேர்ந்த சுயஉதவிக் குழு பெண்கள் எல்லாருமே இயற்கை முறையில உரம் தயாரிச்சு, அவங்கவங்க நிலத்துல பயன்படுத்துறோம். இதனால வெளியில உரம் வாங்குற பணம் மிச்சமாகறதோட, நல்ல மகசூலும் கிடைக்குது. இப்படி எல்லா கிராமப் பெண்களும் ஆர்வம் காட்டினா, விவசாய நிலமெல்லாம் விஷமா மாறாம தடுக்கப்படறதோட... மக்களுக்கும் விஷமில்லாத உணவுப் பொருளுங்கள விளைவிச்சு கொடுத்த நிம்மதியும் கிடைக்கும்!'' என்றார் அக்கறையுடன்.

தினமும் 15 நிமிஷம்... மாதம் 2 ஆயிரம்!

செஞ்சி அகரம் கிராமத்தில் மண்புழு உரத்தை பேக் செய்து கொண்டிருந்தார் மாரியம்மா. ''எங்களுக்கு சொந்தமா நிலம் கிடையாது. மீன் விக்கிறது, கூலி வேலைக்குப் போறதுனு இருந்தேன். போன வருஷத்துல ஒரு நாள்... மீன் வித்துட்டு திரும்பி வரும்போது, எங்க கிராமத்துப் பெண்கள் எல்லாரும் கூட்டமா ஒரு இடத்துல உட்கார்ந்திருந்தாங்க. என்னனு எட்டிப் பார்த்தா, மண்புழு உரம் தயாரிக்க சொல்லிக் கொடுத்துட்டு இருந்தாங்க. நானும் கத்துக்கிட்டு உரம் தயாரிக்க ஆரம்பிச்சுட்டேன். இந்த வருமானம், என் குடும்ப செலவுக்கு ரொம்பவே உதவியா இருக்கு'' என்றார் நெகிழ்ச்சியுடன்.

சுயஉதவிக் குழுவின் தலைவி விஜயலட்சுமி, ''இன்னிக்கு எங்க கிராமமே மண்புழு உரம் தயாரிக்கறதையே ஒரு  சிறுதொழிலா கையில எடுத்து அசத்திட்டிருக்கு. ஒரு தொட்டி மூலமா மாசத்துக்கு 300 கிலோ உரம் எடுக்குறோம். எடுத்த உடனேயே விற்பனையும் ஆகிடுது. எங்க பகுதியில எல்லாருமே இப்போ மண்புழு உரத்தை பயன்படுத்தறதுதான் காரணம். ஒரு கிலோ உரம், 5 ரூபாய்னு விற்பனை செய்றோம். தினமும் சில நிமிஷங்கள் செலவழிச்சாலே... மாசம் ரெண்டாயிரம் ரூபாய் நிச்சயம். இதுக்கு மேலயும் தீவிரமா இறங்கினா... ரெண்டாயிரம் பல ஆயிரமா மாறும்!'' என்றார் நம்பிக்கை பார்வையை வீசியபடி!

- சா.வடிவரசு  

படங்கள்: ப.சரவணகுமார்

தினமும் 15 நிமிஷம்... மாதம் 2 ஆயிரம்!

''கேளுங்கள்... கற்றுத்தருகிறோம்!''

கிராமப்புற பெண்களுக்கு இந்தத் திட்டத்தைக் கொண்டு செல்வது பற்றி பேசிய லயோலா கல்லூரியின் பூச்சியியல் துறை இயக்குநர் இஞ்ஞாசி முத்து, ''ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு கிராமமாகச் சென்று, பெண்கள் சுயஉதவிக் குழுவினரை சந்தித்து, தொழிலைக் கற்றுக்கொடுக்கிறோம். இதற்காக எங்கள் கல்லூரியைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் நாட்டுத்துரை, மெல்வின் உள்ளிட்டவர்களை நியமித்துள்ளோம்.

இதன் மூலமாக கிராமத்துப் பெண்கள் பயன்பெறுவதோடு, இயற்கை உரத்தால் நிலம் கெடாமல் பாதுகாக்க வழிவகை செய்துவருகிறோம். இதுவரை 1500-க்கும் மேற்பட்ட பெண்கள், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டுமே பயன்பெற்றுள்ளனர். கூடிய விரைவில் மற்றபகுதி பெண்களிடமும் எடுத்துச்சொல்லி, அவர்களையும் பயன்பெற வைக்க இருக்கிறோம். இந்தத் திட்டத்தை முழுக்க முழுக்க சேவையாக மட்டுமே செய்கிறோம்!'' என்றவர்,

''மண்புழு உரம் தயாரிக்க வீட்டிலோ அல்லது நிலத்திலோ நிழல் படர்ந்த இடம் அவசியம். அந்த இடம், தண்ணீர் அதிகம் இல்லாத இடமாக இருக்கவேண்டும். சொந்தமாக மாடு வைத்திருந்து, அதன் சாணத்தை இதற்குப் பயன்படுத்துவது நல்லது. இப்படிப்பட்ட சூழல் அமைந்த நிலையில், பெண்கள் எங்களை அணுகினால், நேரடியாகச் சென்று கற்றுக்கொடுப்பதுடன், இந்தத் தொழிலுக்குத் தேவையான தொட்டி, மண்புழு போன்றவற்றையும் வழங்க தயாராக இருக்கிறோம்'' என்றும் சொன்னார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism