Published:Updated:

மிரட்டும் நாட்டு விலைவாசி... விரட்டும் வீட்டு நிதியமைச்சர்கள்!

ஃபேமிலி பட்ஜெட்

மிரட்டும் நாட்டு விலைவாசி... விரட்டும் வீட்டு நிதியமைச்சர்கள்!

ஃபேமிலி பட்ஜெட்

Published:Updated:
##~##

 'ஓர் இந்தியக் குடிமகனிடம், ஒருநாள் தேவைக்கு 28 ரூபாய் இருந்தால் போதும், அவன் ஏழையல்ல' என்று அருமையான கண்டுபிடிப்பை முன் வைத்திருக்கிறது மத்திய அரசு. ஆனால், இங்கே... ஒரு நாள் தேவைக்கு 2,800 ரூபாய் இருந்தால்கூட போதாது என்கிற அளவுக்கு நிலைமை கைமீறிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

ஒரு கிலோ வெங்காயம் 60 ரூபாய், ஒரு கிலோ அவரை 40 ரூபாய், ஒரு கிலோ பூண்டு 120 ரூபாய், சினிமா டிக்கெட் 120 ரூபாய், சமையல் எண்ணெய் கிலோ 120 ரூபாய், பருப்பு கிலோ 90 ரூபாய், ஒரு இட்லி 13 ரூபாய் என்று தினம் தினம் எகிறுகின்றது விலைவாசி. இதில் பெட்ரோல் விலை... காலையில் ஒரு லிட்டர் 70 ரூபாய் என்றால், மாலையில் 75 ரூபாய் எனும் அளவுக்கு இஷ்டம்போல உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாதாரண ஏழைப் பெண்ணாக இருந்தாலும் சரி, மாட மாளிகையில் குடியிருக்கும் பணக்காரப் பெண்ணாக இருந்தாலும் சரி... இந்தப் பெண்கள் போடும் பட்ஜெட்டில்தான் சமாளிப்புகளோடு குடும்ப வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்கு, நாட்டின் பட்ஜெட்டை போடும் நிதியமைச்சரிடம் எந்த ஆயுதமும் இல்லாத நிலையில், வீட்டு நிதியமைச்சர்களான இல்லத்தரசிகளிடம் உபாயம் கேட்டோம். ஏழை, நடுத்தர வருவாய், உயர் நடுத்தர வருவாய், உயர்வருவாய் என ஒவ்வொரு வகைப் பிரிவிலிருந்தும் ஒவ்வொருவர் இங்கே பேசுகிறார்கள்...

மிரட்டும் நாட்டு விலைவாசி... விரட்டும் வீட்டு நிதியமைச்சர்கள்!

கட்சிக்காரங்க மீட்டிங் வெச்சாதான் கறி சோறு!

லில்லி புஷ்பம் - தஞ்சாவூர்: ''எங்க வூட்டுக்காரர் ரோடு போடுற வேலை பாக்குறார். மாசத்துல 5,000 ரூபாய் கண்ணுல பாத்தாவே அதிசயம். மழைக்காலம் வந்தா வேலை இருக்காது. மூணு புள்ளைங்களும் பள்ளிக்கூடத்துலயே சத்துணவு சாப்பிடுறாங்க. ரேஷன் அரிசி வாங்கிதான் பொங்குறோம். ஆனா, அதுவே மூணு வேளைக்கும் பத்தாது. புள்ளைகளுக்கு மட்டும் போட்டுட்டு, நாங்க ரெண்டு வேளை பட்டினி கெடப்போம்.

கடைக்குப் போயி வெங்காயத்தை தொட்டுப் பாத்துட்டு திரும்பி வந்துடறேன். காய் வாங்கி சமைச்சே ரொம்ப நாள் ஆகுது. வெறும் கார கொழம்பு, தண்ணி சோறுதான். யாராவது கட்சிக்காரங்க மீட்டிங் வெச்சா கறி, மீனு வாங்கித் தருவாங்க.

புள்ளைகளுக்கு திடீர்னு ஏதாவது அவசர செலவு வந்தாலோ... வூட்டுக்காரர் வேலை இல்லாம இருந்தாலோ... வேற வழியில்லாம தண்டலுக்கு கடன் வாங்கி பொழப்ப தள்ளறோம். அசலைவிட வட்டி அதிகமா கட்ட வேண்டியிருக்கும். கடன் கொடுத்தவர் வாய்க்கு வந்தபடி திட்ட, 'ஒரு மாசம் பொறுங்க’னு கால்ல விழாத கொறையா கெஞ்சுவோம்'' என்று கண்ணீரை கசிய வைத்தவர், ''பெட்ரோல் பங்கை இந்த கெவருமெண்ட் மூடுதோ இல்லையோ, டாஸ்மாக் கடையை முதல்ல மூடணும்'' என்று எதார்த்தம் சொன்னார்.

ரெண்டு வேளை காம்ப்ளான்... இப்ப ஒருவேளைதான்!

சங்கீதா - மதுரை: ''மாசம் இருபதாயிரம் வருமானம் வந்தாலும் பத்தலைனுதான் சொல்லுவேன். எங்களுக்கு ரெண்டு பசங்க. பட்ஜெட் போட்டுதான் குடும்பத்தை ஓட்டுறேன். வீட்டு வாடகை, கரன்ட் பில், மளிகைச் சாமான், பால், மருந்து செலவுனு கணக்குப் பண்ணிதான் செலவு பண்ணுவோம். இப்ப விலைவாசி அதிகமானதால நிறைய செலவுகளைக் குறைச்சுட்டேன். எந்த காய் சத்தானதுனு வாங்கின காலம் போய், இப்போ எந்த காய் விலை கம்மியா இருக்குனு பார்த்து வாங்க வேண்டியிருக்கு. இதுல எங்கிருந்து நல்ல சாப்பாடு சாப்பிடறது?

முந்தியெல்லாம் பசங்க பொறந்த நாள், கல்யாண நாள், பொங்கல், தீபாவளினு துணி எடுப்போம். இப்ப ஆடித்தள்ளுபடியிலயே முடிச்சுடறோம். பசங்களுக்கு ரெண்டு வேளையும் காம்ப்ளான் வாங்கிக் கொடுத்துட்டு இருந்தேன். இப்ப ஒருவேளைதான். ஒரு ஃபேர்னஸ் கிரீம் வாங்கலாம்னு நினைச்சாகூட, அந்தக் காசுக்கு குழந்தைக்கு பால் வாங்கலாமேனு திரும்பிடறேன்!''

மிரட்டும் நாட்டு விலைவாசி... விரட்டும் வீட்டு நிதியமைச்சர்கள்!

இருக்குற சேமிப்புகளை பாதுகாப்பா வெச்சுக்கிட்டா போதும்!

லதா - தேனி: ''நான் ஸ்கூல் கரஸ்பாண்டன்ட். என் கணவர் பிஸினஸ்மேன். இந்த விலைவாசி உயர்வு எங்களையும் விட்டு வைக்கல. காய்கறி விலை ஏறிட்டே போறதால... வீட்டுலயே மாடித்தோட்டம் போட்டு காய்கறி பயிர் செய்றோம். கரன்ட் பில்லை குறைக்கறதுல கவனமா இருக்கேன். அடிக்கடி கார்ல பயணம் போறதை தவிர்த்துட்டேன். ரொம்ப தூர பயணம்னா மட்டும்தான் கார். உள்ளூருக்குள்ள பைக், பக்கத்து கடைகளுக்கு நடைதான். பசங்க தேவையை நிறைவேத்தறதுக்காக அடுத்து ஏதாவது பிஸினஸ் ஸ்டார்ட் பண்ணலாமானு ஐடியா இருக்கு. இன்னிக்கு சூழலுக்கு சேமிப்பு பத்தியெல்லாம் யோசிக்கவே முடியல. ஏற்கனவே இருக்குற சேமிப்புகளை பாதுகாப்பா வெச்சுக்கிட்டா போதும்னு இருக்கு.''

விமானப் பயணங்களை குறைச்சுட்டோம்!

உமா - குரோம்பேட்டை, சென்னை: ''கணவர் மும்பையில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஆடிட்டரா இருக்கார். அதனால் அவரைப் பார்க்க நானும்... என்னைப் பார்க்க அவரும் அடிக்கடி மும்பைக்கும் சென்னைக்குமா பயணப்பட்டுட்டே இருப்போம். இப்போ விமானப் பயணங்கள், கார் பயணங்களைக் குறைச்சுட்டோம். அடிக்கடி ஃபாரின் டூர் போறதையும் விட்டுட்டோம். என்னால கட்டுப்படுத்த முடியாத விஷயம், பவர் சேவிங். அதனால இப்ப சோலார் சிஸ்டம் போடலாம்னு யோசிட்டு இருக்கேன். முன்ன எல்லாம் ஷாப்பிங்னு கிளம்பினா, கண்ணுல பார்க்குறதை எல்லாம் வாங்குவேன். இப்போ என்னென்ன வேணும்னு வீட்டுலயே லிஸ்ட் போட்டு எடுத்துட்டுப் போய், அதை மட்டும் வாங்கிட்டு வந்துடறேன்.

கார் லோன், ஹவுசிங் லோன் எல்லாம் கேட்டவுடனேயே வாரி வாரி வழங்கிடறாங்க. அதனால எல்லாருமே தேவையில்லாத கடன் சுமைக்கு ஆளாகிடறாங்க. எனக்குக்கூட பி.எம்.டபிள்யூ கார் வாங்க ஐடியா இருந்துச்சு. விலைவாசி ஏற்றம்... கார் விலையிலகூட கைய வைக்க, செகண்ட் ஆப்ஷனா ஸ்கோடா புக் பண்ணப் போனேன். இப்ப அதுவும் வேணாம், இருக்கற காரே போதும்னு முடிவு பண்ணிட்டேன்.''

என்ன... வீட்டு நிதியமைச்சர்கள் சூப்பராகத்தானே திட்டமிடுகிறார்கள்!

- பொன்.விமலா

படங்கள்: கே.குணசீலன், பா.காளிமுத்து, வீ.சக்தி அருணகிரி

மிரட்டும் நாட்டு விலைவாசி... விரட்டும் வீட்டு நிதியமைச்சர்கள்!

விலைவாசி உயர்வை எப்படி சமாளிக்கலாம்?

சென்னையைச் சேர்ந்த முதலீட்டு ஆலோசகர் சித்ரா நாகப்பன் தரும் யோசனைகள்...

''கிரெடிட் கார்டு பயன்படுத்துவதைத் தவிருங்கள். டெபிட் கார்டு இருந்தாலும், முடிந்தவரை பணமாகவே செலவு செய்யுங்கள். அப்போதுதான் கையிலிருந்து பணம் கரைவது கண்கூடாகத் தெரியும். சீஸன் இல்லாத (ஆஃப் சீஸன்) சமயங்களில் பொருட்களை வாங்கும்போது, விலை குறைவாக இருக்கும். வாரம் ஒரு தடவை ரெஸ்டாரன்ட் என்பதை, மாதம் ஒருமுறை என மாற்றுங்கள். ஆண்கள்... புகையிலை, மதுபான செலவுகளையும், பெண்கள் தேவையில்லாத ஷாப்பிங் மற்றும் செல்போன் பயன்பாடுகளையும் குறைக்கலாம். ஷாப்பிங்/ஆன்லைன் ஷாப்பிங்கில் தேவையில்லாத பொருட்களை வாங்கிக் குவிக்காதீர்கள்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism