Published:Updated:

பரம ஏழைக்கும், இனி ஃபாரின் படிப்பு!

எஜுகேஷன்

பரம ஏழைக்கும், இனி ஃபாரின் படிப்பு!

எஜுகேஷன்

Published:Updated:
##~##

''நம்ம வசதிக்கு... ஃபாரின் காலேஜுக்கெல்லாமா பிள்ளைங்கள அனுப்பி படிக்க வைக்க முடியும்? ஏதோ பக்கத்துல இருக்கிற கவர்மென்ட் காலேஜுக்குதான் அனுப்பமுடியும்''

- நடுத்தர வர்க்க பெற்றோர்கள் பலரும், தங்கள் பிள்ளைகளின் படிப்பு சம்பந்தமான பேச்சு வரும்போது இப்படி புலம்புவது உண்டு. இந்நிலையில், ''முயற்சித்தால் உங்கள் பிள்ளைகளும் வெளிநாட்டில் உயர் கல்வியை மேற்கொள்ள முடியும். முழுச் செலவையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும்'' என்றபடி இந்த ஆண்டு முதல் புதியதொரு வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறது தமிழக அரசு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரசுக் கல்லூரிகளில் முதுகலை பயில்பவர்கள், ஐந்து கட்ட தேர்வுகளை முடித்தால்... லண்டன் சென்று பயிலும் வாய்ப்பை, இந்த ஆண்டிலிருந்து தொடங்கிஇருக்கிறது உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் 'உயர்கல்வி மன்றம்’. இதற்கென, தமிழ்நாடு முழுவதும் இருந்து அரசுக் கல்லூரி மாணவிகள் 13 பேர், மாணவர்கள் 7 பேர் என மொத்தம் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கூடவே 5 ஆசிரியர்களுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களில்... திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அரசுக் கலைக்கல்லூரி இரண்டாம் ஆண்டு முதுகலை கணிதவியல் மாணவி ஆர்.வனிதாமணி மற்றும் சென்னை பிரெசிடென்ஸி கல்லூரி இரண்டாம் ஆண்டு  எம்.எஸ்சி கணிதத்துறை மாணவி ஜெனிஷா ஆகியோரும் அடக்கம்.

பரம ஏழைக்கும், இனி ஃபாரின் படிப்பு!

இதைப் பற்றி பேசிய உடுமலைப்பேட்டை அரசுக் கலைக் கல்லூரியின் முதல்வர், முனைவர் அன்பழகன், ''அரசுக் கல்லூரிகளில் படிக்கும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணாக்கர்களும் உலகத்தரம் வாய்ந்த உயர் கல்வியை பெற்று, திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் தொடங்கப்பட்டிருக்கும் திட்டம்தான்... 'வெளிநாட்டில் கல்வி’ (Study abroad programme). மாணவர்கள், ஒரு செமஸ்டர் கல்வியை அங்கு பயிலலாம். ஒவ்வொருவருக்கும் ஆகும் 15 லட்ச ரூபாய் செலவுத் தொகையை அரசே ஏற்றுக்கொள்கிறது.

உயர்கல்வி மன்றம் மற்றும் தென்னிந்திய பிரிட்டிஷ் கவுன்சில் இணைந்து, கடந்த ஆண்டு தமிழக முதல்வர் முன்னிலையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. லண்டனில் உள்ள எட்ஜ் ஹில் (Edge Hill), நாட்டிங்ஹாம் (Nottingham), ராயல் ஹாலோவே (Royal Holloway) மற்றும் பர்மிங்ஹாம் (Birmingham) ஆகிய நான்கு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கவும், பயிற்சி மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பயணச்சீட்டையும் அனுமதி

பரம ஏழைக்கும், இனி ஃபாரின் படிப்பு!

கடிதத்தையும் தமிழக முதல்வர் நேரில் அழைத்து வாழ்த்துக்கள் சொல்லிக் கொடுத்தார். எங்கள் கல்லூரிக்கு பெருமை சேர்த்த வனிதாமணியை நானும் வாழ்த்துகிறேன்!'' என்றார்

லண்டன் செல்லும் ஆயத்தப்பணிகளில் இருந்த வனிதாமணியை, பல்லடம் அடுத்துள்ள சின்னவடுகபாளையம் கிராமத்தில் சந்தித்தபோது...

''அப்பாவும் அம்மாவும் பவர்லூம் ஃபேக்டரியில் தினக்கூலி வேலை பார்க்கறாங்க. தம்பி வீரவேல், பொறியியல் கல்லூரியில படிக்கிறான். சின்ன வயசுல இருந்தே எனக்கு கணக்குப் பாடம் நல்லா வரும். அதனாலதான் உடுமை அரசுக் கல்லூரியில எம்.எஸ்சி சேர்ந்தேன். இந்த நிலையில, 'அரசுக் கல்லூரி மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்கலாம், முழு செலவையும் அரசே ஏற்கும்' அப்படிங்கற தகவலை, நோட்டீஸ் போர்டில் பார்த்துட்டு பதிவு செய்தேன்.

தமிழ்நாடு முழுக்க இருந்து நிறைய பேர் விண்ணப்பிச்சுருந்தாங்க. தகுதித் தேர்வு, முதல் கட்டத் தேர்வு இப்படி ஐந்து கட்டமா தேர்வுகள் நடத்தினாங்க. ஆங்கிலம் மற்றும் நுண்ணறிவை சோதிக்கற தேர்வுகளும் உண்டு. இறுதியா 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டோம். பிரிட்டிஷ் கவுன்சில் நடத்திய இன்னொரு தேர்வுல நான் நல்ல மதிப்பெண்கள் பெற்றதால... ராயல் ஹாலோவே பல்கலைக்கழகத்தில் ஒரு செமஸ்டர் படிக்கறதுக்கும் எனக்கு வாய்ப்புக் கிடைச்சுருக்கு. சிறந்த கணிதவியல் விஞ்ஞானி ஆகணும்ங்கிறதுதான் என் லட்சியம். இதை நிறைவேத்தறது மூலமா பெற்றோர், கல்லூரி மற்றும் தமிழக அரசுக்கு பெருமை தேடித் தருவேன்'' என்று ஆர்வம் பொங்கச் சொன்னார்.

பரம ஏழைக்கும், இனி ஃபாரின் படிப்பு!

''நான் விரும்பிய, நம்பர் தியரி கிரிப்டோகிராபி போன்ற பாடங்களை புதிய சூழ்நிலையில் வெளிநாட்டில் படிக்கப் போவதை நினைத்தாலே உற்சாகமாக இருக்கிறது'' என்று கண்களில் பல கனவுகளோடு ஆரம்பித்த சென்னை மாணவி ஜெனிஷா,

''சிட்டியில் உள்ள பல்வேறு மால்களுக்கும் எங்களை அழைத்துச் சென்று, லண்டன் குளிரைத் தாக்குப்பிடிக்கும் குளிர்கால உடைகள், ஷூ போன்ற அனைத்துத் தேவைகளையும் அரசே செய்து தந்ததில் மிக்க மகிழ்ச்சி. ப்ளஸ் டூ-வில் நான் நல்ல மதிப்பெண்கள் எடுத்தேன். என்றாலும், தேங்காய் கடையில் வேலை பார்க்கும் என் அப்பாவால் பெரிய படிப்பெல்லாம் படிக்க வைக்க முடியாத சூழல். அதனால்தான் அரசுக் கல்லூரியில் சேர்ந்தேன். இங்கு படித்ததால் இன்று எனக்கு இந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது. கல்லூரிக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்!'' என்றார் நன்றி பெருக்குடன்.

பிரஸிடென்ஸி கல்லூரி முதல்வர், டாக்டர் எம்.மொகமத் இப்ராஹிம், ''இதற்கு, ஆங்கிலத்தில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும். இதற்காகவே, இனி மாணவர்களுக்கு இந்தத் தேர்வுக்கென சிறப்பு ஆங்கில மொழித்திறன் பயிற்சிகள் வழங்கப்படும். அது எங்கள் கல்லூரியில் இருந்து இன்னும் பல ஜெனிஷாக்கள் உருவாக வாய்ப்பாக அமையும்!'' என்று  சொன்னார்.

எட்டாக்கனியாக இருக்கும் வெளிநாட்டுக் கல்வியை, எளிய குடும்பத்து மாணவர்களுக்கும் சாத்தியமாக்கிஇருக்கும் தமிழக அரசின் உயர்கல்வி மன்றத்துக்கு ஒரு சல்யூட்!

- ஜி.பழனிச்சாமி, ஞா.சுதாகர், அ.பார்வதி

படங்கள்: ப.சரவணகுமார், ர.சதானந்த்

பரம ஏழைக்கும், இனி ஃபாரின் படிப்பு!

ஃபாலோ - அப்

சாகச செயலுக்காக 2012-ம் ஆண்டின் 'கல்பனா சாவ்லா’ விருதை தமிழக முதல்வரிடமிருந்து பெற்றிருக்கிறார் கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தாலுகா, வட்ட வழங்கல் அலுவலர் (டி.எஸ்.ஓ) சுகி பிரேமலா. இதைப் பற்றி, 'துணிச்சலையும் பலத்தையும் கொடுப்பது என் குடும்பம்தான்' என்ற தலைப்பில், கடந்த இதழில் எழுதியிருந்தோம்.

விருதுடன் 5 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசையும் பெற்ற சுகி பிரேமலா, தன்னுடன் பணியாற்றும் வருவாய் அலுவலர் ஜோதிஸ் குமார் மற்றும் டிரைவர் ஜான் பிரைட் ஆகியோருடன் சுகி பகிர்ந்துகொள்கிறார் என்று எழுதியிருந்தோம். சொன்னபடியே தற்போது தலா ஒரு லட்ச ரூபாயை இருவருக்கும் கொடுத்திருக்கிறார் சுகி பிரேமலா.

இதைப் பற்றி பேசும் ஜான் பிரைட், ''பெரிய மனசோட இதை அவங்க செய்திருக்காங்க. சுகி மேடம் ரொம்ப நேர்மையானவர், பொறுப்புஉணர்வோடு வேலை செய்றவர். லஞ்சம்னு எதையுமே வாங்காதவர். ஒரு பொண்ணா... அவ்ளோ தைரியத்தோட களத்துல அவங்க வர்றப்ப பிரமிப்பா இருக்கும். எங்களுக்கும் வேலையில உற்சாகம் பிறக்கும். 'இதுவரைக்கும் எனக்கு நல்லா உதவி செய்துட்டு வர்றீங்க. தொடர்ந்து இதேமாதிரி வேலைகளை சரியா செய்யணும்'னு சொல்லி, ஒரு லட்ச ரூபாயைக் கொடுத்தாங்க'' என்று சொல்கிறார்.

உணவுப் பொருள் கடத்தல் தடுப்பில் சுகி பிரேமலாவுக்கு உதவியாக இருப்பதால், இவருக்கும் கடத்தல்காரர்களிடமிருந்து தூற்றல்கள், மிரட்டல்கள் எல்லாமும் உண்டு.

''என்னிக்கு இருந்தாலும் போறதுதானே... எப்போ போனா என்ன? அது, கொடுத்த வேலையை சரியா செஞ்சுட்டு போகட்டுமே!'' என்று அதைப்பற்றி சர்வசாதாரணமாகச் சொல்கிறார் இந்த முன்னாள் ராணுவ வீரர்.

மற்றொருவரான ஜோதிஸ்குமார், விடுமுறையில் சென்றுவிட்டதால், அவரிடம் பேச இயலவில்லை.

- தே.ஆக்னெஸ் ஃப்ரீடா

படம்: ரா.ராம்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism