Published:Updated:

நிமிர வைத்த நர்ஸரி பிஸினஸ்!

சிறுதொழில் சிறப்பிதழ்

நிமிர வைத்த நர்ஸரி பிஸினஸ்!

சிறுதொழில் சிறப்பிதழ்

Published:Updated:
##~##

 ''சின்ன வயசுல இருந்தே செடி வளர்க்கறது ரொம்பப் பிடிக்கும். நமக்குப் பிடிக்கிற விஷயத்தையே தொழிலா எடுத்துச் செய்யும் போது, 50 பர்சன்ட் வெற்றி ஆரம்பத்துலயே உறுதிப்பட்டுடும்னு சொல்வாங்க. அந்த நம்பிக்கையில்தான் நானும் 'நர்ஸரி’ தொழில்ல இறங்கினேன். பதினோரு வருஷமா வெற்றிகரமா போயிட்டிருக்கு...''

- புன்னகையுடன் அறிமுகம் பேசுகிறார், சென்னை, சாலிகிராமம், சித்ரா மோகன்குமார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தஞ்சாவூரைச் சேர்ந்த எம்.ஏ, பி.எட் பட்டதாரியான சித்ரா, திருமணத்துக்குப் பிறகு சென்னைவாசி. ஏதாவது ஒரு தொழில் தேடலில் இருந்தவர், மசாலா பொடி வகைகளைத் தயாரித்து விற்பனை செய்திருக்கிறார். பிறகு, சித்ராவுக் குள் இருக்கும் செடி வளர்க்கும் ஆர்வத்தை ஏற்கெனவே கவனித் திருந்த கணவர், ''உனக்குதான் செடிகள்னா உயிராச்சே.. மனசுக்குப் பிடிச்சு செய்ற எந்த விஷயமும் நிச்சயம் வெற்றியைக் தரும்'' என்று ஐடியா கொடுக்க... 'நர்ஸரி’ தொழிலில் கால் பதித் திருக்கிறார் சித்ரா!

''விதைகள், செடிகள், உரம் தயாரிப்பதற்கான வழிமுறைகள்னு தேடிப்பிடிச்சு கத்துக்கிட்டேன். ஒவ்வொரு விதையை விதைக்கறப்பவும்... செடிகளை வளர்க்கறப்பவும்... நிறைய விஷயங்களை செயல்முறையாவும் புரிஞ்சுக்கிட்டேன். பிறகு, 'ஈகோ பிளான்ட்ஸ்’ங்கற பேர்ல நர்ஸரியை ஆரம்பிச்சேன். செர்ரி, மினி ஆரஞ்சு, இலந்தை, மாதுளைனு ஏராளமான பழவகை செடிகள்; பிரண்டை, கற்பூரவல்லி, வல்லாரை, துளசி, பெரியாநங்கை, சிறியாநங்கை (உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டுவர உதவுகிறது) மூலிகைச் செடிகள்; கத்திரிக்காய், காலிஃப்ளவர், கேரட், முட்டைகோஸ், பீட்ரூட் போன்ற காய்கறி விதைகள்னு விற்பனை செய்ய ஆரம்பிச்சுட்டேன்'' என்று ஆச்சர்யப்படுத்தும் சித்ரா, வசிப்பது வாடகை வீட்டில். வீட்டு வாயில் தொடங்கி... மாடிப்படிகள் வரை செடிகளும், பூக்களும் நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றன.

நிமிர வைத்த நர்ஸரி பிஸினஸ்!

''ஏற்கெனவே செய்த மசாலா பொடி வியாபாரத்தில் பழக்கமான பெண்களை அணுகினேன். பலன் கிடைச்சுது. அதோட, நட்பு வட்டாரமும் கை கொடுத்துச்சு. ஒரு கட்டத்தில், 'செடிகள் நிறைய வகையில... தரத்தோட கிடைக்குது’னு என் வாடிக்கையாளர்களே வாய்மொழி விளம்பரம் பண்ண, கூட்டம் பெருகிடுச்சு. இதுல எனக்கு பெரிய உதவியா இருக்குறது, எங்க வீட்டு ஓனர் மங்கலம் அண்ணிதான். மாமியாருக்கும் இதுல ஈடுபாடுங்கறதால, அவங்களோட அக்கறையும் என் தொழில் வளர்ச்சிக்கு உதவுது'' என்றவர்,

''இப்போ எங்கிட்ட 10 ரூபாயில் இருந்து 3,000 ரூபாய் வரை வேறுபட்ட விலைகளில் விதவிதமான செடிகள் இருக்கு. சிலர் ஆசையா வாங்கிட்டுப் போனாலும், வளர்க்கும் முறை தெரியாம கருக விட்டுடுவாங்க. தண்ணீர் வெளியேற தொட்டியின் கீழே துளையிடணும், செடிகளை சூரியஒளி படும் வகையில் வைக்கணும், அப்பப்ப கிளைகளை டிரிம் செய்யணும். இப்படி அடிப்படை விஷயங்களை என் நர்ஸரியில் செடி வாங்க வர்றவங்களுக்கு விளக்கிட்டு, அப்புறமாதான் தொட்டியையே கையில கொடுப்பேன்'' என்றவர், பூச்சிவிரட்டி மற்றும் உரத் தயாரிப்பு பற்றியும் டிப்ஸ்கள் தந்தார்.

நிமிர வைத்த நர்ஸரி பிஸினஸ்!

''செம்பருத்தி, ஆண்டு முழுக்க பூத்துக் குலுங்கக் கூடிய அற்புதமான செடி. ஆனா, அந்தப் பூவுக்கு முதல் எதிரி, மாவுப்பூச்சி. இதை விரட்டறதுக்கு வேப்பிலைச் சாறு தெளிக்கலாம். உரம் தயாரிக்க பழத்தோல், வெங்காயத் தோல், காய்கறிக் கழிவுகள்னு ஒரு சின்ன தொட்டியில் போட்டு வைக்கணும். அதோட சாணத்தையும் மணலையும் சேர்க்கணும். இந்த கலவையை வாரத்துக்கு ஒரு தடை கிளறி விடணும். மூணு மாசத்துல செடிகளுக்கு சத்தான உரம் தயார். கொசு, ஈக்கள் மொய்க்காம இருக்க, வேப்பிலைச் சாறைத் தெளிக்கலாம்'' என்று அடுக்கியவர், சுயதொழில் செய்துவரும் மகளிரை ஊக்குவிக்கும் விதத்தில் கடந்த ஆண்டு சென்னை, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடந்த தொழில்முனைவோர் பயிற்சி முகாமில் இவர் சமர்ப்பித்த நர்ஸரி  புராஜெக்ட் இரண்டாவது பரிசு பெற்றிருக்கிறது.

நிறைவாக பேசிய சித்ரா, ''ஆயிரம் ரூபாய் கையிலிருந்தால்கூட இந்தத் தொழிலில் கால் பதிக்கலாம். ஆனா, குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாயோட ஆரம்பிக்கறதுதான் நல்லது. அதுக்காக ஆரம்பத்துலயே அதிகப்படியான முதலீட்டையும் இதுல குவிச்சுடக் கூடாது. இது சீஸனைப் பொறுத்து நல்லபடியா போகும். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாசத்துல நல்லாவே போகும். மாசம் 10 ஆயிரம் ரூபாயில இருந்து முதலீட்டைப் பொறுத்து லாபம் கிடைக்கும்'' என்றார் கணக்கு வழக்குகளைப் போட்டுப் பார்த்தபடி!

- வே.கிருஷ்ணவேணி

படங்கள்: அபிநயா சங்கர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism