வாருங்கள்... வழிகாட்டுகிறோம்! பிஸினஸ் கேள்வி பதில் ஹெல்ப் லைன்
##~## |
சுயதொழில் தொடங்க ஆர்வம் கொண்ட பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்கள் கேள்விகளாக கேட்க... அதற்கு தெளிவான பதில்களைப் பெற்றுத் தரும் பகுதி இது. இங்கே உங்கள் கேள்விகளுக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், தொழில் முனைவோர் சுய வேலை மேம்பாட்டு நிறுவனத்தின் திட்ட மேலாளர் சி. ராமசாமி தேசாய் பதில் அளிக்கிறார்.
''சித்த மருத்துவரான (B.S.M.S., MD (s)) நான், சென்னையில் கிளினிக்குடன், மருந்தகத்தையும் நடத்துகிறேன். தொழிலை விரிவுபடுத்த வங்கி லோன் தேவைப்படுகிறது. அத்துடன் சில மருந்துகளின் மூலப்பொருட்களை (அமுக்கரா, பரங்கிப்பட்டை போன்றவை) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது பற்றியும், இயற்கை முறை உணவுகள் (ராகி உப்புமா, தினை பொங்கல், சாமை தோசை) வியாபாரம் செய்வது குறித்தும் விளக்கவும்...''
- மரு.இ.பொன்மலர், சென்னை-59
சித்த மருத்துவம் என்பது இந்திய மருத்துவத் துறையின் கீழ் வருகிறது. மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் (Health and Family Welfare) கீழ், 'ஆயுஷ்’ (Ayush) என்கிற அமைப்பு இருக்கிறது. இது, ஆயுர்வேதம் (Ayuerveda), யோகா மற்றும் இயற்கை வைத்தியம் (Yoga with Naturopathy), யுனானி (Unani), சித்த வைத்தியம் (Siddha) மற்றும் ஹோமியோபதி (Homeopathy) ஆகிய ஐந்து மருத்துவ முறைகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்கிறது.
மேற்குறிப்பிட்ட மருத்துவ முறைகளின்படி இயங்கும் மருத்துவக் கல்லூரிகள், மருந்து ஆராய்ச்சிகள், கல்வி மேம்பாடு; கல்லூரிகள், ஆராய்ச்சி மையங்களின் அங்கீகாரம் மற்றும் வளர்ச்சி; மருந்துகளின் தரக்கட்டுப்பாடு, தரநிர்ணயம், அதன் மேம்பாடு; மருந்துகளுக்குத் தேவை யான மூலிகை வகைகள் கிடைக்க உதவி செய்தல்; மருந் துவ சேவைகளை பற்றிய விழிப்பு உணர்வு மற்றும் வழி காட்டல்; உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இந்திய மருத் துவம் பற்றிய பிரசாரம்; ஆரம்ப சுகாதார நிலையம், கம்யூ னிட்டி சுகாதார நிலையம், ஆயுஷ் மருத்துவமனைகள் போன்றவற்றை அமைக்க மானிய உதவிகள் என்று பலவற்றையும் இந்த அமைப்பு செய்கிறது. இதைப் பற்றிஎல்லாம் இந்திய மருத்துவத்தின் (www.indianmedicine.nic.in) வலைதளத்தில், ஆயுஷ் பக்கத்தில் விவரங்களைப் பெறலாம்.

'ஆயுஷ் மெடிக்கல் அசோஸியேஷன்' என்கிற அமைப்பு இந்தியா முழுவதும் இயங்கி வருகிறது. இதில் உறுப்பினராக விரும்புபவர்கள், ரூபாய் 500 வருட சந்தா, அல்லது ரூபாய் 2,000 ஆயுள் சந்தா செலுத்தி, தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். அவர்கள், இந்திய மருத்துவ முறைகள் மற்றும் அவை தொடர்பான வழிகாட்டல் பற்றிய புத்தகத்தை மாதம்தோறும் உங்களுக்கு அனுப்புவார்கள். அத்துடன் மருத்துவத் துறையில் உள்ள அனைத்து உதவிகளையும் இந்த அமைப்பிடம் கேட்டுப் பெறலாம்.
கிளினிக் அமைக்க சில வங்கிகள் மெடிக்கல் ப்ளஸ் திட்டத்தை வைத்துள்ளன. அவர்களிடம் நிதி உதவி பெறலாம். மேலும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகமும் (TIIC) சிறப்புத் திட்டம் வைத்துள்ளது.
சில மூலப்பொருட்கள் இயற்கையாக கிடைப்பவை. எனவே, தாங்கள் ஏற்றுமதி செய்ய விரும்பும் பொருட்களை வரிசைப்படுத்தி எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அவை எந்த தலைப்பின் கீழ் வருகின்றன என பார்க்க வேண்டும். சில விவசாயம் சார்ந்ததாக இருக்கும். சில மசாலா (Spice) வகையாக இருக்கலாம் சில வன (Forest) பொருட்களாக இருக்கலாம். அவற்றையெல்லாம் கண்டறிந்து ஸ்பைஸ் போர்டு, விவசாய பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி நிறுவனம் (APEDA), அரக்கு மற்றும் வனப்பொருட்கள் ஏற்றுமதி உதவி நிறுவனம் என உரிய நிறுவனங்களை அணுகி, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்பான அனைத்து விவரங்களையும் பெற முடியும்.
இயற்கை உணவுகள் வியாபாரம் பற்றியும் கேட்டுள்ளீர்கள். இயற்கை உணவு என்பது (Natural Food) எந்தவிதமான ரசாயன உரம் மற்றும் ரசாயன பூச்சிக்கொல்லிகள் உபயோகிக்காமல்... இயற்கை உரம் மற்றும் இயற்கையான பூச்சிவிரட்டிகளை உபயோகித்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் தயாராகக்கூடிய உணவுகளாகும். இதில், அரிசி, தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் என அனைத்தும் அடங்கும். இப்படிப்பட்ட விளைபொருட்ளை விற்பனை செய்யும் இயற்கை அங்காடிகள் பல இடங்களிலும் சிறப்பாக செயல்படுகின்றன. இவர்களுக்கு பல ஊர்களில் உள்ள இயற்கை உணவு பொருட்கள் விற்பனை அங்காடிகளுடன் தொடர்புகள் இருக்கும். இத்தகைய மையங்களையும் கடைகளையும் கண்டறிந்து, அவர்கள் மூலமாக விற்பனை செய்தால், நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.''
வெற்றிக் கோட்டை தொடுவதற்கு நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி... 'வாருங்கள்... வழிகாட்டுகிறோம்’, கேள்வி - பதில் பகுதி, அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002