Published:Updated:

உஷார்... உஷார்...

'மெட்ராஸ் ஐ'யோ..!

உஷார்... உஷார்...

'மெட்ராஸ் ஐ'யோ..!

Published:Updated:
உஷார்... உஷார்...

மதராசப்பட்டினம் மெட்ராஸாகி, சென்னையாகிவிட்டது! ஆனால், 'மெட்ராஸ் ஐ’ மட்டும் அதே பெயருடன் வருடந்தோறும் அட்டண்டென்ஸ் போட்டுவிடுகிறது. இப்போது, மெட்ராஸ்-ஐ சீஸன்!

மக்களிடம் வெகுவாக பரவிக் கொண்டுஇருக்கும் 'மெட்ராஸ் ஐ’ பற்றிய குழப்பங்கள் தீர்த்து, தேவையான விளக்கங்கள் தந்தார் சேலம், அகர்வால் கண் மருத்துவமனையின் மூத்த கண் மருத்துவ நிபுணர் டாக்டர் டி.தேவானந்தன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எங்களிடம் வரும் பேஷன்ட்டுகள் பெரும்பாலானவர் களின் கேள்வி... 'மெட்ராஸ் போனா மெட்ராஸ் ஐ வந்துடுமா டாக்டர்..?’ என்பதுதான்...'' என்று சிரித்துக்கொண்டே ஆரம்பித்தவர்,

'' 'இந்தியாவின் முதல் கண் மருத்துவமனை’ என்ற பெருமையைக் கொண்டது, சென்னை எக்மோரில் இருக்கிற அரசு கண் மருத்துவமனை. அங்கேதான் முதன் முதலாக, கண்களில் 'அடினோ வைரஸ்' அல்லது பாக்டீரியா தாக்குதலால் ஏற்படுகின்ற தொற்றைக் கண்டுபிடித்து, அதற்கு 'பிங்க் ஐ’ அல்லது 'ரெட் ஐ’ என்று பெயரிட்டார்கள். இந்தக் கண்டுபிடிப்பு மெட்ராஸில் நடந்ததால் 'மெட்ராஸ் ஐ’ என்றும் பிரபலமாகிவிட்டது!'' என்று பெயர்க் காரணம் விளக்கிய டாக்டர்... அறிகுறிகள், தீவிரம் பற்றித் தொடர்ந்தார்.

''விழியின் வெள்ளைப் படலத்தில் நோய் தொற்று ஏற்படுவதால் விழிகள் சிவந்து வலி ஏற்படுவதோடு, கண்களிலிருந்து நீரும், அழுக்கும் தொடர்ந்து வெளியேறிக் கொண்டே இருக்கும். மேல் இமையும், கீழ் இமையும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளும். அதிகமான வெளிச்சத்தைப் பார்க்க முடியாதபடி கண்கள் கூசும். இதன் தொடர்ச்சியாக சிலருக்கு காய்ச்சல், இருமல், சளி போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம். எந்த வயதினரும் இந்த நோயினால் பாதிப்புக்கு உள்ளாகலாம். மழை மற்றும் குளிர் காலத்தில்தான் தண்ணீர் மூலமாக இது அதிகமாக பரவ ஆரம்பிக்கும்'' என்ற டாக்டர், இந்த நோய் பரவ வாய்ப்புள்ள வழிகளை விளக்கினார்.

'' 'மெட்ராஸ் ஐ’ வந்த ஒருவரை கண்ணுக்கு கண்ணாக பார்ப்பவர்களுக்கும் அந்த நோய் பரவும் என்பது மூடநம்பிக்கையேயன்றி, உண்மையில்லை. பொதுவாகவே, அழுகிற ஒருவரைப் பார்க்கும் நமக்கும் கண்கள் கலங்கும் என்பது சைக்காலஜிக்கல் உண்மை. அப்படித்தான் சிவந்த கண்களைப் பார்க்கும்போது நமக்கும் கண்களுக் குள் குறுகுறுவென ஒரு உணர்வு ஏற்படக்கூடும். மற்றபடி, 'மெட்ராஸ் ஐ’யால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி கைகளால் கண்களைக் கசக்கிவிட்டு, அதே கையால் மற்றவர்களுடன் கை குலுக்கும்போதும்... வீடு, ஆபீஸில் ரிமோட், ஃபைல், டெலிபோன் ரிஸீவர், கர்ச்சீஃப், டவல் என்று பாதிக்கப்பட்டவர்கள் தொடும் பொருட்களை மற்றவர்களும் தொடுவது, உபயோகிப்பது போன்ற சந்தர்ப்பங்களிலும் தொற்று ஏற்படலாம். தொண்டையும் பாதிப்பும் உள்ளவர்கள், வெளியிடங்களில் இருமும்போது, அந்தக் கிருமிகள் எதிரில் இருப்பவரின் கண்களைத் தாக்கலாம்'' என்றவர்,

''நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கண் வலி தாங்காமல் அதிகமாக கண்களைக் கசக்க, கண்களில் உள்ள மெல்லிய ரத்த நாளங்கள் நசுக்கப்பட்டு ரத்தம் கசியக்கூட வாய்ப்பிருக்கிறது. மருத்துவர்களின் ஆலோசனையுடன் சொட்டு மருந்தைப் பயன்படுத்தினாலே போதும். குடும்பத்தில் இருவருக்கு நோய்த் தொற்று இருந்து, ஒரே மாதிரியான மருந்து பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், தனித்தனியாக மருந்து வாங்கித்தான் பயன்படுத்த வேண்டும். தொற்று உள்ள ஒருவரின் கைபட்ட மருந்தை மற்றவர் பயன்படுத்தினால் தொற்று தீவிரமாகும்.

உஷார்... உஷார்...

டி.வி. பார்ப்பது, புத்தகம் படிப்பது என்று கண்களை மேலும் சிரமப்படுத்தாமல் ஓய்வு கொடுக்கலாம். பொதுவாக ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை இதன் பாதிப்பு இருக்கலாம். எனவே, ஏழு நாட்களுக்கு மற்றவர்களுடன் அதிக தொடர்பில்லாமல் தனியாக இருப்பது, அவருக்கும் மற்றவர்களுக்கும் நல்லது!'' என்று அக்கறையோடு அறிவுறுத்தி முடித்தார் டாக்டர் தேவானந்தன்.

படங்கள் எம்.விஜயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism