
##~## |
சேலம்... வாசவி மஹால், 'அவள் விகடன்' வாசகிகள் கூட்டம் நிறைந்து இருந்தாலோ என்னவோ... நவம்பர் 21-ம் தேதியன்று மிகவும் அழகுக் கூடிப்போய் இருந்தது. அவள் விகடன்-சன் ஃபீஸ்ட் நிறுவனம் இணைந்து நடத்தும் அசத்தல் பெண்கள் நிகழ்ச்சியில் பங்குபெற, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்துகொண்டே வரிசையில் நின்று வாசகிகள் பதிவு செய்துகொண்டது, அவர்களுடைய 'மகிழ்ச்சி’யின் உச்சகட்டம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தொகுப்பாளர் சுமதி ராஜகோபால் 'மியூஸிக்கல் சேர் போட்டி’ என அறிவித்ததுமே, 'மைனா’க்களைப் போல் பறந்தோடி சேர்களைப் பிடிக்க வாசகிகள் அலை மோதியது ரணகளம்!
பதினெட்டுலிருந்து அறுபதையும் தாண்டி 'எந்திரன்’ வேகத்தில் வாசகிகள் அட்டகாசமாக ஸ்கிப்பிங் செய்ய, பார்வையாளர்களிடம் 'மந்திரப் புன்னகை’!
'' 'நகர(ம்)’ வாழ்க்கை, தந்த பரிசாக உடல் சம்பந்தமான பிரச்னைகள் படுத்தியெடுக்கிறதே...'' என ஒரு வாசகி தன் வேதனையை சொல்ல, 'யோகா செய்து உடலையும் மனதையும் எப்படி அழகாக ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்' என வழிகாட்டினார் வளர்மதி.
'உணவே மருந்து; மருந்தே உணவு’ என வாசகிகளின் அனைத்து சந்தேகங்களுக்கும் பொறுமையாகப் பதிலளித்து புரியவைத்தார் 'டயட்டீஷியன்' சங்கீதா. ''காலை சாப்பாட்டை மிஸ் பண்ணாதீங்க. அதுதான் பிரச்னையின் ஆரம்பம்’' என்று அவர் சொன்னபோது அது உண்மைதான் என பல வாசகிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டது பலருக்கும் அனுபவக் 'காவலன்’!

வயதை தூக்கி எறிந்துவிட்டு உற்சாகத்தை மட்டும் விளையாட விட்டார்கள் வாசகிகள். அதனால்தான் பால் டேப்பிங், அந்தாக்ஷரி, மெட்டுக்கு நடனம் போன்ற போட்டிகளின் 'ஆடுகளம்’ என்பதாக இருந்தது அந்த அரங்கம். போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசு வழங்கினர் சன்ஃபீஸ்ட் நிறுவனத்தைச் சேர்ந்த விஜயராஜ் மற்றும் கிருஷ்ண பிரசாந்த்.
நிகழ்ச்சி நடைபெற்றது... திருக்கார்த்திகை தினத்தன்றுதான். நிகழ்ச்சி முடிவடைந்து வாசகிகள் அரங்கை விட்டு வெளியேறியபோது அவர்கள் மனமும் நிறைந்திருந்ததால், முகம் கார்த்திகை தீபங்களாகப் பிரகாசித்தது.
அதுதானே வேண்டும் நமக்கு!