Published:Updated:

தங்க வீராங்கனை

தங்க வீராங்கனை

தங்க வீராங்கனை

தங்க வீராங்கனை

Published:Updated:

'கபடி... கபடி... கபடி...’ எனப் பாடி, சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 'கில்லி'யாக இந்தியாவுக்கு தங்கக் கோப்பையை தட்டி வந்துள்ளார் சென்னைப் பெண் கவிதா!

தங்க வீராங்கனை
 ##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு மழைநாளில் சென்னை, ஆவடியில் உள்ள அவரது வீட்டில் அந்த வீராங்கனையைச் சந்தித்தோம். ''இந்த முறைதான் 'ஏஷியன் கேம்ஸ்’ல பெண்கள் கபடி போட்டியை சேர்த்தாங்க. முதல் முறையே இந்தியாவுக்கு கோப்பையை வாங்கி கொடுத்திருக்கற எங்க சூப்பர் டீம்ல, நானும் ஒரு பிளேயர்ங்கறது என் பாக்கியம்!'' என்று பரவச வார்த்தைகளில் ஆரம்பித்தார் கவிதா.

''நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னையிலதான். எங்க வீட்டுல அஞ்சு பொண்ணுங்க. நான்தான் கடைக்குட்டி. அப்பாவுக்கு பல்லவன் டிரான்ஸ்போர்ட்ல வேலை. ஆவடியில இருக்கற 'இமாகுலேட் ஹார்ட் ஆஃப் மேரி' கேர்ள்ஸ் ஹையர் செகண்டரி ஸ்கூல்ல படிச்சேன். என்னோட இந்த எல்லா வெற்றிகளுக்கும் அடிப்படை, என் ஸ்கூல்தான். கபடி விளையாட்டோட, 'நீ கண்டிப்பா இதுல உயரம் தொடுவே’னு ஊக்கத்தையும் நிரப்பி நிரப்பி என்னை வார்த்தெடுத்தாங்க.

எட்டாவது படிச்சப்போ முதல் முதலா இன்டர் ஸ்கூல் டோர்னமென்ட்டுக்கு ஸ்கூல் மூலமா அனுப்பினாங்க. அதுல எங்க டீம்தான் ஜெயிச்சுது. அந்தத் தடவை நான்தான் 'பெஸ்ட் பிளேயர்’. அதுவரைக்கும் ஒரு ஆர்வத்துல விளையாடிட்டிருந்த எனக்கு, அப்புறம்தான் பொறுப்போட விளையாடற பக்குவம் வந்தது. தினமும் பயிற்சி எடுத்தேன். அதுக்குப் பலனா, எங்க ஸ்கூல் டீம் கலந்துக்கற டோர்னமென்ட்கள்ல எல்லாம் நாங்கதான் வின்னர். நான்தான் 'பெஸ்ட் பிளேயர்’!'' எனும் கவிதாவுக்கு கண்கள் மின்னுகின்றன பூரிப்பில்!

''ஆனா... எங்கம்மாவோ, 'பொம்பளப் புள்ளைக்கு கபடி விளையாட்டுஎல்லாம் வேணாம்’னு பதறினாங்க. என் டீச்சர்ஸ் எல்லாம், 'உங்க பொண்ணு எதிர்காலத்துல கபடியில பெரிய ஆளா வருவா’னு எடுத்துச் சொல்லவே, அரை மனசா அனுமதி கொடுத்தாங்க. பத்தாவது படிச்சப்போ, நேஷனல் லெவல் டீம் செலக்ஷனுக்காக, தமிழ்நாட்டுல தேர்வான பன்னிரண்டு பேர் டீம்ல நானும் ஒருத்தி!

நேஷனல் லெவல் போட்டிக்காக குஜராத் போகணும். வாழ்க்கையில முதல் முறையா வெளி மாநிலம் போய் விளையாடறதுக்கான வாய்ப்பு. ஆனா, கிளம்பறதுக்கு முதல் நாள்... எதிர்பாராத விதமா அம்மாவுக்கு நெஞ்சுவலி. ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணினோம். 'நீ வர்றதுக்குள்ள எனக்கு ஏதாச்சும் ஆயிட்டா..? நீ எங்கயும் போக வேண்டாம்’னு சொல்லிட்டாங்க அம்மா. அதுக்கு அப்புறம், 'போட்டியும் வேணாம்... ஒண்ணும் வேணாம்’ங்கற முடிவுக்கு நானும் வந்துட்டேன். ஆனா, எங்க ஸ்கூல் டீச்சர்ஸ்தான் எங்கள கன்வின்ஸ் பண்ணி, குஜராத்துக்கு அனுப்பி வெச்சாங்க..!'' என்பவருக்கு குரல் லேசாக மெலிய, தொடர்ந்தார்.

'

தங்க வீராங்கனை

'அந்தப் போட்டியில நாங்க ஜெயிக்கல. 'என்னென்ன தவறுகள் பண்ணினோம்’ங்கற சுய பரிசீலனையோட நான் திரும்பி வந்தா, 'எம்பொண்ணு குஜராத்துக்கு விளையாட போயிட்டு வந்திருக்கா!’னு ஆஸ்பிட்டல்ல எல்லார்கிட்டயும் பெருமையா பேசிட்டு இருக்காங்க எங்கம்மா. 'நான்தான் உன்னோட திறமை தெரியாம இருந்துட்டேன். நீ கபடியில பெரிய ஆளா வரணும்'னு ஆசீர்வதிச்ச எங்கம்மா, பத்து நாள்ல இறந்துட்டாங்க!'' என்று உடைந்து அழுதவர், தன்னைத் தேற்றித் தொடர்ந்தார்.

''என் காதுல ஒலிச்சுட்டே இருந்த அம்மாவோட வார்த்தைகள், என் வைராக்கியத்தை இன்னும் கூட்ட, தொடர்ந்து வெற்றிகளை குவிச்சேன். ப்ளஸ் டூ முடிச்சு... சென்னை, காயிதே மில்லத் கல்லூரியில சேர்ந்தப்போ, மாவட்ட, மாநில அளவுல பல பரிசுகளை வாங்கிக் கொடுத்த சந்தோஷமும், பெருமையும் இப்பவும் எனக்கு உண்டு. ஃபைனல் இயர் படிக்கும்போதே கான்ஸ்டபிள் வேலைக்கு விண்ணப்பிச்சு, படிப்பு முடிச்ச கையோட கான்ஸ்டபிளா வேலையில சேர்ந்துட்டேன்!'' எனும் கவிதாவுக்கு அவரின் வேலையும், தொடர்ந்து கபடிக்கான களத்தை அமைத்துக் கொடுக்கத் தவறவில்லை.

''எங்க டிபார்ட்மென்ட் கபடி டீம்லயும் நான்தான் ஸ்டார் பிளேயர். உலக அரங்குல இந்தியாவுக்காக விளையாடற 'இந்தியா கேம்ப்’ டீம்ல நானும் ஒருத்தியா செலக்ட் ஆனேன். 2007-ல 'செகண்ட் ஏஷியன் சாம்பியன்ஷிப்’ போட்டியில இந்தியன் கபடி டீமுக்கு, நான் வைஸ் கேப்டன். இரான் தலைநகர் டெஹ்ரான்ல நடந்த அந்தப் போட்டியில தங்கக் கோப்பையைத் தட்டிட்டு வந்தோம். 2008-ல மதுரையில நடந்த 'தேர்ட் ஏஷியன் சேம்பியன்ஷிப்’ போட்டியில இந்தியன் கபடி டீமுக்கு நான் கேப்டன். பதினோரு உலக நாடுகள் கலந்துகிட்ட அந்தப் போட்டியிலயும் தங்கம் நமக்குத்தான்! 2009-ல டாக்காவுல நடந்த 'சவுத் ஏஷியன் கேம்ஸ்’லயும் தங்கம் வாங்கிட்டு வந்தோம்!'' என்றவர், சமீபத்திய ஹிட்...  'ஆசிய விளையாட்டுப் போட்டிகள்’ பற்றித் தொடர்ந்தார்...

''இதுவரைக்கும் ஆண்கள் கபடி குழுக்கள் மட்டுமே விளையாடிட்டு இருந்த 'ஆசிய விளையாட்டுப் போட்டி கள்’ல, முதல் முறையா பெண்கள் கபடி குழுக்களையும் இந்தத் தடவை அனுமதிக்க, 'கண்டிப்பா நாம ஜெயிப்போம்!’னு முழு நம்பிக்கையோட தயாரானோம். இரான், தாய்லாந்து, மலேசியா, சீனா, கொரியா, இந்தியானு மொத்தம் ஆறு நாடுகளுக்கு இடையே போட்டி. ஏற்கெனவே இந்தியாவுல இருந்த கபடி கோச் நிறையபேர், இப்ப வெளிநாட்டு டீம்களுக்கு 'கோச்’ ஆயிட்டாங்க. அதனால, நம்மளோட டெக்னிக்ஸ் எல்லாம் அந்த நாட்டு பிளேயர்ஸுக்கும் அத்துப்படி ஆகிடுச்சு. அதோட... இந்தியன் டீம், 'வின்னர் டீம்’ங்கறதால, நாங்க விளையாடறபோது வீடியோ எடுத்து, எங்க டெக்னிக்ஸை தெரிஞ்சுக்கிட்டு, அவங்களும் ஃபாலோ பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. அதனால, நாங்க சுதாரிச்சு எங்க டெக்னிக்ஸை மாத்திக்கிட்டோம். செமி ஃபைனல்ஸ் இரான்கூட விளையாடினப்போ, 45 நிமிஷம் வரைக்கும் 17-17னு ரெண்டு டீமும் டிராவுலயே நின்னு, இறுதியா ஒரு பாயின்ட் அடிச்சு நாங்க ஜெயிச்சோம். ஃபைனல்ல டஃப் ஃபைட். அதுலதான் தாய்லாந்தை ஜெயிச்சோம்.

இந்தத் தடவை ஏஷியன் கேம்ஸோட பதக்கப்பட்டியல்ல... தொடர்ந்து எட்டாவது இடத்துல இருந்த இந்தியா... கடைசி நாள்ல நாங்களும், ஆண்கள் கபடி டீமும் அடிச்ச தங்கத்தின் மூலமா... ஆறாவது இடத்துக்கு வந்துச்சு. அதுல எங்களுக்கெல்லாம் அவ்வளவு பெருமை! பரிசு வாங்கிட்டு இந்தியக் கொடியைப் பிடிச்சுட்டு கிரவுண்ட்ல நாங்க ஓடின அந்த சந்தோஷ தருணம், இன்னும் கண்ணுக்குள்ளயே நிக்குது!'' எனும் இந்த இருபத்தி ஆறு வயது கபடிப் பெண், இனி வரும் நாட்களில் இளம் கபடி வீராங்கனை களுக்கு பயிற்சி அளிக்கும் முயற்சி களில் இறங்கியுள்ளார்!

''கோல்ட் மெடல் வின்னர்ஸை எல்லாம் பிரதமர் பார்ட்டிக்கு கூப்பிட்டிருக்கார். கிளம்பிட்டே இருக்கேன்!'' எனும் கவிதாவின் கண்களில் அத்தனை மகிழ்ச்சி!

தங்க மங்கை பிரிஜா!

தங்க வீராங்கனை

சீனாவில் நடந்து முடிந்திருக்கும் ஆசிய விளையாட்டு போட்டிகளில், பத்தாயிரம் மீட்டர் தடகளப் போட்டியில் பிரிஜா தங்கப் பதக்கத்தை தட்டியபோது நம் நாடே ஆரவாரித்தது. அவரது சொந்த மாநிலமான கேரளா, இன்னும் அதிகமாக!

ஆனால், இன்றைக்கு இத்தனை பிரகாசமாகியிருக்கும் பிரிஜாவின் பால்ய பருவம், அத்தனை பரிதாபத்துக்குரியது. எட்டு வயது சிறுமியாக இருந்தபோது அப்பா இறந்துவிட, அக்கம் பக்கத்தில் வீட்டு வேலை செய்து பிள்ளைகளை வளர்த்திருக்கிறார் பிரிஜாவின் அம்மா ரெமணி. வளர்ந்த பின் தச்சுவேலை செய்து குடும்ப பாரத்தை தன் தோளிலும் தாங்கிக் கொண்டிருக்கிறார் பிரிஜாவின் அண்ணன் பிரதீப். வறுமைக்கு வாக்கப்பட்ட அந்தக் குடும்பத்தின் ஒரே ஆறுதல்... நம்பிக்கை... எல்லாமும் பிரிஜாவின் திறமைதான். பயிற்சியாளர் மாத்யூ, கூடுதல் கவனம் கொடுத்து படிகள் ஏற்றிவிட, இன்று சிகரம் தொட்டிருக்கிறார் பிரிஜா!

''அது எனக்கு ரொம்பவே ஆசீர்வதிக்கப்பட்ட நாள். ஸ்டார்டிங் பாயின்ட் பக்கமா நின்னு சில நொடிகள் கண்களை மூடி வார்ம்-அப் பண்ணிட்டிருந்தப்போ, என் குடும்பத்தோட நினைவுகள் என்னைக் கடந்து போச்சு. ரயில்வேயில எனக்குக் கிடைச்சிருக்கிற வேலை எங்களோட பணப் பிரச்னைக்கு ஒரு வடிகாலா அமைஞ்சிருக்குதுதான். ஆனா, எங்க குடும்பத்தோட இத்தனை வருட போராட்டமே என்னோட சாதனையை எதிர்நோக்கியதுதானே?! அதனால ஒவ்வொரு மைக்ரோ செகண்டையும் என்னோட கட்டுப்பாட்டுக்குள்ள வெச்சுக்கிட்டு ஓடினேன். முதல் ஆளா வந்து தங்க பதக்கத்துக்காக தலை குனிஞ்சப்ப, மனசுக்குள்ள ஆத்மார்த்தமா என்னோட குடும்பத்தையும், கோச்சையும்தான் நினைச்சுக்கிட்டேன்.

ஐந்தாயிரம் மீட்டர் ஓட்டத்துலயும் சிறப்பா செயல்படணும்னுதான் முயற்சி பண்ணினேன். ஆனா, வெள்ளிப் பதக்கம்தான் கிடைச்சுது. எல்லாம் நன்மைக்கேனு நினைச்சுட்டு, அடுத்ததா ஒலிம்பிக்கை குறி வைக்க ஆரம்பிச்சிருக்கேன்!''

- பிரிஜாவின் வார்த்தைகள் வலுவேறி இருந்தன!

பழங்குடி பதக்க சாதனை!

தங்க வீராங்கனை

கிணற்றில் நீர் இறைப்பது, காடுகளில் சுள்ளி பொறுக்குவது என இருக்கும் சாதாரண கிராமத்து பெண்களால் பதக்கங்களையும் வெல்ல முடியும் என்று சாதித்துக் காட்டியிருக்கிறார் கவிதா ரவுத். மகாராஷ்டிரா மாநிலத்தின், நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடி பெண்ணான கவிதா ராவுத், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பத்தாயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வென்ற கேரளத்து பிரிஜாவைப் பின் தொடர்ந்து வந்து, இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுத் தந்திருப்பவர். அதேபோல, ஐயாயிரம் மீட்டர் ஒட்டத்தில் வெள்ளி வென்ற பிரிஜாவைப் பின்தொடர்ந்து வெண்கலத்தையும் வென்றிருக்கிறார் இந்த கவிதா ரவுத்.

''போட்டிகளை முடித்து கிராமத்துக்குத் திரும்பியவுடன், என் மகள் மிக சாதாரண பெண்ணாகி வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டு செய்ய ஆரம்பித்துவிடுவாள். குறிப்பாக, முதல் வேலையாக எங்கள் வீட்டு மாட்டுத் தொழுவத்தைதான் சுத்தம் செய்வாள். 'ஏன்மா கஷ்டப்படற...’ என்றால், 'இந்த கிராமத்து வேலைகள் எல்லாம்தான் எனக்கு விளையாடுவதற்கான உடல் வலுவைக் கொடுத்திருக்கிறது...’ என்பாள்'' என்று உச்சிமுகர்கிறார் அம்மா!

''ஒன்பது வருடங்களுக்கு முன் என்னைக் கண்டறிந்த என் பயிற்சியாளர் விஜேயந்தர்சிங், கடந்த ஐந்து வருடங்களாக எங்களுக்குப் பயிற்சியாளராக இருக்கும் ரஷ்யாவை சேர்ந்த மேடம் நிகோலைவ் இருவருக்கும் நன்றிகள். 'ஒட்டப் போட்டிகளில் நாம் கொடுக்கும் உழைப்பின் களைப்பை, அதற்காக கிடைக்கும் பரிசுகள் ஈடுகட்டிவிடும்’ எனக் கூறி என்னை உற்சாகப்படுத்திய பயிற்சியாளர்களின் வார்த்தைகளை இப்போது பூரணமாக உணர்கிறேன்!'' என்கிறார் இருபத்தி ஐந்து வயதான இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரம் கவிதா ரவுத் நெகிழ்ச்சியோட

நீ நதி போல ஓடிக் கொண்டிரு!

தங்க வீராங்கனை

பெற்றெடுத்த அம்மாவின் இறுதிக் காலத்தில் ஓடியோடி அவரைக் கவனிக்கும் மகளை, கங்கை நதிக்கு ஒப்பிட்டு முடித்தது... 'நதி போல ஓடிக் கொண்டிரு’ தொடருக்கே பெருமை சேர்த்தது.

- ஸ்ரீதேவிராஜன், திருவிடைமருதூர்

பதினெட்டு இதழ்களாக தோழி போல தோள் மீது கை போட்டுப் பழகிய உணர்வைத் தந்து கொண்டிருந்த தொடரை, தாயின் பெருமை பேசி முடித்தது அருமை. அதேவேளையில், அவருடைய தாயின் பிரிவு எங்கள் இதயத்தை கனக்கச் செய்து விட்டது. பாரதி பாஸ்கருக்கு ஆறுதல் கூற வார்த்தைகளைத் தேடுகிறேன்.

- நீ.மட்டுவார்குழலி, பிச்சாண்டார் கோவில்

'மிகவும் பயனுள்ள தொடர் முடியப் போகிறதே' என்ற வேதனையில் நாங்கள் இருக்க... தொடரை முடிக்கும் வேளையில் தாயாரின் இழப்பால் தாங்கொண்ணா வேதனை பாரதி பாஸ்கரைச் சூழ்ந்தது கொடுமை. வாசகிகளின் ஆழ்ந்த அனுதாபங்கள்.

- பங்கஜம் பரமேஸ்வரன், சென்னை-40

 இனி எல்லாம் சுகப்பிரசவமே!

தங்க வீராங்கனை

தாய்மையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு 'அவள்’ அட்வான்ஸ் விஷஸ் சொல்லி அருமையான 'கைடு’ ஒன்றை பரிசாக தந்தது போல் இருந்தது. பராம்பரி யத்தை மட்டுமல்லாமல், உண்மையான மகிழ்ச்சி, தாய்மையின் மகிமை, பொக்கிஷமாக பராமரித்தல் என பல்வேறு விஷயங்களை அழகாக அலசி எளிமையாக புரியும் விதத்தில் சொன்னது சூப்பர்!

- ஆதிரை வேணுகோபால், சென்னை-94

குழந்தைக்கு எந்த நேரத்தில் எப்படி, எவ்விதத்தில் பால் புகட்டுவது, அது எவ்விதத்தில் குழந்தைக்கு சுகத்தையும், ஆரோக்கியத்தையும் தரும் என்பதை எல்லாம் அழகாக, தத்ரூபமாக விவரித்தற்கு ரேகா சுதர்சனுக்குப் பாராட்டுக்கள்.

- தவமணி கோவிந்தசாமி, திண்டிவனம்

'இவங்க மட்டும் 25 வருஷத்துக்கு முன்ன இப்படியரு தொடரை தந்திருந்தா... எங்க வாழ்க்கை விளங்கியிருக்குமே’ என்று பல தாய்மார்களை புலம்பச் செய்துவிட்டது.

- இரா.சந்திரிகா, குன்னூர்

 

 படங்கள்: கே.ராஜசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism