Published:Updated:

நான் வளர்கிறேனே மம்மீ...

ஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்அம்மாக்கள் செய்ய வேண்டியது என்ன?அவேர்னஸ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

கூட்டுக் குடும்பமாக இருந்தவரை குழந்தை வளர்ப்பு என்பது அத்தனை சிரமமாக இல்லை. ஆனால், இன்றைய நியூக்ளியர் ஃபேமிலிகளில், குழந்தையை வளர்க்கத் தெரியாமல் திணறும் அம்மாக்கள்தான் அநேகம். குறிப்பாக, மூன்று முதல் ஒன்பது வயது வரை. இந்த முக்கியமான தருணத்தில் குழந்தை வளர்ப்பில் கவனம் கொடுக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் பற்றிச் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த குழந்தை மனநல மருத்துவர் பி.பி.கண்ணன்.

1 'காலையில எழுந்திருக்கவே மாட்டேங்குறான்...’ என்பது பல அம்மாக்களின் புகார். குழந்தையின் தூக்கத்தில் ஓர் ஒழுங்கை கொண்டு வந்தால் மட்டுமே அவர்கள் உறங்கும், எழும் நேரம் சரியாக இருக்கும். இரவு எட்டு மணிக்கெல்லாம் டி.வி, செல்போன், வீடியோ கேம்களுக்கு 'டாட்டா’ சொல்லிவிட்டு, அதிகபட்சம் ஒன்பது மணிக்குள் குழந்தையை உறங்க வைத்துவிட வேண்டும். குழந்தைகள் உறங்கும் அறை நிசப்தமாக இருக்க வேண்டும். குறைந்தது எட்டு மணி நேர ஆழ்ந்த உறக்கம் அவசியம். இதையெல்லாம் நீங்கள் சாத்தியப்படுத்திக் கொடுத்தால், காலையில் எழுவது அவர்களுக்கு சிரமமாக இருக்காது.

நான் வளர்கிறேனே மம்மீ...

2 மதியம் தூங்குகிற குழந்தையாக இருந்தால், மதிய வேளையில் இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை மட்டுமே அவர்களை தூங்கவிடுங்கள். அதிக நேரம் தூங்கினால், இரவுத் தூக்கம் தாமதமாகும், சங்கிலித் தொடராக காலை எழுவதும் சிரமமாகும்.

3 பள்ளி செல்லும் குழந்தைகள், 'அவ தினமும் விதவிதமா சாப்பாடு கொண்டு வர்றா’, 'என் ஃப்ரெண்ட் வீட்டுல கார் இருக்காம்’ என்று, மற்றவர்களைப் பார்த்து தனக்கும் அது வேண்டும் என்று கேட்பது இயல்பே. 'அது அவங்க வீட்டோட சூழல், இது நம்ம வீட்டோட சூழல்’ என்று அந்த வேறுபாடுகளையும், வாழ்க் கையின் யதார்த்தத்தையும் அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியில், ஏற்றுக்கொள்ளும் வகையில் பேசுங்கள்.

4  பெரும்பாலான குழந்தைகள் காலையில் எழுந்ததும் பல் துலக்க, குளிக்க அடம்பிடிப்பார்கள். நீங்கள் எழுந்திருக்கும்போதே குழந்தையையும் எழுப்பி அவர்கள் முன் பல் துலக்குங்கள். அவர்களையும் அப்படிச் செய்ய பழக்குங்கள். நீங்களும் காலையிலேயே குளித்துவிடுங்கள். குழந்தைகள் பார்த்துக் கற்றுக்கொள்வதுதான் அதிகம். பழக் கங்கள்தான் பண்பாடாக மாறும் என் பதை நினைவில் வையுங்கள்.

5 குழந்தைகளுக்குப் படிக்கப் பிடிக்கவில்லை என்றால், அவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்கும் முறையிலும் குறை இருக்கலாம் என்று அர்த்தம். எனவே கதை வடிவம், பட வடிவம், விடுகதை வடிவம் என்று படிப்பை சுவாரசியமாக்கி அவர்களுக்குப் பழக்குங்கள்.

6 'வீட்டுப் பாடம் செய்யவே மாட்டேங்கிறா...’ என்பது பல அம்மாக்கள் சொல்லும் புகார். அட்டவணை போட்டு, இந்தப் பிரச்னையைத் தீர்க்கலாம். அதாவது, பள்ளி விட்டு வந்ததும்... சாப்பிட இவ்வளவு நேரம், விளையாட இவ்வளவு நேரம், படிக்க இவ்வளவு நேரம், டி.வி பார்க்க இவ்வளவு நேரம் என்று பிரித்துக் கொடுங்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் அடம் செய்தாலும் விடாமல் பழக்கினால், ஒரே மாதத்தில் குழந்தை இந்த அட்டவணைக்குப் பழகிவிடும்.

7  'எப்பப் பார்த்தாலும் டி.வி பார்த்துட்டே இருக்கான். அந்த நேரத்துல நாம பேசுறது கூட அவன் காதுல விழறதில்ல...’ - இந்த புலம்பல் உங்கள் வீட்டிலும் உண்டா..? நிச்சயமாக அதை மாற்றித்தான் ஆக வேண்டும். குழந்தையின் பெரும்பாலான பொழுதுகளைத் திருடிக்கொள்வது இந்த டி.வி-தான். அது எந்த விதத்திலும் நன்மை கிடையாது. எனவே, ஒரு நாளில் அரை மணி நேரம் மட்டுமே டி.வி பார்க்க வேண்டும் என்பதை, கண்டிப்புடன் நிறைவேற்றுங்கள். சேனலை லாக் செய்வது, மெயின் ஸ்விட்சை ஆஃப் செய்வது, கேபிளை டிஸ்கனெக்ட் செய்வது என்று, டி.வி அடிமைத்தனத்தில் இருந்து அவர்களை மீட்க முயலுங்கள்.

நான் வளர்கிறேனே மம்மீ...

8. ரைம்ஸ், மேத்ஸ், லேங்குவேஜ் என சி.டி-க்களை வாங்கிக் கொடுத்து குழந்தைகளை புத்திசாலியாக்க நினைப்பது தவறான அணுகுமுறை. பதிவு செய்யப்பட்ட அந்த ஒலி, ஒளி நாடாவில் இருந்து ஒவ்வொரு முறையும் புதிதாக எந்த ஒரு விஷயத்தையும் குழந்தை கற்றுக்கொள்ள முடியாது. மாறாக, புத்தகங்களுக்கு அவர்களை நண்பர்களாக்குங்கள். அதற்காக மூன்று வயது குழந்தைக்கு ஐன்ஸ்டீன் புத்தகம் வேண்டாம். கலரிங் புத்தகங்கள், சொற்புதிர்கள், கணக்கு விளையாட்டுக்கள், நீதிபோதனைக் கதைகள் என்று அவரவர்களின் வயதுக்கேற்ப அறிமுகப்படுத்துங்கள் புத்தகங்களை.

9  பெரியவர்களுக்குத் தர வேண்டிய மரியாதை பற்றி இன்று பெரும்பாலான குழந்தைகளுக்குத் தெரிவதில்லை. இதை சரிசெய்ய, குழந்தைக்கு உறவுகளையும், அவர்களுக்கான முக்கியத்துவத்தையும் எடுத்துச் சொல்லி, அவர்களுக்குத் தர வேண்டிய மரியாதையை உணர்த்துங்கள். வீட்டில் இருப்பவர்கள் ஒருவரிடம் ஒருவர் காட்டும் மரியாதை, குழந்தை அதை தானே கற்றுக்கொள்ள வழிவகுக்கும். மாறாக உங்கள் அம்மாவை, 'உனக்கு என்ன தெரியும்..?’ என்று நீங்கள் அதட்டினால், தன் பாட்டியை அதுவும் அதட்டவே செய்யும்!

10 கையெழுத்து என்பது இந்தப் பருவத்தில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய விஷயம். மூன்றாம் வகுப்புக்குள் அவர்களின் கையெழுத்தை சீர் செய்ய அவசியமானவற்றை செய்ய வேண்டும். தினமும் வீட்டில் நான்கு கோடிட்ட நோட்டில் எழுத வையுங்கள். அல்லது ஹேண்ட் ரைட்டிங் கிளாஸ் கூட அனுப்புங்கள். குழந்தையின் கையெழுத்தை சீர்படுத்த பணம் செலவழித்தல் தகும் என்பதை நினைவில் வையுங்கள்.

11 இப்போதுள்ள குழந்தைகளுக்கு ஓடி, ஆடி விளையாடுவது என்பதற்கான சாத்தியங்களே இல்லை. ஆனால், குழந்தையின் சீரான உடல், மன வளர்ச்சிக்கு மைதான விளையாட்டுகள் மிக மிக முக்கியம். குழு விளையாட்டு, யோகா என்று குழந்தைகளின் உடலுக்குத் தேவைப்படும் இயக்கத்தை அவர்களுக்குக் கொடுக்கத் தவறாதீர்கள்.

12 குழந்தையின் நட்பு வட்டம் மிக முக்கியம். சரியான நண்பர்கள், தோழிகளுடன் சேரும்போதுதான் உங்கள் குழந்தையின் எண்ணமும், தரமும் உயரும். எனவே, பள்ளி செல்ல அடம் செய்யும் குழந்தைகள், பிடிவாத, மூர்க்க குழந்தைகளுடன் நட்பாகி உங்கள் குழந்தையும் அதை பிரதிபலிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

- ம.பிரியதர்ஷினி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு