Published:Updated:

கேபிள் கலாட்டா

தாய்க்குலங்களின் திட்டு... சந்தோஷ ஷொட்டு !

கேபிள் கலாட்டா

தாய்க்குலங்களின் திட்டு... சந்தோஷ ஷொட்டு !

Published:Updated:
கேபிள் கலாட்டா

'தங்கம்’ சீரியல்ல ஐயாவோட சின்னக் குடும்பத்து நிம்மதியைக் குழிதோண்டிப் புதைக்க கங்கணம் கட்டிட்டு உறுமற 'குலசேகரன் மாமா’வைக் கண்டிச்சு, பாராட்டினு வாசகிகள்கிட்ட இருந்து எக்கச்சக்க லெட்டர்ஸ்!

''மிஸ்டர் குலசேகரன் ப்ளீஸ்...''னு போனைப் போட்டா, ''ஷூட்டிங்லதான் இருக்கேன் வா ரீட்டா..!''னு சிரிச்சாரு ஜி.கே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஆர்ட் டைரக்டர் டு வில்லன்... எப்படி சார் இருக்கு இந்த அனுபவம்..?''னு கேட்டா, சார் முகத்துல சந்தோஷ சிரிப்பு.

''சூப்பரா போயிட்டிருக்கு ரீட்டா! 'அருணாச்சலம்’, 'படையப்பா’, 'பாபா’, 'பம்மல் கே சம்பந்தம்’, 'அவ்வை சண்முகி’, 'சிவகாசி’னு சுமார் இருநூறு படங்களுக்கு மேல ஆர்ட் டைரக்டரா வொர்க் பண்ணியிருக்கேன். ஆனா, ஸ்கிரீன் முன்னாடி முதன் முதல்ல நிக்கறது, 'தங்கம்’ சீரியல்லதான். ஆரம்பத்துல ரம்யா கிருஷ்ணன் எங்கிட்ட கேட்டப்போ, 'வெயிட்டான கேரக்டரா இருக்கு... என்னைப் போய் சூஸ் பண்றீங்களே...’னு சிரிச்சேன். ஆனா, ஆரம்ப எபிஸோட்கள்ல என்னை நானே ஸ்கிரீன்ல பார்த்தப்போ, 'அட... பயங்கரமான வில்லனா இருக்கானே இவன்...’னு பெருமைப்பட்டுக் கிட்டேன்.

தாய்க்குலங்கள்கிட்ட திட்டு வாங்கினாலும், இந்த கேரக்டர் அவங்ககிட்ட அந்தளவுக்கு ரீச் ஆகியிருக்கறதுல சந்தோஷம்தான் ரீட்டா!''னு மீசையைத் தடவிக்கிட்டே அடுத்த ஷாட்டுக்கு உறும போனாரு ஜி.கே!  

ஒரு கலைஞனின்... வில்லன் அவதாரம்!

கனவுக் 'காவிய’ம்!

கேபிள் கலாட்டா
##~##

'திருமதி செல்வம்’, 'செல்லமே’ இரண்டு சீரியல்களிலும் பரிதாபத்துக்கு உரிய கேரக்டர்கள் செய்யும் காவியவர்ஷினி அருமையான பாடகி. நிஜத்தில் பெரிய பாடகியாக வரவேண்டும் என்பதுதான் அவரின் ஆசையாம். ஆனால், முதலில் வாய்ப்பு கிடைத்ததோ... தொகுப்பாளினியாகத்தான். 'ஸ்டார்ஸ் உங்களுடன்’, 'திரை விமர்சனம்’, 'டாப் டென் மூவிஸ்’, 'ஸ்டார் சிங்கர்ஸ்’ என்று பல்வேறு சேனல்களிலும் கலக்கியவர்... கடைசியில் 'நடிப்பையும் டிரை பண்ணலாமே’ என்று சீரியல்களில் கரையேறிக் கொண்டிருக்கிறார்.

காவியவர்ஷினியின் பாடகி ஆசை, கனவாகவே காத்திருக்கிறது!

'அசத்துங்கோ...

மைடியர் சாதனா!'

'தென்றல்’, 'இதயம்' சீரியல்களில் நெகட்டிவ் ரோலில் பின்னி எடுத்துக் கொண்டிருக்கும் சாதனாவுக்கு, தான் அறிமுகமான பெரிய திரை மீதான ஈர்ப்பும் குறையவில்லை. 'மை டியர் லிசா', 'வெற்றிக்கரங்கள்' உள்பட பல தமிழ்ப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் சாதனா, மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்த படத்துக்கு விருதெல்லாம்கூட வாங்கி அசத்தியிருக்கிறார். தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் என்று சீரியல்களில் வலம் வரும்போதே... சினிமா பக்கமும் தலைகாட்டத் தயாராகி வருகிறார். மலையாளத்தில் இரண்டு படங்களுக்கு வாய்ப்பு வந்திருக்கிறதாம். ஒரு படத்தில் மீரா ஜாஸ்மினுக்கு அம்மா ரோல்!

வாசகிகள் விமர்சனம்

"விஜய் டி.வி 'நீயா... நானா?' நிகழ்ச்சியில், கணவன் மனைவி இடையே ஏற்படும் மோதல் குறித்த விவாதம்

சமீபத்தில் ஒளிபரப்பானது. அதில் பேசிய ஒரு பெண், 'உப்புமா என்றால் கட்டாயம் சட்னி இருக்க வேண்டும் என் கணவருக்கு. ஆனால், அதைச் செய்யாமலே பரிமாறி என் கோபத்தை வெளிப்படுத்தினேன்' என்றார். வேறு சில பெண்களோ, பாத்திரங்களைக் கீழே போடுவது, செல்போன்களை உடைப்பது, திரைச்சீலையைக் கிழிப்பது போன்ற செயல்கள் மூலம் கோபத்தை வெளிப்படுத்துவதாக மேடையில் பெருமையோடு சொன்னார்கள்.

வீட்டுக்குள் ஆயிரம் பிரச்னைகள் இருக்கலாம். ஆனால், அதையெல்லாம் மேடையேற்றுவதன் மூலம் மேற்கொண்டு வெறுப்பு உணர்ச்சிதான் அதிகரிக்கும் என்பதை அந்தப் பெண்கள் ஏன் உணரவில்லை. அதோடு, இதுபோன்ற நிகழ்ச்சியைப் பார்க்கும் இளம் தம்பதிகளும், 'இப்படிஎல்லாம்கூட கோபத்தை வெளிப்படுத்தலாம்' என்ற தவறான பாடத்தைக் கற்றுக் கொண்டு விடுவார்களோ என்ற அச்சமும் ஏற்படுகிறது'' என்று வேதனைப்படுகிறார் சென்னையில் இருந்து கிரிஜா நரசிம்மன். .

'ஜீ' டி.வியில் 'பவித்ர ரிஸ்தா' எனும் மெகா தொடர், ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. 'டாக்டர் எனக்கு காதுல ஏதோ கோளாறு... டன் டனா டன்' என்று விளம்பரத்தில் வரும் குழந்தைத்தனமான குண்டு நடிகர், இத்தொடரில் நடிக்கிறார். தொடருக்கு மேலும் சுவாரஸ்யம் சேர்ப்பதற்காக இவரைப் போட்டிருக்கிறார்கள். ஆனால், கதாநாயகனிடம்இருந்து நாயகியைப் பிரிக்க சதித்திட்டம் போடும் வில்லன் கேரக்டர் கொடுக்கப்பட்டிருப்பதுதான் கொடுமை! மீசை இல்லாமல் குழந்தைத்தனமான அப்பாவி முகத்துடன் இவர் பேசும் வசனங்கள், 'கைப்பிள்ளை' வடிவேலு ரேஞ்சுக்கு சிரிப்பைத்தான் வரவழைக்கின்றன. சீரியஸ்னஸ் மிஸ்ஸிங்'' என்கிறார் சத்தியமங்கலத்தில் இருந்து ஏ.ஜே.ஜபீன்பேகம். 'பொதிகை' தொலைக்காட்சியில் 'ஸ்போர்ட்ஸ் க்விஸ்' நேரடி ஒளிபரப்பு வழக்கம்போல் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருந்தது. இடையில் போன் மூலம் விடையளிக்க வந்த ஒரு வாசகி... 'அஜித்நயன்தாரா' என்று ஒரு பரபரப்பான விடையைச் சொன்னதும், நிகழ்ச்சியை வழங்கிக் கொண்டிருந்த டாக்டர் சுமந்த்ராமனுக்கும் (ராமன்), பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கும் அதிர்ச்சி! அதேநேரத்தில் 'நடிகர், நடிகையின் புகைப்படங்களைக் காட்டி உடன் பதில் தருபவருக்கு பரிசு' என்று வேறொரு சேனல் நடத்தும் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அப்பெண்மணி, அங்கே போன் செய்வதாக நினைத்துக் கொண்டு, 'பொதிகை'யை அழைத்து பதிலைச் சொல்லியிருக்கிறார். விஷயம் தெரிந்த பிறகுதான் எங்களின் அதிர்ச்சி விலகியது'' என்று சிரிக்கிறார் வேலூரிலிருந்து வி.காமாட்சியம்மாள்.

வா கர்ணா... வா!

கேபிள் கலாட்டா

பாலிமர் டி.வியில் ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகும் வகையில் 'கர்ணன்' பற்றிய புதிய இதிகாசத் தொடர் ஆரம்பமாக இருக்கிறது. கர்ணணின் வாழ்க்கை வரலாற்றை முழுக்க பேசவிருக்கும் இந்த நெடுந்தொடருக்கான வேலைகள் பரபரப்பாக நடக்கின்றன. "குழந்தைகள், பெரியவர்கள், ஆன்மிக அன்பர்கள்னு எல்லாருக்கும் ஃபேவரைட் ஆகப் போகுது பாருங்க எங்க சீரியல்!'' என்று சந்தோஷம் பொங்கச் சொல்கிறார்கள் சேனல் பார்ட்டிகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism