Published:Updated:

என் மதிப்புக்குரிய ஆண்கள் !

என் மதிப்புக்குரிய ஆண்கள் !

என் மதிப்புக்குரிய ஆண்கள் !

என் மதிப்புக்குரிய ஆண்கள் !

Published:Updated:

சுதா ரகுநாதன்

என் மதிப்புக்குரிய ஆண்கள் !

டிசம்பர் சங்கீத சீஸன் களைகட்டும் பிஸியான தருணத்தில் தன் மதிப்புக்குரிய ஆண்களின் பட்டியலை ஞாபக ஸ்ருதியேற்றி, நினைவுகளை மிருதங்கமாகத் தட்டி, அழகான ராகமாகவே கோத்தார் கர்னாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன். அந்த அழகிய பாடலில் வரும் ஆண்கள் வரிசை இதோ...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ரகுநாதன்... என் ஆசைக் கணவர். கடவுள் எனக்குக் கொடுத்த மிக அரிய வரம். அவரில்லாமல் கர்னாடக இசையுலகில் இந்த உயரங்களை நான் எட்டித் தொட்டிருக்க முடியாது. என் இருபது வயதுகளில் என்னைவிட திறமையாகவும், அற்புதமாகவும் பாடக்கூடிய பல இளம் மேதைகளை பல கல்லூரி மேடைகளில் எதிர்கொண்டிருக்கிறேன். அவர்கள் எல்லாம் இன்று இந்த இசை உலகின் தெரியாத மூலைகளில் பல்வேறு காரணங்களால் பிரகாசிக்க முடியாமல் இருக்கிறார்கள். ஆனால், நான் இசையின் பெரும் ஆசீர்வாதத்தால் றெக்கைக் கட்டி பறந்து கொண்டிருக்கிறேன் என்றால், அந்த இறகை சுதந்திரமாகவும், சந்தோஷமாகவும், நம்பிக்கையுடனும் விரித்து உயர உயர பறப்பதற்கு வீட்டுக்குள்ளும், சமூக அரங்கிலும் எனக்காக பல தியாகங்களைச் செய்து கொண்டிருக்கும் என் கணவர் எப்போதும் என் பெரும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய சிநேகிதர்!

பலப்பல பாராட்டுகளை நான் இசை மேதைகளிடமிருந்தும், என் ரசிகர்களிடமிருந்தும் பெற்றிருந்தாலும், என் கணவர் 'சூப்பர்’ என்று என்னைப் பாராட்டும் தருணங்கள் மிகவும் அரிது. என் ஈகோவை உடைக்கும் உளி என அதனை பாஸிட்டிவ்வாக பார்க்கிறேன். உண்மையும் அதுதான். ஒரு பள்ளி தலைமையாசிரியர் போல் எப்போதும் 'கறார்’ குணத்துடன் இருக்கும் அவரின் கம்பீரம்தான் என்னை செதுக்கி இழைக்கும் மந்திரக் கருவி. அதுதான் இன்னும் இன்னும் சிறப்பாக இந்த இசை உலகில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை எனக்குள் நாள்தோறும் விதைக்கிறது; வளர்க் கிறது!

##~##
என் மதிப்புக்குரிய ஆண்கள் !

இசை உலகின் என் முழு முதல் குருவான எம்.எல். வசந்தகுமாரி அம்மாவின் குரு ஜி.என்.பாலசுப்ரமணியம் எனக்கும் ஆதர்ஷ குரு! அவரை நான் நேரில் பார்த்தது கிடையாது. பேசியது கிடையாது. ஆனால், அவருடைய கம்பீரமான, மிடுக்கான இசை எனக்குள் உண்டாக்கியிருக்கும் பாதிப்பு அளவிட முடியாதது. இசையுலகம் கண்டிராத பல அற்புதமான, அபூர்வமான ராகங்களை மேடையேற்றி அந்த உலகை இன்னும் இன்னும் அழகாகவும் பெருமையாகவும் விஸ்தரித்தவர். 'சரஸ்வதி தேவி, அவரை மட்டும் தன் மடியில் அமர்த்தி சொல்லிக் கொடுத்தாளோ’ என்று நான் பிரமிக்கும் மகாமேதை அவர். என் பக்திக்கும் போற்றுதலுக்கும் உரிய அவரைப் போல பாட வேண்டும் என்று எத்தனையோ முறை முயற்சித்தும், ஒவ்வொரு முறையும் தோல்வியையே தழுவிக் கொண்டுஇருக்கிறேன். அது கௌரவமான தோல்வி. ஒருநாள் வெற்றி வரும்!

எழுத்தாளர் 'ஸ்டூவர்ட் வைல்ட்’ (ஷிtuணீக்ஷீt கீவீறீபீமீ)... என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர் என்று மட்டும் அவரை சொல்லிவிட முடியாது. ஆரோக்கியமான பல விஷயங்களில் என் ஆதர்ஷ குரு, சரியான திசைகாட்டி, என்னை எனக்கே சரியாகவும் முழுமையாகவும் புரிய வைத்த மேதை.   அவருடைய எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் படிக்கும்போது நமக்கான புது வாசலை, இதுவரை நமக்குத் தெரியாத... ஆனால், நம் நெருக்கத்தில் இருக்கும், எளிதாகப் பயணம் செய்யக்கூடிய பாதையைக் காட்டுபவை.

என் மதிப்புக்குரிய ஆண்கள் !

நண்பர் ஒருவர்தான் ஸ்டூவர்ட்டின் புத்தகங்களை எனக்கு அறிமுகப்படுத்தினார். முதன் முதலாக படிக்கும்போது ஒன்றுமே தோன்றவில்லை. திரும்பத் திரும்ப அவரை வாசிக்க ஆரம்பித்ததும் எனக்குள் இருக்கும் திறமையின் விசை, வெறும் இசை மட்டுமல்ல.. வேறு ஏதோ இருக்கிறது என்று 'எனக்குள் ஒருவள்’ இருப்பதைக் கண்டுபிடித்துக் கொடுத்தார். அவருடைய எழுத்துகளிடம், 'நின்னையே சரணடைந்தேன்’ என சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து என்னையே ஒப்படைத்து இருக்கிறேன். அதன் பிரதிபலனாகத்தான் 'சமுதாய ஃபவுண்டேஷன்’ என்றொரு தொண்டு அமைப்பை என்னால் நிறுவ முடிந்தது.

என் மகன் கௌசிக், இன்றைய தலைமுறையின் அசல் வடிவம். ஒரு தாயாக இல்லாமல் சக மனுஷியாக அவனை எட்ட நின்று பார்க்கிறேன். அவனது நேர்மை, நேரம் தவறாமை, சமூக அக்கறை... இவைஎல்லாம் அவனிடம் நான் பிரமிக்கும் விஷயங்கள். நான் அம்மா என்றாலும்கூட, 'பின்பற்ற வேண்டிய விதிகளை கண்டிப்பாக பின்பற்றிதான் ஆக வேண்டும்’ என்று எனக்கு கட்டளை இடுகிற ஆசிரியர், தன் பாசத்தால் என்னை நிரப்புகிற என் தாய் அவன்!

'ஆஷா ஃபவுண்டேஷன்’ என்கிற தொண்டு நிறுவனத்தோடு இணைந்து அவன் செய்யும் தன் 'பயோ பிசிக்ஸ்’ பிஹெச்.டி ஆராய்ச்சிக்கு இடையிலும், பல சமூக சேவைகளை செய்பவன். எந்த நிமிடத்திலும் 'அம்மா ஒரு பிரபலம்’ என்கிற விஷயத்தை அட்வான் டேஜாக பயன் படுத்தாமல், தன் ஒரிஜினாலிட்டியுடன் இயங்க வேண்டும் என்கிற அந்த மிடுக்கு அவன் மேல் மிகப் பெரிய மரியாதையை ஏற்படுத்தியதால் அவ னும் என் பெருமதிப்புக்கு உரிய ஆண்!

என்னிடம் இருப்பவை மூன்று சொத்துக்கள், என் குடும்பம், என் இசை, அடுத்து என் வளர்ச்சியிலும் வாழ்விலும் ஒவ்வொரு நொடியிலும் மானசீகமாக என்னுடன் இணையாக வரும் ஈடு இணையில்லாத தோழமைகள். அந்தத் தோழமையான நண்பர்கள் அனைவருமே என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய ஆண்கள்தான்!

படம்: கே.ராஜசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism