Published:Updated:

பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு...

படித்தது எம்.இ... நடத்துவது பேக்கரி...சூப்பர் ரூட்டில் முன்னேறும் ஜூலியட் !

பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு...

படித்தது எம்.இ... நடத்துவது பேக்கரி...சூப்பர் ரூட்டில் முன்னேறும் ஜூலியட் !

Published:Updated:
பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு...

''படிப்புக்கு ஏத்த வேலை பார்க்கறது நல்ல விஷயம். ஆனா, அந்த வேலை மனசுக்குப் பிடிக்கலைனா... அதுல முன்னேற்றம் இருக்காது. மாறா, 'இந்தத் துறையில எனக்கு ஆர்வம் இருக்கு; இதுல நான் முன்னேறுவேன்; நிறைய நம்பிக்கை இருக்கு’னு புத்தி கைகாட்டற வேலை எதுவா இருந்தாலும் துணிஞ்சு, விருப்பத்தோட, உழைப்போட, தன்னம்பிக்கையோட செஞ்சா... வெற்றி ஏணி நமக்குத்தான்!''

- தன் அனுபவத்தால் கியாரன்டி வார்த்தைகள் பகிர்கிறார் ஜூலியட் வளர்மதி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எம்.இ. (பவர் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டிரைவ்ஸ்) பட்டதாரியான ஜூலியட்டுக்கு, அந்தப் படிப்பின் அடிப்படையில் கிடைத்த வேலையில் மனம் ஒன்றவில்லை. 'வேற ஏதாச்சும்...’ என்ற தேடலில் இருந்தவருக்கு, 'பேக்கரி தொழில்தான் நம்முடைய ஆர்வத்துக்கு தீனியும், லாபமும் கொடுக்கும்' என்று மனசுக்குள் உறைக்க, தீர்மானமான யோசனைக்குப் பின் வேலையை உதறிவிட்டு, தயக்கமின்றி பேக்கரி தொழிலில் இறங்கினார். இன்று படுபிஸியான பிசினஸ்வுமனாக காலம் அவரை கரையேற்றியிருக்கிறது. திருச்சியில் இவர் நடத்தி வரும் பேக்கரி இப்போது பரபர பிக்-அப்பில்!

##~##

''படிச்சது, வளர்ந்ததெல்லாம் சென்னையில. எங்கப்பா, அம்மா ரெண்டு பேருமே டீச்சர்ஸ். சின்ன வயசுல இருந்தே தேவையான சுதந்திரம், தைரியம் கொடுத்து வளர்த்தாங்க. ஒன்பதாவது படிக்கறப்பவே தனியா தாசில்தார் ஆபீஸுக்குப் போய் ஜாதி சான்றிதழ் வாங்கிட்டு வர்ற அளவுக்கு தயக்கங்கள், தடுப்புகளை மீறி இந்தச் சமுதாயத்தை எதிர்கொள்ளவும் பழகிக் கொடுத்தாங்க. தடகள விளையாட்டுல தேசிய அளவில் பதக்கம், ஜனாதிபதி கையால சமூக சேவைக்கான அவார்டுஎல்லாம்கூட வாங்கியிருக்கேன்'' எனும் ஜூலியட்டுக்கு இந்தத் தீர்க்கமான அஸ்திவாரம்தான் எதிர்காலத்தில் சரியான பாதையில் அவரைச் செலுத்தியிருக்கிறது.

''சென்னை, கவர்ன்மென்ட் பாலிடெக்னிக்குல இன்ஸ்ட்ரூமென்ட் டெக்னாலஜி முடிச்சுட்டு, திருவனந்தபுரத்துல இருக்கற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துல அப்ரன்டீஸா சேர்ந்தேன். அந்த வருஷம் இந்திய அளவுல அஞ்சு பேருக்குதான் அந்த வாய்ப்பு கிடைச்சுது. அதுல நானும் ஒருத்தி. அடுத்ததா... சென்னை, அண்ணா யுனிவர்சிட்டியில டெக்னிக்கல் அசிஸ்டென்ட்டா வேலை பார்த்தேன்'' என்பவருக்கு திருச்சியைச் சேர்ந்த மைக்கேலோடு திருமணம் நடந்திருக்கிறது.

''அனுசரணையான கணவர் கிடைக்க, கல்யாணத்துக்கு அப்பறம் பி.இ., எலெக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன் படிச்சேன். ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணினேன். எம்.இ., பவர் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டிரைவ்ஸ்ல 79 பர்சன்டேஜ் மார்க்கோட வெளியே வந்தேன். உடனடியா பிரைவேட் காலேஜ்ல லெக்சரரா வேலைக்கும் போயிட்டேன். நல்ல சம்பளம்...'' என்பவருக்கு அப்போதுதான் தன் படிப்புக்கு ஏற்ற இந்த வேலையை, தன் புத்தி ஏற்கவில்லை என்பது புரிந்திருக்கிறது.

''ஏனோ நான் பார்த்த வேலையில ஒரு பிடிப்பில்லாம இருந்தது. அதனாலேயே, அடுத்தடுத்த கட்டங்களுக்கு போறதுக்கான உழைப்பையோ, முயற்சியையோ என்னால கொடுக்க முடியல. கடமைக்காக வேலை பார்த்தேன். நான் தேர்ந்தெடுத்த படிப்பு என் விருப்பம்ங்கறதைவிட, என் சூழலும், கட் ஆஃப் மார்க்கும் எனக்கு டிக் பண்ணித் தந்த சாய்ஸ்'' என்று சற்றே இடைவெளி கொடுத்தவர்... தொடர்ந்தார்.

பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு...

''சுயதொழில்! அதுதான் எனக்கு ஆத்ம திருப்தியைத் தரும்னு தோணுச்சு. காரணம், என் கணவரோட ஐஸ்க்ரீம் பார்லர்ல அப்பப்போ நான் சில யோசனைகளும், பங்களிப்பும் கொடுப்பேன். அதனால பிஸினஸுக்கு ஒரு சின்ன லாபம் கிடைக்கறப்போவெல்லாம், எனக்கு அவ்வளவு உற்சாகமா இருக்கும். நான் பார்த்திட் டிருந்த வேலையில நான் உணந்திராத சந்தோஷம் அது. பல யோசனை களுக்குப் பிறகு, 'பிடிக் காத வேலை வேண்டாம். பிடிச்ச ஒரு தொழிலை பண்ணுவோம்’னு தீர்மானமா முடிவெடுத்து என் வேலையை விட்டேன். கணவரோட ஐஸ்க்ரீம் பார்லர்

பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு...

பிஸினஸுக்கு உதவியா இருந்தேன். அங்கதான் முதலீடு, அக்கவுன்ட்டிங், பணியாட்கள், டெலிவரி, சர்வீஸ், வாடிக்கையாளர் திருப்தினு ஒரு கடை நடத்தறதுல இருக்கற கஷ்ட நஷ்டங்கள் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டேன்'' என்பவருக்கு அப்போதுதான் வலுப்பெற்றிருக்கிறது தான் தனியாக ஒரு சுயதொழிலில் இறங்க வேண்டும் என்ற துடிப்பு.

''பல தொழில்களை பரிசீலிச்சு, கடைசியா வருஷத்துல எல்லா நாளும் பிஸினஸ் நடக்கற 'பேக்கரி’ தொழிலைத் தேர்ந்தெடுத்தேன். இந்தத் தொழில்ல கையைச் சுட்டுக்கிட்டவங்களோட அனுபவப் பாடங்கள், ஆலோசனைகள், பேக்கரியை ஆரம்பிக்கறதுக்கான பயிற்சி, தேவையான முதலீடு, மூலப்பொருட்கள், உழைப்புனு எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டேன். 'இதுல போட்டிகள் அதிகம்தான். ஆனா... தரமாவும், தனித்துவமாவும் இருந்தா... மக்கள் நம்மகிட்ட வருவாங்க. கண்டிப்பா ஜெயிக்க முடியும்’ங்கற நம்பிக்கைய மனசெல்லாம் நிரப்பினேன். ஆர்வம் இழுக்கற இழுப்புக்குப் போய் எடுத்தோம், கவிழ்த்தோம்னு எதையும் பண்ணாம, தொழில் ஆரம்பிக்கறதுக்கான ஆரம்பகட்ட வேலைகளை பொறுமையா, பொறுப்பா சில மாதங்கள் செஞ்சேன். இறுதியா, ஒரு சுபநாள்ல பேக்கரிக்கு திறப்பு விழாவும் பண்ணிட்டேன்!'' என்ற ஜூலியட், தன் தொழில் சாதுர்யத்தாலும், விடாமுயற்சியினாலும் பலவிதமான தடைகளையும் முறியடித்து இன்று வென்றிருக்கிறார்.

''பேக்கரி ஆரம்பிச்சு ஒரு வருஷம்தான் ஆகப்போகுது. இப்ப மாசம் 80 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. இருபது பேர் வேலை பார்க்கறாங்க. ஆர்வமும் உழைப்பும் கண்டிப்பா உயர்வைத் தரும்னு நான் நம்பினது இன்னிக்கு நனவாகியிருக்கு!'' என நெகிழ்பவருக்கு இந்தத் தொழிலின் மீது நம்பிக்கை வர வைத்த அந்த முக்கிய சம்பவம், இத்தொழிலில் இவர் சந்தித்த சவால்கள், இத்தொழிலுக்கான பயிற்சி, முதலீடு உள்ளிட்ட ஏ டு இசட் வழிகாட்டல் விவரங்கள்... அடுத்த இதழில்.

  - சாதனைகள் தொடரும்...

படங்கள்: ‘ப்ரீத்தி’ கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism