Published:Updated:

அருள் தரும் அம்மன் உலா!

வீரமாகாளியே !

 கரு.முத்து

உலக மகா சக்தியான அன்னைக்கு உருவம் ஒரு பெரிய விஷயமில்லை என்பதை பல நேரங்களில் அவளே நமக்கு உணர்த்தியிருக்கிறாள். பல புண்ணியத் தலங்களில் புற்றாகவும், மூங்கிலணையில் வெறும் கதவாகவும் இருந்து அருள்பாலிப்பவள், புதுக்கோட்டை மாவட்டம், குன்னாண்டார்கோவில் ஒன்றியத்தில் உள்ள பெரம்பூரில் உருவமற்று அரூபமாக, வெறும் நீள் சதுர கல்லாக இருக்கிறாள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்து... முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை வெறும் காடாக இருந்த அந்த இடம், இன்று அருள்மழை பொழியும் அற்புத ஆலயமாக மாறியிருக்கிறது.

அருள் தரும் அம்மன் உலா!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##

இங்கு அன்னை இருக்கும் இடம் வெறும் சந்நிதியாக மட்டும் பார்க்கப்படவில்லை. நீதிமன்றமாக, காவல் நிலையமாக, மருத்துவமனையாக இன்னும் பல வடிவங்களில் திகழ்ந்து கொண்டிருக்கிறது. திருமணம் ஆகவில்லை, குழந்தை இல்லை, பக்கத்து வீட்டுக்காரன் செய்வினை வைத்துவிட்டான், கடன் வாங்கியவன் ஏமாற்றுகிறான் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு கவலையோடு வருகிறார்கள். அவர்கள் குறைகளையெல்லாம் களையும் மருத்துவராக, நீதிபதியாக, காவல் அதிகாரியாக திகழ்கிறாள் அன்னை.

மேற்கு பார்த்திருக்கும் ஒரு சிறிய ஆலயத்துக்குள் படர்ந்து வளர்ந்த ஒரு வேப்பமரத்துக்கு கீழே இருக்கும் அந்த நீள் சதுர கல்லில், ஐம்பொன்னாலான ஒரு சூலம் பதிக்கப்பட்டுள்ளது. அதற்கு கீழே ஒரு திருவாட்சி. அதன் நடுவேயும் ஒரு சூலம். அதனையே அம்பாளாக அலங்கரித்து வழிபடுகிறவர்களுக்கு மனக் கண்ணில் அம்பாளை காணச் செய்கிறார்கள் அவளுக்கு காலம் காலமாக வழிபாடுகளை செய்து வரும் வேளாளர்கள். இது தவிர, இன்னும் பல சூலம் மற்றும் வேல்களையும் மண்ணில் செருகி வைத்திருக்கிறார்கள். இந்த அமைப்புதான் அம்மனின் கருவறை. அந்த நீள் சதுர கல்லும், சூலமும்தான் அம்மன் வீரமாகாளி.

அருள் தரும் அம்மன் உலா!

மண்பானை செய்யும் வேளாளர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு, அம்மனை பூஜிக்கும் உரிமை எப்படி கிடைத்தது என்பதில்தான் கோயிலின் கதை இருக்கிறது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இந்த இடத்தை ஆட்சி செய்த செம்முனி என்கிற முனி, மனித மாமிசம் தின்று ஊரையே காலி செய்து வந்தது. அதனால் வேகமாக குறைந்த தங்கள் குலத்தைக் காக்க, செம்முனியிடம் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள் மக்கள். அதன்படி இங்கு வசித்த வேளாளர்கள், தங்கள் குடும்பங்களில் இருந்து வருடத்துக்கு ஒரு பிள்ளையை மட்டும் முனிக்கு கொடுத்துவிடுவதாக முடிவானது.

கணவனை இழந்து, தன் ஒரே பிள்ளையுடன் வசித்து வந்த ஒரு விதவைத் தாயின் முறை அந்த வருடம் வந்து சேர, தன் பிள்ளையைக் காப்பாற்றும்படி வீரப்பூர் மலையில் இருக்கும் வீரமகாமுனியிடம் முறையிட்டாள் அந்தத் தாய். அக்கோரிக்கையை ஏற்ற வீரமகாமுனி, விஸ்வரூபம் எடுத்து வீரப்பூர் மலையில் இருந்து ஒரு காலை எடுத்து, பெரம்பூரில் இருந்த செம்முனியின் தலையில் ஒரே மிதியாக மிதித்தார். பூமிக்குள் புதைந்தது செம்முனி. செய்த தவறை உணர்ந்து வீரமகாமுனியிடம் மன்னிப்பு கேட்டது. அது புதைந்த இடத்தின் மீது, வீரப்பூர் மலையில் உள்ள தன் தங்கை காளியை அழைத்து வந்து, ஏற்கெனவே பெரம்பூரில் வேளாளர்கள் வழிபட்டு வந்த காளியுடன் இணைத்து, ஒரே சக்தியாக்கி, இங்கே காவல் தெய்வமாக நிறுத்தினார் வீரமகாமுனி. இதன் காரணமாகவே வீரமாகாளி என்ற பெயருடன் ஆண்டாண்டு காலமாக இங்கு அருளாட்சி செய்து வருகிறாள் அன்னை. மனித ரத்தம் குடித்து பழக்கப்பட்டதால் செம்முனியால் அதனை மறக்க முடியவில்லை. அதனால் தங்கள் வீட்டில் இருக்கும் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவன் ஒருவனை தேர்ந்தெடுத்து, வைகாசி மாதம் முதல் வெள்ளியன்று அவனின் தொடையைக் கீறி அதில் வழியும் ரத்தத்தை சோற்றில் கலந்து அதை பூமிக்குள் இருக்கும் செம்முனிக்கு படைக்கிறார்கள் வேளாளர்கள். இதனை 'பில்லிச்சோறு’ என்று அழைக்கிறார்கள்.

அருள் தரும் அம்மன் உலா!

சென்னையில் இருந்து வந்திருந்தார்கள் சுடரொளி-சூர்யா தம்பதி. ''நான் பிறந்த வீடும் சரி, புகுந்த வீடும் சரி... நாத்திக குடும்பங்கள். ஆனா, எனக்கோ அம்பாளின் மீது அளவில்லாத பக்தி. அதிலும் இந்த வீரமாகாளினா... சரணாகதி அடைஞ்சிடுவேன். நல்ல வாழ்க்கையையும், முத்து முத்தான ரெண்டு பிள்ளைகளையும் எனக்கு கொடுத்தவ இவதான். இங்க வந்து போற ஒவ்வொருத்தரும் தங்களோட துன்பம் தீர்ந்ததை சொல்லும்போதெல்லாம்... என்னைப் பெத்தவள அவங்க புகழ்றது மாதிரி இனிக்கும்...'' என்று ஆத்தாள் இருக்கும் இடம் நோக்கி கையெடுத்தார் சுடரொளி. இப்படி வீரமாகாளியை தஞ்சமடைய வருகிறவர்கள் ஆயிரமாயிரம் பேர். திருடுபோன பொருளில், அடுத்தவர்கள் அபகரித்துக் கொண்ட சொத்தில் நான்கில் ஒரு பங்கை தருவதாக வீரமாகாளியிடம் வேண்டிக்கொண்டு சீட்டு எழுதி, படி கட்டினால்... மூன்று மாதத்துக்குள் நிச்சயம் கிடைத்து விடுகிறது; இங்குள்ள வனதேவதையின் கழுத்தில் மஞ்சள் நூலை கட்டிச் சென்றால்... மூன்று மாதத்துக்குள் திருமணம் நடக்கிறது; வேப்பமரத்தின் கிளைகளில் வளையலை மாட்டிவிட்டால்... வீட்டில் வளைகாப்பு நடக்கிறது; உடல் நலம் சரியில்லாதவர்களை அழைத்து வந்து இங்கு தங்க வைத்தால்... விரைவில் குணமடைகிறார்கள். இப்படி தன்னை நாடி வரும் அத்தனை பேரையும் அரவணைத்து அருள் செய்கிறாள் அன்னை வீரமாகாளி.

அருள் தரும் அம்மன் உலா!

வைகாசி மாதம் நடக்கும் திருவிழாவில் முதல் வெள்ளி பில்லிச்சோறு, சனிக்கிழமை இரவு தேர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கிடாவெட்டு, ஞாயிறும் திங்களும் பால்குடம் ஆகியவை முக்கியமானவை. இதற்காக லட்சத்துக்கும் மேற்பட்டோர் இங்கே திரளுவது... ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்!

கோயிலில் அன்று முறையில் இருந்த ராமசாமி வேளார் (வேளாளர் என்பதை இப்படித்தான் அழைக்கிறார்கள்), ''தப்பு செஞ்சவங்கள தண்டிக்கறலயும், தன்னையே கதினு வந்தவங்கள காப்பாத்தறதுலயும் இவள மிஞ்சி வேற ஒரு தெய்வமில்லீங்க. யாராலயாவது வஞ்சிக்கப்பட்டவங்க, பாதிக்கப்பட்டவங்க இங்க வந்துட்டாங்கனு தெரிஞ்சாலே... அவங்களை ஏமாத்துனவங்க உடனே அதுக்குண்டான பரிகாரத்தை தேடிப்போய் செஞ்சுடுவாங்க. தன் புள்ளைகளோட எல்லா வேண்டுதல்களையும் கனிவோட நிறைவேத்தி வைக்கற ஆத்தா இந்த காளி!'' என்றார் பரவசத்துடன்!  

எப்படிச் செல்வது?

புதுக்கோட்டை மாவட்டம், அண்டக்குளம் மற்றும் கிள்ளனூர் இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது பெரம்பூர். புதுக்கோட்டையில் இருந்து நகரப் பேருந்துகள் செல்கின்றன. செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் திருச்சி, தஞ்சாவூர் சாலையில் உள்ள செங்கிப்பட்டி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஊர்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மற்ற நாட்களில் பேருந்து வசதி குறைவு. புதுக்கோட்டை- தஞ்சாவூர் சாலையில் உள்ள ஆதனக்கோட்டை எனும் ஊரில் இறங்கினால் ஆட்டோ கிடைக்கும்.

கோயில் திறந்திருக்கும் நேரம் காலை ஆறு முதல் இரவு ஒன்பது மணி வரை. கோயில் தொலைபேசி எண் 04339 - 248300

 - அம்மன் வருவாள்...
 படங்கள்: எம்.ராமசாமி