Published:Updated:

பெண்களை அடக்குவதுதான் இங்கே 'பேராண்மை' !

பெண்களை அடக்குவதுதான் இங்கே 'பேராண்மை' !

நாச்சியாள்

'இந்தியப் பெண்கள் அசாத்தியமான திறமைகளுடன் முன்னேறிச் செல்கிறார்கள்’ என்று உலகம் நம்மைப் பார்த்து அதிசயிக்கும் இருபத்தியோராம் நூற்றாண்டின் இந்தக் கணத்தில்தான், 'நான்கில் ஒரு இந்திய ஆண், ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பெண்ணை பாலியல் துன்பத்துக்கு உள்ளாக்குகிறார்’ என்று 'இன்டர்நேஷனல் சென்டர் ஃபார் ரிசர்ச் ஆன் விமன்’ என்ற ஆய்வு நிறுவனம் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டு தலைகுனிய வைத்திருக்கிறது.

பெண்களை அடக்குவதுதான் இங்கே 'பேராண்மை' !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##

''இந்திய ஆண்களின் இந்த மனோபாவத்தை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் என்ன?'' கேள்வியுடன் சிலரைச் சந்தித்தோம்.

''பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் பொது இடங்களில் நடப்பதைவிட, அவர்கள் 'என் உலகமே இதுதான்’ என்று கொண்டாடும் வீட்டுக்குள்தான் மிக அதிகமாக நடக்கிறது. 'கணவர், கணவர் வழி உறவுகளால் பிரச்னை’ என்று பதிவாகும் வழக்குகள்தான் இங்கே அதிகம்'' என்று அதிர்ச்சி தந்தார் தமிழக காவல்துறை டி.ஜி.பி-யான லத்திகா சரண்.

''தன் மனைவியை ஒரு தோழியாக, சக மனுஷியாக ஒரு ஆண் கருதத் துவங்கினால்... பெண்ணை அடித்துத் துன்புறுத்தும் எண்ணம் வராது. அந்த மாற்றம் ஒவ்வொரு ஆணுக்குள்ளும் வந்து விட்டால் பிரச்னைகள் வராது'' என்று மாற்றத்துக்கான ஆரம்பப்புள்ளியைச் சுட்டிக் காட்டினார் டி.ஜி.பி.

''அந்த மாற்றத்தை எப்படி உருவாக்க முடியும்?’' என்ற கேள்வியுடன் சென்னை, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சாந்தகுமாரியின் அலுவலகத்தில் நுழைந்தபோது... பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண்ணிடம், அவர் சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பாக பேசிக் கொண்டிருந்தார் சாந்தகுமாரி.

பெண்களை அடக்குவதுதான் இங்கே 'பேராண்மை' !

பணி முடித்து நம்மிடம் திரும்பியவர், ''நம் நாட்டுப் பெண்களின் மனதில் 'ஆண் என்பவன் சம்பாதிப்பவன், அவன் நம்மை அடிக்கலாம், துன்புறுத்தலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், அது அவன் உரிமை. அந்த அடியையும் உதையையும், பாலியல் கொடுமைக¬ளையும் பொறுத்துக் கொள்வது ஒரு மனைவியாக எனது பெரும் கடமை’ என்ற எண்ணம் ஆழமாக வேரோடி உள்ளது.

அந்த அழுகல் எண்ணம்... கலாசாரம், பண்பாடு என்ற போர்வையில், கருவாக தன் தாயின் வயிற்றில் தோன்றிய கணத்தில் இருந்தே, ஒரு பெண் சிசுவுக்கும் கடத்தப்பட்டு, கற்பிக்கப்பட்டு விடுகிறது. அதனால்தான் எந்தப் பெண்ணும் தன் கணவனால் பாதிக்கப்படும்போது எதிர்த்து தைரியமாக, 'நீ இப்படி அடிக்காதே, கொடுமைப்படுத்தாதே’ என்று சொல்வதில்லை. மாறாக, இதனை எப்படிப் பொறுத்துக் கொள்வது என்றுதான் யோசிக்கிறாள். அந்த அளவுக்கு சமூகம் அவளை மூளைச் சலவை செய்து வைத்திருக்கிறது'' என்று மூல காரணத்தை சொன்னார்.

''அப்படியானால் சட்டங்கள் இருந்தாலும் இதனை மாற்ற முடியாதா?’' என்ற கேள்விக்கு...

''கண்டிப்பாக முடியும். அந்த மாற்றத்தை சட்டத்தால் மட்டும் கொண்டு வர முடியாது. சட்டத்தைச் செயல்படுத்துபவர்கள் காவல்துறை அதிகாரிகள்தான். அவர்கள் பெண்களுக்கு எதிரான இம்மாதிரியான வழக்குகளைப் பதிவு செய்யும்போது, குற்றவாளி தப்பிப்பதற்கான சட்ட ஓட்டைகளையும் சேர்த்தே பதிவு செய்கிறார்கள். இந்த ஓட்டை வழியாக பெரும்பாலானோர் தப்பித்து, திரும்பத் திரும்ப தைரியத்தோடு அதே தவறைச் செய்கிறார்கள்.

பெண்களை அடக்குவதுதான் இங்கே 'பேராண்மை' !

'பெண்கள் சம்பந்தமான இத்தனை வழக்குகளை பதிவு செய்தேன், அதில் இத்தனை பேருக்கு தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறேன்’ என்று எந்த அதிகாரியும் யாருக்கும் கணக்கு சொல்லும் அவசியமில்லாத சூழல் இருப்பதால்தான், பதிவாகும் வழக்குகள் வெறும் 'கேஸ் கட்டாக’ முடங்கி விடுகின்றன. ஆகையால், சட்டத்தை இயற்றுபவர்கள், இந்த மாதிரி குற்றங்களுக்கு 'சமரசமற்ற தண்டனை’ வழங்கும்படியான சட்டங்களையும், அதை செயல்படுத்தும் அதிகாரிகளுக்கு அந்த சட்டத்தைப் பற்றிய நேர்மையான புரிதலையும் உருவாக்குவது அவசியம்'' என்றார்.

''இந்திய ஆண், ஏன் பெண்ணை பலாத்காரப்படுத்தும், கொடுமைப்படுத்தும் மனதுடன் இருக்கிறான்...? இதற்கான உளவியல் காரணம் என்ன..?'' மனநல மருத்துவர் ஷாலினி தன் கைக்குழந்தை ஜெனியை அணைத்தபடியே பேச ஆரம்பித்தார்.

''பெண்ணை ஆளுமை செய்வதுதான் ஆணுக்கு அழகு, அதுதான் பேராண்மை என்று ஒரு ஆணுக்கு, அவன் குழந்தையாக இருக்கும்போதே சொல்லி சொல்லி வளர்க்கிற சமூகம் நம் இந்திய சமூகம். அவன் வளரும்போது, தன் அப்பா, அம்மாவை எப்படி நடத்துகிறார் என்பதைப் பார்த்துப் பார்த்து, எதிர்காலத்தில் அவனும் அதையே செய்கிறான். கார்ப்பரேட் துறையில் பணிபுரியும் மெத்த படித்த ஆண்கள்கூட, அதே மனநிலையில்தான் இருக்கிறார்கள். என்னிடம் வரும் பல கேஸ்கள் இப்படித்தான் இருக்கின்றன. உயர் கல்வி அவர்களிடம் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என்பதுதான் நிதர்சனம்'' என்று சொன்னவர்,

'' 'பொறுத்துப் போ... பொறுத்துப் போ’ என்று சொல்லிச் சொல்லி, பெண்ணை சகிப்புத் தன்மையின் முழு உருவமாக குடும்பமும், சுற்றுச்சூழலும் மாற்றிவிட்டது. இன்று குழந்தைகளாக இருக்கும்

பெண்களை அடக்குவதுதான் இங்கே 'பேராண்மை' !

பிஞ்சுகளுக்கும், நாளை இந்த உலகுக்கு வரப்போகும் புது மலர்களுக்கும் இந்த நஞ்சு விதைக்கப்படக் கூடாது என்றால்... பெண்ணை சகமனுஷியாக பார்க்க வேண்டும் என்ற கல்வியையும், பெண்ணின் உரிமைகளும் மனித உரிமைதான் என்ற உணர்வைப் போதிக்கும் வகையிலான பாடங்களையும் கட்டாயம் நம் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். ஒரு இந்தியன் சர்வதேச அளவில் 'அறிவாளியாக’ பார்க்கப்பட நாம் காட்டும் அக்கறை மட்டும் போதாது, பெண்ணை மதிக்கும் பண்புள்ள மனிதனாக அவனை உலகம் அறிய வேண்டும். அதற்குக் குடும்பமும், சமூகமும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும்'' என்று நியாயமான எதிர்பார்ப்பை முன் வைத்தார்.

நிறைவாக... ''நம் மனித மாண்பை காட்டுவது நம்மைச் சுற்றி வளரும் இலக்கியமும் கலைவடிவங்களான சினிமா, நாடகம், தொலைக்காட்சி போன்றவையும்தான். இவற்றிலும் பெண், பெண்ணாக மதிக்கப்படுவது அவசியம். அதைவிட ஆணுக்குரிய இயல்புகள் இதுதான் என்ற தப்பான உருவகப்படுத்தல்தான் சமூகத்தைப் பாதிக்கிறது என்பதால், இந்தப் படைப்பாளிகள் நல்ல படைப்புகளை உருவாக்குவது அவசியம்!'' என்று எளிமையாக செயல்படுத்தக் கூடிய வழிகளையும் சொன்னார் ஷாலினி.