Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன !

அனுபவங்கள் பேசுகின்றன !

வாசகிகள் பக்கம்
ஓவியங்கள்: கண்ணா
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

அனுபவங்கள் பேசுகின்றன !

150

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்தேன்!

அனுபவங்கள் பேசுகின்றன !
##~##

நானும் என் தோழியும் அலுவலகம் செல்லும்போது, பேருந்து நிலைய நடைபாதையில் உட்கார்ந்திருக்கும் பார்வையற்ற பெண்ணுக்கு தினமும் காசு கொடுத்துவிட்டுச் செல்வோம். ஒரு நாள் பேருந்து வருவதற்கு தாமதமாகவே... கிடைத்த நேரத்தில் அவளிடம் பேச்சுக் கொடுத்தேன். பார்வையற்றோர் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்திருப்பதாக சொன்னவள், ''இப்படி கையேந்த எனக்கும் வருத்தமாதான் இருக்குக்கா. ஏதாச்சும் வேலையோ, தொழில் செய்ய பணமோ இல்லாததாலதான் இந்த நிலைமை'' என்றாள் வேதனையுடன். என் மனதுக்குள் ஒரு யோசனை வர, எடை பார்க்கும் மெஷின் ஒன்று வாங்கி, மறுநாள் அந்தப் பெண்ணிடம் கொடுத்தேன். நெகிழ்ந்தாள். மாலையில் பார்த்தபோது, அன்று மட்டும் நூறு ரூபாய்க்கு மேல் சம்பாதித்திருப்பதாக சந்தோஷத்துடன் கூறிய அந்தப் பெண்ணிடம் சுயமரியாதையும் தன்னம்பிக்கையும் புதுவரவாகி இருந்தது.

'பசிக்கிறவனுக்கு மீன் கொடுப்பதைவிட, மீன் பிடிக்கக் கற்றுக் கொடுங்கள்’ என்கிற பழமொழி எத்தனை உண்மை!

- ஒய்.ஜெயந்தி, கோவை

சந்தோஷ சாவி!

அனுபவங்கள் பேசுகின்றன !

பிரசவ விடுப்பில் அம்மா வீட்டில் மகாராணி போல் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த எனக்கு, நிறைய 'ஃப்ரீ டைம்’ கிடைத்தது. டி.வி-யே கதியென்று கிடக்க பிடிக்கவில்லை என்பதால், இன்டர்நெட்டில் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் உலவ ஆரம்பித்தேன். பல வருடங்களாக தொடர்பு விட்டுப் போயிருந்த ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ், காலேஜ் ஃப்ரெண்ட்ஸ்களை இந்தத் தளத்தில் ஆவலுடன் தேட ஆரம்பித்தேன். ஆச்சர்யம்... பத்தாம் வகுப்புப் படித்த தோழிகளில் இருந்து, கல்லூரித் தோழிகள் வரை பலர் அதில் எனக்கு திரும்பக் கிடைத்தார்கள். இப்போது அனைவரும் தொடர்பு வலைக்குள்ளும் வந்துவிட்டார்கள். 'அவ எங்க வேலை பார்க்கறா..?’, 'இவளுக்கு எத்தனை குழந்தைகள்..?’, 'இவங்க எல்லாம் எந்தெந்த ஊருல செட்டில் ஆகியிருக்காங்க..?’ என்று எல்லா தோழிகளின் அப்டேட்களும் இப்போது எனக்குக் கிடைத்துவிட்டது, சமீபத்திய புகைப்படங்களுடன்.

முத்தாய்ப்பாக, பூமிக்கு புதிதாக வந்த என் புதுமலரைப் பார்க்க... ஃபேஸ்புக் மூலமாக செய்தியறிந்து வெளியூரில் இருந்து வந்த என் தோழியை பத்து வருடங்கள் கழித்துப் பார்த்தபோது, சந்தோஷத்தில் துள்ளியது மனம்!  

டெக்னாலஜியை சரியாகப் பயன்படுத்தினால் அது சந்தோஷ சாவிதான்!

- அன்னபூரணி சிவப்பிரகாஷ், திருச்சி

போன் புக் உஷார்!

அனுபவங்கள் பேசுகின்றன !

செல்போன் உபயோகிக்க ஆரம்பித்ததில் இருந்து உறவினர்கள், நண்பர்களின் தொலைபேசி எண்களை அதிலிருக்கும் போன் புக்கிலேயே பதிந்து வைத்துக் கொண்டதால், முன்போல் டைரியில் குறித்து வைக்கும் பழக்கம் என்னிடமிருந்து காணாமல் போயிருந்தது. ஒரு நாள் செல்போனில் பேசிக் கொண்டுஇருந்தபோது, கை தவறி தண்ணீரில் விழுந்து ரிப்பேர் ஆகிவிட்டது. அந்த நேரம் பார்த்து, விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருந்த உறவினர் ஒருவரின் நிலைமையை, வெளியூரில் இருக்கும் அவரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்குத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு என்னிடம் வந்து சேர்ந்தது. ஆனால், அவருடைய போன் நம்பர் எனக்கு மனப்பாடமாகத் தெரியவில்லை; அவசரமாக என் செல்லில் இருந்து 'சிம்’ கார்டை கழற்றி பக்கத்து வீட்டுக்காரரின் செல்போனில் போட்டுப் பார்த்தாலும், நம்பர் எல்லாம் 'சிம்’மில் பதிவாகாமல், 'செல்போன் மெமரி’யில் பதிவாகி இருந்தது. அவசர அவசரமாக சர்வீஸ் சென்டருக்கு ஓடி, செல்போனை சரி செய்து, பிறகே விபத்துத் தகவலை உறவினர் வீட்டுக்குத் தெரிவிக்க முடிந்தது. அன்று நான் பட்ட அவஸ்தை கொஞ்சநஞ்சமல்ல..!

இப்போதெல்லாம் செல்போனில் பதிந்த கையோடு, டைரியிலும் எழுதி வைத்துவிடுகிறேன் தொடர்பு எண்களை!

- பா.முத்துமாணிக்கம், பில்லங்குழி

அவசரம்... அடையாளம்... அவசியம்!

அனுபவங்கள் பேசுகின்றன !

அவசரப் பணத்தேவைக்காக வீட்டில் இருந்த நகைகளை எடுத்துக் கொண்டு, தனியார் அடகு நிறுவனத்துக்கு நானும் மாமியாரும் சென்றோம். வட்டி குறைவு என்பதால், வெகு தொலைவில் இருந்தாலும் இருநூறு ரூபாய் ஆட்டோவுக்கு கொடுத்து அங்கு சென்றோம். அவர்களோ முகவரி அத்தாட்சிக்காக ரேஷன் கார்டு, வாக்களர் அடையாள அட்டை, பேங்க் பாஸ்புக், டிரைவிங் லைசென்ஸ் என ஏதாவது ஒன்று கட்டாயம் தேவை என்றார்கள். அவசரத்தில் சென்ற நாங்கள் அதெல்லாம் எதுவும் எடுத்துச் செல்லவில்லை என்பதால், சோர்வுடன் வீட்டுக்குத் திரும்பினோம். மீண்டும், அவ்வளவு தூரம் செல்வதற்கு நேரமின்மையால், அருகில் இருக்கும் வட்டிக் கடை ஒன்றிலேயே அதிக வட்டிக்கு நகைகளை அடகு வைக்க வேண்டியதாகிவிட்டது.

வங்கி, அடகுக் கடை மட்டுமல்ல... இப்போதெல்லாம் ரயிலில் தட்கல் டிக்கெட்டுக்கே அடையாள அட்டை கேட்பதால், கை பையிலேயே எப்போதும் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்வது நல்லது என்பதை அதன் பிறகு உணர்ந்துகொண்டோம்!

-நூர்ஜஹான்,சென்னை