Published:Updated:

குட்டீஸ் குறும்பு

குட்டீஸ் குறும்பு

வாசகிகள் பக்கம்
ஓவியம்: ஹரன்

'செகண்ட் ரேங்குதான் ஃபர்ஸ்ட்!’

குட்டீஸ் குறும்பு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##

என் மகள் சூர்யாவும், பக்கத்து வீட்டுக் குழந்தையும் ஒரே பள்ளியில் யூ.கே.ஜி. படித்தார்கள். இருவருமே முதல் ரேங்க் வாங்குவது வாடிக்கை. ஒரு முறை ஒரு 'டேர்ம் டெஸ்ட்’டில் என் மகளுக்கு இரண்டாவது ரேங்க்தான் கிடைத்தது. ரேங்க் கார்டு கொடுத்த தினத்தில் பள்ளியிலிருந்து வீட்டுக்கு நான் அழைத்து வந்தபோது, எங்கே நான் திட்டித் தீர்ப்பேனோ என்று பயந்து போனவள், ''அம்மா, உனக்கு ஒண்ணு தெரியுமா..? இந்தத் தடவை செகண்ட் ரேங்க்ல இருந்துதான் ரேங்க்கே ஆரம்பிக்குது'' என்று போட்டாள் ஒரு போடு! ரசித்துச் சிரித்த நான், ''இரண்டாவது ரேங்க் வாங்குவது தவறில்லை, அடுத்த முறை முதல் ரேங்க்குக்கு முயற்சிக்கலாம்’' என்று சொல்லித் தேற்றினேன்!

இப்போது இன்ஜினீயரிங் கல்லூரி மாணவியான சூர்யாவிடம் ''உங்க காலேஜ்லயும் செகண்ட் ரேங்க்ல இருந்துதான் ரேங்க் ஆரம்பிக்குதா..?'' என்றால், சிரித்து ஒளிகிறாள்!

- என்.எம்.கிருஷ்ணா, பெருந்துறை

காக்காவுக்கு ஜுரம்!

குட்டீஸ் குறும்பு

நான்கு வயதான அக்கா மகன், ஒரு மழை நாளில் என்னிடம் ஓடி வந்து, ''ஏன் சித்தி காக்கா ஈரமா இருக்கு?'' என்றான் ஜன்னலில் உட்கார்ந்திருந்த காகத்தைக் காண்பித்து. ''அது மழையில நனைஞ்சுடுச்சுப்பா...'' என்று அவனுக்கு பதிலளித்துவிட்டு நான் வேலையில் மூழ்கிவிட்டேன். சில நிமிடங்களில் ஒரு துண்டு எடுத்து வந்து என்னிடம் கொடுத்தவன், ''சித்தி காக்காவுக்கு துவட்டி விடுங்க... இல்லைனா ஜுரம் வந்துடும்...'' என்று சொல்ல, நான் வேலை மும்முரத்தில் அதை கவனிக்கவில்லை. உடனே அவன் ஜன்னலுக்கு சென்று ''இந்தாங்க காக்கா... துடைச்சுக்கோங்க...'' என்று சொல்ல, காகம் பறந்து விட்டது. குழந்தையின் வெள்ளை மனம் வீட்டுக்குள் இருந்த என்னையும் நனைத்தது!

- சசிகலா,  திண்டிவனம்

கான்வென்ட் சிஸ்டரும் கந்த சஷ்டி கவசமும்!

குட்டீஸ் குறும்பு

என் மகள் கிறிஸ்தவ கான்வென்ட் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். தினமும் காலையில் எங்கள் வீட்டில் 'கந்த சஷ்டி கவசம்’ பாடலை டேப் ரெக்கார்டரில் போடுவது வழக்கம். அன்று காலை, பாடல் ஓடிக்கொண்டிருக்க, 'சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்’ என்ற வரிகளைக் கேட்டவுடன், என்னிடம் ஓடி வந்த என் பெண், ''அம்மா... நம்ம முருகர் எங்க ஸ்கூல் சிஸ்டருக்கும் உதவுவாராம்மா..?' என்று சந்தேகம் கேட்டாள். அந்தப் பாடலை அவ்வளவு உன்னிப்பாக அவள் கவனித்ததும், அதற்கு தன் அறிவுக்கு எட்டிய ஒரு விளக்கத்தை அவளே கொடுத்துக்கொண்டதும் எனக்கு வியப்பைத் தர, அள்ளிக் கொஞ்சிக் கொண்டேன் அவளை!

- திருமூர்த்தி, சிவகாசி

உங்கள் வீட்டு குட்டீஸ் குறும்புகளையும் இந்தப் பகுதியில் அரங்கேற்றலாம். அனுப்ப வேண்டிய முகவரி: 'குட்டீஸ் குறும்பு,’ அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002