Published:Updated:

'கண்ணே செரீன் பானு !'

'மாஞ்சா'வில் தப்பிய கண்மணியின் கண்ணீர்...

ம.பிரியதர்ஜினி

 மனதை ரணமாக்குகிறது அந்த துயரச் சம்பவம்...

'கண்ணே செரீன் பானு !'

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சென்னையைச் சேர்ந்த நாலு வயது குழந்தை செரீன் பானு... அன்று, ''மெரினா பீச்சுக்குப் போவோம்ப்பா...'' என்று கொஞ்சிக் கொஞ்சிக் கேட்டாள். உடனே, தன் டூ-வீலரில் அவளை முன்னால் உட்கார வைத்து, பின்னால் மகன் அமீர் மற்றும் மனைவி அலி ஃபாத்திமாவை ஏற்றிக்கொண்டு எழும்பூர் நீதிமன்றம் அருகில் வந்து கொண்டிருந்தார்... அப்பா ஷேக் முகமது. திடீரென எங்கிருந்தோ பறந்து வந்த பட்டத்தின் மாஞ்சா நூல், செரீனுடைய கழுத்தில் சிக்கிக் கொள்ள, பிரேக் போட்டு நிறுத்தினார் ஷேக் முகமது. ஆனால், அதற்குள்ளாகவே அந்தப் பிஞ்சுக் கழுத்து, மாஞ்சா நூலைத் தாக்குப்பிடிக்கவில்லை. ரத்த வெள்ளத்தில் துடித்தவளை எழும்பூரிலிருக்கும் குழந்தைகள் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றார்கள். ஆனாலும் பரிதாபமாக இறந்து போனது அந்தப் பிஞ்சு.

'அதென்ன மாஞ்சா நூல்..?’ என்பவர்களுக்கு, அதற்குப் பின் விரியும் பின்புலம் அதிர்ச்சியளிக்கும். கண்ணாடி துகள்களை அரைத்துக் கூழாக்கி, அதை கெட்டியான நூலில் தடவுவார்கள். பார்ப்பதற்கு கேசரி கலரில் இருக்கும் அந்த நூல். இதில் பட்டத்தைக் கட்டி பறக்கவிடும்போது... நூல் கெட்டியாக இருப்பதோடு, அதிக உயரத்துக்கு பட்டத்தைப் பறக்க வைக்கும். சமயங்களில் இந்தப் பட்டம் அறுந்து கொள்ளும்போதோ... அல்லது பட்டம் விடுபவர்களுக்கு இடையேயான போட்டா போட்டியில் அறுத்து விடும்போதோ... மிச்சம் மீதியிருக்கும் நூலோடு காற்றின் போக்கில் பயணிக்கும் அந்த பட்டம். வழியில், வண்டியில் பயணிப்பவர்களின் கழுத்தில் அந்த நூல் சிக்கும்போது... அதில் இருக்கும் கண்ணாடி பேஸ்ட், மென்மையான கழுத்தை அறுத்து உயிருக்கே உலை வைக்கும்.

அந்த ரணகளமான வேதனை நிமிடங்கள் எப்படி இருக்கும் என்பதை, மாஞ்சா நூலில் தப்பிப் பிழைத்தவர்களால் மட்டுமே உணர முடியும். அப்படி, எமலோகத்தின் வாயில் வரை சென்று திரும்பி வந்தவர்... தன் வசீகரக் குரலால் ரசிகர்களைக் கட்டிப் போட்டிருக்கும் சென்னை, பிக் எஃப்.எம் ரேடியோவின் பிரபல 'ஆர்ஜே' மற்றும் எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசர் கண்மணி.    மாஞ்சா நூலில் சிக்கி மீண்டு ஓராண்டுக்கும் மேலாகியும், அந்த நிமிடத்து பதற்றம் இன்னமும் கூட சற்றும் விலகவில்லை அவருடைய பேச்சில்...

''அன்னிக்கு ஸ்கூல்ல இருந்து வந்த என் மக நர்மதா குட்டியை, பக்கத்து வீட்டுக்கு விளையாட அனுப்பிட்டு, ரேஷன் கார்டு அப்டேட் வேலைக்காக கிளம்பினேன். வீட்டுல வேலை செய்யற ஆன்ட்டியையும் ஸ்கூட்டியில ஏத்திக்கிட்டு, தெரு முனை திரும்பினப்ப... கண்ணுக்கே தெரியாத ஏதோ ஒண்ணு கழுத்துல பதியறது புரிஞ்சுது. சட்டுனு வண்டியை நிறுத்தினேன்.

வலது பக்கம் இருக்கற ஒரு பட்டத்தை, இடது பக்கம் இருக்கற யாரோ ஒருத்தர் சரசரனு இழுக்க, கரகரனு அறுந்தது என் கழுத்து. அப்போதான் ஒரு கயிறு நம்ம கழுத்தை அறுத்துக்கிட்டிருக்குங்கற விஷயம் புரிஞ்சுது. வண்டியை விட்டுட்டேன். ரத்தம் பொங்கி வழியுது. என்ன பண்றதுனு எனக்கும் தெரியலை... கூடின கூட்டத்துக்கும் புரியல.

'கண்ணே செரீன் பானு !'

வழியில போன ஆட்டோக்காரங்க யாரும் அவசரத்துக்கு வண்டிய நிறுத்த மாட்டேங்கறாங்க. 'கண்மணி... சீக்கிரம் உனக்கு டைம் அதிகமா இல்லை... என்ன பண்ணப் போற?’னு என் மூளை கேட்ட கேள்விக்கு நான் சுதாரிச்சேன். நம்ப மாட்டீங்க... ரத்தம் சொட்ட சொட்ட போன் எடுத்து, என் குழந்தையை விட்டுட்டு வந்தவங்க வீட்டுக்குப் பேசி நிலவரத்தை சொன்னேன். என் ஃப்ரெண்டுக்கு போன் பண்ணி, 'ஏதாச்சும் பண்ணுடி’னேன். சிதம்பரத்துல இருக்கற என் அப்பாவுக்கு போன் பண்ணி, 'என் பொண்ணை பார்த்துக்கோங்க... நான் போறேன்’னு அழுதேன்.

இதுக்கு நடுவுல கூடியிருந்த மக்களோட மிரட்டலுக்குப் பயந்து நிறுத்தின ஒரு ஆட்டோவுல ஏறி, பக்கத்து ஹாஸ்பிட்டல்ல முதலுதவி எடுத்துக்கிட்டேன். பிறகு, ஆம்புலன்ஸுல ஏறி அப்போலோவுக்கு போகும்போது நினைவையும், என் ரத்தத்தையும் இழந்துட்டே இருந்தேன். 'பிழைப்போம்'ங்கற நம்பிக்கை போயிட்டதால, இருக்கற ஒவ்வொரு நிமிஷத்தையும் முழுசா உணர பிரயத்தனப்பட்டேன். 'என் குழந்தை நல்லா இருக்கணும்’ங்கற பிரார்த்தனை மட்டும்தான் மனசுல ஓடிச்சு.

ஹாஸ்பிட்டல்ல என்னை ஐ.சி.யூ. வார்டுக்கு கொண்டு போகும்போது, பார்வை மங்கலா ஆகியிருந்தது. யாரோ சீஃப் டாக்டர் என்னோட கழுத்து காயத்தை விரல்களால விலக்கிப் பார்த்தார். சூடா 'குபுக்’னு வெளிய வந்த ரத்தத்தை பார்த்து... டாக்டர்ஸ் 'ச்’னு உச்சு கொட்டினப்போ, என்னோட சீரியஸ்னஸ் எனக்கு முழுசா புரிய, உயிர் உறைஞ்சுது. அதுக்கப்பறம் அவங்க போட்ட ஊசியில, சுத்தமா நினைவிழந்தேன்.

ரெண்டு நாள் கழிச்சு கண் திறந்தப்போ... ஐ.சி.யூ-லதான் இருந்தேன். கழுத்து, முகம், வாய் எதையுமே அசைக்க முடியாம கட்டியிருந்தாங்க. கை, கால்ல இருந்தெல்லாம் டியூப்கள் உடம்புக் குள்ள ஒடிட்டு இருந்தது.

கொஞ்சம்கூட உடம்பை அசைக்க முடியாம... கழுத்தைச் சுத்தி போடப்பட்ட பெரிய பேண்டேஜோட நான் பட்ட அவஸ்தை, நரக வேதனை. நாலு நாள் கழிச்சு பேண்டேஜை பிரிச்சாங்க. மொத்தம் 26 தையல். 26 சென்டி மீட்டர் நீளம். முதுகுப் பக்கம் தவிர முன் கழுத்து மொத்தத்தையும் மாஞ்சா நூல் அறுத்திருந்தது. மூளைக்கு ரத்தம் போகிற அந்த நரம்பு மட்டும் கட் ஆகியிருந்தா... ஸ்பாட்லயே செத்திருப்பேன்.

'கண்ணே செரீன் பானு !'

அதுக்கப்புறம் நான் குணமாக... வலியோட, நரக வேதனையோட போராடின மாதங்கள் பல. நான் மீண்டு வந்தது என் மகளுக்காக! என் அன்பான நேயர்களோட பிரார்த்தனைகளுக்கு இறங்கி கடவுள் எனக்கு உயிர் பிச்சை கொடுத்தார். அப்போ இதைப் பத்தி மீடியா உலகம் எல்லாரும் சேர்ந்து, மாஞ்சாவுக்கு எதிரா போரே தொடுத்தோம். ஆனா... தீர்ந்ததா பிரச்னை? இதுவரை பல உயிர்களைப் பறிச்சிருக்கற இந்த மாஞ்சா பட்டத்துக்குப் பேரு விளையாட்டா? இது கொலைக் குற்றம் இல்லையா? பட்டத்துக்கு மாஞ்சா

முழு நேரமா தயாரிச்சு விக்கறாங்க சென்னையில. அது போலீஸுக்குத் தெரியாதா?

இதோ... நாலரை வயசுக் குழந்தை செரீன் பானுவோட உயிருக்குப் பதில் யார்கிட்ட இருக்கு..?''

- வேதனையில் பொங்கிய விழி நீர் வழிந்தது கண்மணிக்கு!

' 'பீச்ல மணல்ல ஜாலியா விளையாடலாம்..?’ என்றெல்லாம் நினைத்துக் கிளம்பியிருப்பாளே செரீன் பானு...’ என்ற நினைவும், கண்ணீரும்தான் மீண்டும் மீண்டும் வருகிறது!

படம்: வி.செந்தில்குமார்

'சட்டப்படி குற்றம்!’

'கண்ணே செரீன் பானு !'

'' 'விளையாட்டு’ என்ற பெயரில் இப்படி உயிர் குடிக்கும் விபரீதத்துக்கு எப்போது முடிவு..?'' என்ற கேள்வியுடன் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் ரவியை சந்தித்தோம்.

''மாஞ்சா நூல் தயாரிச்சு விற்பனை பண்றதும், அந்த நூலில் பட்டம் விடுறதும் சட்டப்படி குற்றம். அதையும் மீறி தயாரிக்கிறாங்கனு கேள்விப்பட்டாலே அவங்கள சிறையில தள்ளிடுவோம். அதனால பொதுமக்களோட உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது தெரிஞ்சா, மறைமுகமாக கொலைக்கு காரணமா இருந்தாங்கனு (செக்ஷன் 304 (2))  சொல்லி உள்ள தள்ளிடுவோம். மாஞ்சா நூலைப் பயன்படுத்தி பட்டம் விடுறதை இப்போ முழுசா கட்டுப்படுத்திட்டோம். மற்றபடி சாதாரண நூல்ல பட்டம் விடுறதுல எந்தத் தப்பும் இல்ல. நம்ம சந்தோஷத்தைவிட, மத்தவங்க உயிர் முக்கியம்னு மாஞ்சா தயாரிக்கிறவங்களும், பட்டம் விடுறவங்களும் நினைச்சா... இந்த மாதிரி பிரச்னைகள் வராது'’ என்று அக்கறையோடு சொன்னார் ரவி.