Published:Updated:

கூடவே ஒரு குற்றவாளி!

ஏ.சி.மெஷினுக்குள் ஒளிந்திருந்த வில்லன் !

 இர.வரதராஷன்
ஓவியம்: அரஸ்


ஆபத்துகளை அடையாளம் காட்டும் தொடர்!

 நாலு சுவருக்குள் நடக்கும் அந்தரங்க விஷயங்களையும், நெட்டில் உலவவிட்டு அசிங்கப்படுத்தும் அவலத்தை என்னவென்று சொல்வது? திருமணம் முடிந்து ஒரு வாரமான நிலையில், மாப்பிள்ளைக்கு மொபைலில் அந்த பேரிடி செய்தி வந்தது.

கூடவே ஒரு குற்றவாளி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''சொல்லவே ரொம்ப தயக்கமா இருக்குடா... சொல்லாம விட்டா... விபரீதம் இன்னும் பெருசாயிடும்...'' என்ற பீடிகையுடன் ஆரம்பித்த மாப்பிள்ளையின் நண்பர், ''காலையில 'நெட்’-ஐ ஆன் செஞ்சேன்... நீயும் உன் மனைவியும் படுக்கையில தனியா இருக்கற காட்சிகளை யாரோ அப்லோட் பண்ணியிருக்காங்கடா. உடனே ஏதாவது செஞ்சு அதை ஸ்டாப் பண்ணு'' என்ற நண்பரின் குரலைக் கேட்ட புது மாப்பிள்ளையின் சப்தநாடியும் ஒடுங்கியது. அதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்தார் மணப்பெண்!

'படுக்கையறைக் காட்சிகள் எப்படி சந்திக்கு வந்தன... அதை எடுத்தது யார்..?’

 ##~##

- உடனடியாக தனியார் துப்பறியும் நிறுவனம் ஒன்றை அணுகியது அந்த புத்தம்புது ஜோடி. இதில் ரகசிய கேமராக்கள் பயன்படுத்த அதிக வாய்ப்பிருப்பதால், ''ரகசிய கேமரா தொழில்நுட்பம் தெரிஞ்ச உங்களோட டெக்னிஷியனை கூட்டிட்டு வாங்க...'' என்றபடி அந்நிறுவனம் எங்களின் உதவியை நாட, நாங்களும் கைகொடுத்தோம்.

''உங்க வீட்டு பெட் ரூமை சோதிக்கணும்...'' என்று நாங்கள் சொன்னபோது, ''இல்ல... ஒரு வாரமா ஹனிமூன் போயிட்டு நேத்துதான் வந்தோம். இது ஓட்டல்ல நடந்த சதியாதான் இருக்கணும்...'' என்றார் மாப்பிள்ளை.

உடனடியாக அவர்களை அழைத்துக்கொண்டு பிரபல சுற்றுலா தலத்தில் இருக்கும் அந்த ஹோட்டலுக்குச் சென்றோம். அது, மிகவும் புகழ்பெற்ற ஒரு ஹோட்டல். 'மணமக்கள் தங்கியிருந்த அறையை ஹோட்டல் நிர்வாகத்தினர் சோதனையிட அனுமதிப்பார்களா..?’ என்று சந்தேகம் எழ, அதே அறையை தந்திரமாக புக் செய்து உள்ளே நுழைந்தோம். அறை முழுவதும் சோதனை செய்தோம்.

ரகசிய கேமராக்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஒயர் பொருத்தியது. இதை எளிதில் கண்டுபிடித்து விடலாம். காரணம், இந்த வகை கேமராக்களின் ஒயர், கம்ப்யூட்டரிலோ அல்லது டி.வி-யிலோ இணைக்கப்பட வேண்டும். அந்த அறையில் அத்தகைய கேமராக்கள் எதுவுமில்லை.

அடுத்தது, ஒயர்லெஸ் கேமரா... இதை லேசில் கண்டுபிடிக்க முடியாது. அதற்கென இருக்கும் பிரத்யேக கருவியை உபயோகித்து 'ஓயர் இல்லாத கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா?’ என்று சோதனை செய்தோம். சுவர்கள், சுவர்க்கடிகாரம், பூந்தொட்டி, கண்ணாடி... இப்படி அனைத்திலும் சோதனை செய்தும் எங்கும் தென்படவில்லை. இறுதியில்... ஏ.சி. மெஷினுக்குள் கண்சிமிட்டியது அந்த ரகசிய கேமரா!

கண்டிப்பாக, ஏ.சி. மெஷின் நுணுக்கம் தெரிந்த ஒருவன்தான் இதைச் செய்திருக்க முடியும். ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் விஷயத்தைச் சொன்னபோது, அதிர்ந்தது போனவர்கள் அப்படி நடக்க வாய்ப்பில்லை என்று வாதிட்டனர். நாங்கள் ஆதாரபூர்வமாக நிரூபித்ததும்... மிகவும் வருந்தியவர்கள் எங்கள் விசாரணைக்கு முழுமையாக உதவினார்கள். ஹோட்டலின் ஏ.சி. மெஷின்களை சர்வீஸ் செய்பவனைப் பிடித்து, 'விசாரிக்கும்’ விதத்தில் விசாரிக்க, ரகசிய வில்லன் அவன்தான் என்பது உறுதியானது. 'சர்வீஸ் செய்கிறேன் பேர்வழி' என்று கேமராக்களை பொறுத்துவதும், பதிவான காட்சிகளை இன்டர்நெட்டில் விற்பதுமாக இருந்திருக்கிறான்.

பல ஓட்டல்களில் நிர்வாகத்துக்குத் தெரியாமல் ஏ.சி. மெக்கானிக், ரூம் பாய், லாண்டரி பையன் என்று அங்கே வேலை செய்பவர்களில் சிலர் இப்படித்தான் ஈனச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். பிரபல தமிழ் சினிமா நடிகை ஒருவர், அண்டை மாநிலத்துக்குச் செல்லும்போது குறிப்பிட்ட ஒரு ஹோட்டலில், குறிப்பிட்ட ஓர் அறையில்தான் தங்குவார். இதைத் தெரிந்து கொண்ட அந்த ஹோட்டல் ஊழியர், ரகசிய கேமராவை அந்த அறையில் பொருத்தி, அந்த நடிகையின்      'அந்தரங்க படங்களை’ இன்டர்நெட்டில் உலவவிட்டது சில ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்டது நினைவிருக்கலாம். சில ஹோட்டல்களில் நிர்வாகமே இத்தகைய செயலில் ஈடுபடும் கயமைத்தனமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆக, நம்முடைய பாதுகாப்பு நம் கையில்தான்!

தோழிகளே... நாம் எத்தகையதொரு அபாயகரமான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை இத்தனை இதழ்களாக நான் எடுத்து வைத்த உண்மைச் சம்பவங்களில் இருந்து உணர்ந்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன். நீங்களோ... உங்கள் உறவினர்களோ... நண்பர்களோ... யாரோ ஒருவர், இப்படிப்பட்ட அபாய வலைகளுக்குள் சிக்குவதற்கு நிறையவே வாய்ப்பிருக்கிறது.

இதையெல்லாம் கேள்விப்பட்டதுமே... 'ஐயோ' என்று தலையில் கைவைத்துவிடாதீர்கள். அது சதிகாரர்களுக்கு சாதகமாக மாறிவிடும். மாறாக, இத்தகைய ரகசிய சதிகளை எல்லாம் உணர்ந்து, அவற்றில் சிக்கிவிடாமல் தப்பிக்கும் உஷார்த்தனத்தை வளர்த்துக் கொள்வதோடு, மற்றவர்களிடமும் வளர்த்தெடுத்தெடுங்கள்... உலகம் உங்களுடையதாக மாறும்! வாய்ப்பு கிடைக்கும்போது மீண்டும் சந்திப்போம்!

நிறைவடைந்தது 

உஷார்!

 

வெளியூர் செல்லும்போது பெண்கள் தங்குவதற்கு நம்பிக்கையான ஹோட்டல்களையே தேர்ந்தெடுக்க வேண்டும்.

ரூமுக்குச் சென்றதும் முதல் வேலையாக கண்ணாடி, விளக்குகள், கர்ட்டன்கள், பூ ஜாடிகள், குளியலறை என்று எங்கும் ஒரு முறை 'கேமரா எதுவும் இருக்கா..?’ என்று நோட்டம்விட வேண்டும்.

ரூம் பாய், லாண்டரி பையன், கிளீனிங் என்று அறைக்கு வருபவர்கள் மீது ஒரு கண் இருக்கட்டும்.

 குளியலறையில் விளக்கை அணைத்து, அல்லது குறைவான வெளிச்சத்தில் குளிக்கலாம். உடை மாற்றும்போதுகூட கவனம் தேவை.

அந்தரங்க விஷயங்களை ஹோட்டல் அறைகளில் தவிர்ப்பது நலம்.