Published:Updated:

என்று தணியும் இந்த 33 % ?

என்று தணியும் இந்த 33 % ?

நாச்சியாள்

என்று தணியும் இந்த 33 % ?

ஆண்டாண்டு கால பிரச்னை அது. அரசியல் அரங்கில் பெண்களுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் 33 சதவிகித இடஒதுக்கீடு அவசியம் என்று சில கட்சிகள் குரல் எழுப்பின. சில கட்சிகள் அந்தக் குரல் வந்த திசையில், 'கூடாது... கூடவே கூடாது’ என்று எதிர்க்குரல் எழுப்பின. இருந்தபோதும், 1996-ம் ஆண்டில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு மசோதா வரையறை செய்யப்பட்டு, பலமுறை அது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, பல காரணங்களால் நிறைவேற்றப்படாமல்... இந்த 2011 வரை சட்டம் ஆக்கப்படாமல், பெண்களை ஒரு சதுரத்துக்குள்ளேதான் வைத்திருக்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதோ... ஏப்ரல் 13-ம் தேதி, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஏறக்குறைய தமிழகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளுமே 33 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு 'ஜே' போடுபவைதான். அந்தக் கட்சிகளில் எத்தனை கட்சிகள், தங்களின் வேட்பாளர்களில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டை கொடுத்திருக்கின்றன என்று ஆர்வமாகத் தேடினால்... ஏமாற்றமே மிஞ்சுகிறது.

தி.மு.க - 9%, அ.தி.மு.க - 8%, காங்கிரஸ் - 6%, தே.மு.தி.க - 5%, பா.ம.க - 0%, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 16%, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 0%, விடுதலை சிறுத்தைகள் கட்சி - 10%, பி.ஜே.பி - 4%.

##~##

- இதுதான் இப்போதைக்கு கிடைத்திருக்கும் ஒதுக்கீடு. சரிபாதிக்கு இல்லாவிட்டாலும் கால் பகுதியாகக்கூட ஒரு கட்சியினரும் பெண்களை முன்னிறுத்தவில்லை என்பதுதான் நெஞ்சைச் சுடும் உண்மை.

'பெண்களுக்கு ஏன் உரிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை..?’ என்ற சமூக மாற்றம் விரும்பும் பலரின் ஆதங்கக் கேள்வியை, அரசியலில் நம்பிக்கையுடன் இயங்கிக் கொண்டிருக்கும் இரு முக்கிய பெண்களிடம் கேட்டோம்.

''அரசியலில் பெண்கள் இயங்க முடியாத அராஜகமான, கடினமான சூழ்நிலை நிலவுவதால், பெண்கள் அரசியலுக்கு வரத் தயங்குகிறார்கள் என்பது பழைய உண்மை. இன்று காலமும் சூழலும் மாறியிருக்கிறது. அந்தக் காரணம் இப்போது பொருந்தாது...'' என்று சூடாக ஆரம்பித்தார் சமத்துவ மக்கள் படை நிறுவனரும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சிவகாமி.

''அப்பட்டமான உண்மை என்னவென்றால், எந்தக் கட்சியும் இங்கு பெண்களுக்குப் பொறுப்பு தரத் தயங்குகிறது என்பதுதான். காரணம், தலைமையில் இருப்பவர்கள் பாலின ஒடுக்குமுறையை எதிர்க்கும் சிந்தனை உடையவர்களாக இருப்பதில்லை. பெண்களுக்கு ஒன்றியத் தலைவியாக, வட்டச் செயலாளராக, மாவட்டப் பொறுப்பாளராக பதவி கொடுக்க எந்தக் கட்சித் தலைமையும் முன் வருவதில்லை. அப்படி ஒரு வாய்ப்பு தரப்பட்டு அங்கு அவர்கள் மக்களோடு சேர்ந்து பணியாற்றினால்தானே... அரசியல் அரிச்சுவடியைக் கற்றுக் கொள்ள முடியும்? அப்படிப்பட்ட கீழ் மட்ட பொறுப்புகளில் இருந்து தன் செயல்பாடுகளால் கட்சிக்குள் முன்னேறி வரும் பெண்களால்தானே 'எனக்கு இந்தத் தொகுதியைக் கொடுங்க’ என்று தலைமையிடம் உரிமையோடு கேட்க முடியும்? அப்படி ஒரு சூழலை உருவாக்காமல், 'அவரின் மனைவி', 'இவரின் மகள்’, 'அந்த அமைச்சரின்

என்று தணியும் இந்த 33 % ?

மருமகள்’, 'இவரின் பேத்தி’ என்ற அடையாள அட்டையைத்தான் அரசியல் கட்சிகள் இங்கு தங்கள் பெண் வேட்பாளர்களுக்கான தகுதியாக வைத்திருக்கின்றன...'' என்று சாட்டை சுழற்றினார்.

தீவிர அரசியலில் 30 ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கும் தி.மு.க-வைச் சேர்ந்த சுப்புலட்சுமி ஜெகதீசனை தொடர்பு கொண்டபோது மணி மாலை 4.30. ''இப்போதுதான் சாப்பிடுகிறேன். காலையில் காங்கேயத்தில் கூட்டம், இப்போது திருப்பூரில் கூட்டம், இரவு ஈரோட்டில்...'' என்றவர், நம் கேள்வியைக் கேட்டதும், ''அரசியலில் தொடர்ந்து நிலைத்து நிற்கக் கூடிய மன உரம் பெண்களுக்கு வாய்ப்பது இல்லை'' என்று உண்மையின் இன்னொரு பக்கத்தைக் காட்டினார்.

''காரணம்... ஒரு நடுத்தரக் குடும்பப் பெண் அரசியலுக்கு வருகிறார் என்றால், அவரால் அரசியல் பணியையும் வீட்டுச் சுமைகளையும் ஒரே நேரத்தில் சுமக்க முடியவில்லை. அதனால்தான் இந்த எலெக்ஷனில் போட்டியிடுபவர் அடுத்த எலெக்ஷனில் காணாமல் போய்விடுகிறார். 'என்னால் இரட்டைச் சுமைகளையும் தாங்க முடியும், எந்தக் கடினமான சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள முடியும்’ என்ற அசாத்தியமான மன தைரியத்தை வளர்த்துக் கொள்பவர்கள் அரசியலுக்கு வந்தால்தான்... 33% என்பது சாத்தியப்படும்.

அப்படி அடிபட்டு, அனுபவப்பட்டு போராடி சட்டமன்றத்துக்கோ, நாடாளுமன்றத்துக்கோ செல்பவர்களால்தான் ஒரு பிரச்னைக்காக நின்று வாதாட முடியும்'' என்று தான் இத்தனை ஆண்டு கால அனுபவத்தில் உணர்ந்த நிதர்சனத்தைப் பகிர்ந்தார்!

மாற்றம் வரக் காத்திருப்போம்!

''ஒரு பெண் எம்.எல்.ஏ- வாக கடந்த ஐந்தாண்டுகளில் உங்களால் சிறப்பாக செயல்பட முடிந்ததா?'' என இரண்டு பெண்களிடம் கேட்டோம்...

என்று தணியும் இந்த 33 % ?

பாலபாரதி (திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ):

'' 'ஒரு பெண் என்பதால் ஒடுங்கியோ, நடுங்கியோ போகக் கூடாது’ என்கிற தீர்மானம் என் மனதுக்குள் எரிந்துகொண்டே இருந்ததால், என்னால் இங்கு சிறப்பாக செயல்படக் கூடிய சூழலை உருவாக்கிக் கொள்ள முடிந்தது. சட்டமன்றத்தில் பேசும்போது சிலசமயங்களில் நம் நியாயமான கோபங்களை, உணர்வுகளை ஆண்களைப் போல் வன்மையாக சொல்ல முடிவதில்லை; மென்மையாகச் சொல்லப்படும்போது... அவை உரிய வீச்சில் போய் சேருவதில்லை. அதற்காக சோர்ந்துவிடாமல், அவையை நம் பக்கம் திருப்புமளவுக்கு வலிமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற 'வில் பவரில்’தான் எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறேன்!''

என்று தணியும் இந்த 33 % ?

காயத்ரிதேவி, (மதுராந்தகம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ):

''பெண் என்ற அடையாளத்தை நான் ஏன் சுமந்துகொண்டே இருக்க வேண்டும்? சட்டமன்றத்துக்குள் நுழைந்து விட்டால் ஒரு எம்.எல்.ஏ... அவ்வளவுதான். 'நம் பணிகளை முழுமையாகச் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறதா? அதை எப்படி செய்ய வேண்டும்..?’ என்று பிளான் செய்தாலே ஆண் - பெண் பாகுபாட்டை கடந்து வந்து, ஜெயிக்க முடியும். நான் அவ்வாறுதான் செயல்பட்டேன்; செயல்படுவேன். பெண் என்பதால் மற்றவர்களைவிட அறிவில் இருமடங்காக இருப்பதும், எப்போதும் எல்லாமும் தெரிந்து இருப்பதும் மிக மிக முக்கியம்!''