Published:Updated:

சிறகை விரித்து பறப்போம்...நம் உறவில் உலகை அளப்போம் !

சிறகை விரித்து பறப்போம்...நம் உறவில் உலகை அளப்போம் !

தென்றல்

வெளியே வெயில் எப்படிக் கொளுத்தினாலும் வீட்டுக்குள் நுழையும் கணவனின் கையில் தண்ணீர் கொடுத்து ''ரொம்ப வேலையா..?'' என்று கண்கள் பார்த்துக் கேட்கும் மனைவியும், அடுப்படி வியர்வையில் குளிக்கும் மனைவியிடம் ''சம்மர் ஆரம்பிச்சுடுச்சு... இனி கூட்டு, பொரியல், அவியல்னு சிரமப்படாதப்பா. சிம்பிளா சமையலை முடிச்சுக்கோ...'' என்று அக்கறை பேசும் கணவனும் இருக்கும் இல்லறங்களில் மட்டும்... கோடையிலும்கூட கூல் கூல்தான்!

அப்படி ஒரு 'ஜில்’ தம்பதியைச் சந்தித்தோம். அது... குடும்பமாக கூடி உட்கார்ந்து பார்க்கக் கூடிய படங்களை மட்டுமே எடுக்கக்கூடிய இயக்குநர் விக்ரமன் - குச்சுப்புடி நடனக் கலைஞர் ஜெயப்ரியா தம்பதி! அன்பினால் குளிரூட்டப்பட்ட அவர்களின் இல்லற சூத்திரத்தை இருவரும் இங்கே பகிர்கிறார்கள்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சிறகை விரித்து பறப்போம்...நம் உறவில் உலகை அளப்போம் !
##~##

''எங்க திருமண வாழ்க்கைக்கு இப்ப 16 வயசு. அவரோட விருப்பங்கள் வேறு, என் விருப்பங்கள் வேறு. ஆனாலும் இத்தனை வருஷமா எங்க உறவை நாங்க இன்னும் உயிரோட்டத்தோட வெச்சிருக்கறதுக்கு முதல் காரணம், ரெண்டு பேரும் ஒருத்தரோட உணர்வை மற்றவர் மதிக்கறதுதான்!'' என்று ஜெயப்பிரியா சொன்னதை அத்தனை ஆர்வமாக தலையசைத்து ஆமோதித்த விக்ரமன்,

''விட்டுக் கொடுத்தா நிம்மதியா வாழ்க்கை போகும்ங்கிறது எல்லாரும் சொல்ற ஜெனரல் ரூல். ஆனா, எப்பவும் ஒரு தரப்பு மட்டும் விட்டுக் கொடுத்தா... அங்க சலிப்பும் வெறுப்பும்தான் மிஞ்சும். 'உன்னால பிரச்னைங்கிறபோது நீ இறங்கி வந்தே... இப்ப இந்த பிரச்னை என்னால... ஸாரி, மன்னிச்சுடு!’னு ரெண்டு தரப்பும் மாத்தி மாத்தி விட்டுக் கொடுத்துக்கிட்டாதான், காதல் அங்க ஓங்கி, தாங்கி தழைக்கும்!'' என்று படுயதார்த்தமாக எடுத்து வைத்தார் தன் தரப்பை!

''இந்த வாழ்க்கையை இவர்கூட சேர்ந்து ஒரு முறைதான் வாழப் போறோம். அதை முடிந்த அளவுக்கு எவ்வளவு அழகா, அற்புதமா, சந்தோஷமா வாழ முடியுமோ அந்தளவுக்கு வாழ்ந்துடணும்ங்கற எண்ணம் எனக்கு எப்பவும் இருக்கும். அவருக்கு சாப்பாட்டுல கிழங்கு வகைகள் எதுவும் பிடிக்காது. அதை அவர் சொல்லாமலே புரிஞ்சுக்கிட்ட நிமிஷத்துலிருந்து கிழங்குகளுக்கு என் சமையல் அறையில் 'தடா’ போட்டுட்டேன்! என் பையன் கனிஷ்கா, பொண்ணு பூஜா பிரதியூஷா ரெண்டு பேருக்கும் எங்க அம்மா வீட்டுல இருந்துதான் அந்த அயிட்டங்கள் வரும். என் விருப்பம் அது, உன் விருப்பம் இதுனு தனியா பிரிக்காம... இது நம் விருப்பம் என்றாகும்போது... அது வாழ்க்கையில்லைங்க... பெரும் வரம்!'' என்று குளிர்ந்தார் ஜெயப்பிரியா.

தொடர்ந்தவர், ''ஒவ்வொரு பெண்ணுக்குள்ளேயும் ஒரு தனித்திறமை இருக்கும். அதை என்கரேஜ் பண்றதுதான் உண்மையான அன்பு. மரியாதை. எனக்கு குச்சுப்புடி டான்ஸ்ல இருக்கற இன்ட்ரஸ்ட்டை புரிஞ்சுக்கிட்டவர், இன்னிவரைக்கும் நான் இந்த உலகத்துல எங்க போய் புரோகிராம் பண்றதுக்கும் சப்போர்ட் பண்றார். அந்த மாரல் சப்போர்ட்தான் அவரை இன்னும் இன்னும் அதிகமா நேசிக்க வைக்குது.

சிறகை விரித்து பறப்போம்...நம் உறவில் உலகை அளப்போம் !

அவரோட 'வானத்தைப் போல’ படம் நேஷனல் அவார்டு வாங்கினப்போ டெல்லிக்குப் போயிருந்தோம். அங்க ஜூரியா இருந்த வைஜெயந்தி அம்மாவைப் பார்த்தோம். நான் அவர்கிட்ட 'அம்மாகூட ஒரு போட்டோ எடுத்துக்க முடியுமா?’னு என் ஆசையை சொல்ல, நிமிஷம்கூட யோசிக்காம அவங்க கிட்டயே போய் 'என் மனைவி உங்ககூட ஒரு போட்டோ எடுத்துக்கணும் விரும்பறாங்க மேடம்’னு சொன்னார். உடனே என்னைப் பார்த்தவங்க, 'இவளைத் தெரியாதா... நல்ல டான்ஸர் ஆச்சே!’னு சொல்லி அணைக்க, கேமரா வுல பதிவாச்சு அந்த சந்தோஷ தருணம்'' என்று ஜெயப்ரியா நிறுத்த,

''இப்படித்தான் ஒவ்வொரு பொண்ணுக்கும் சின்னச் சின்ன ஆசைகள் நிறைய இருக்கும். சிலருக்கு வகை வகையா சாப்பிடுறது பிடிக்கும், சிலருக்குப் புடவை பிடிக்கும், சிலருக்கு குடும்பத்தோட வெளிய போறது பிடிக்கும். அந்தச் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேத்திட்டாலே பெண்கள் பூரணமா மனம் குளிர்ந்துடுவாங்க. இந்தப் புரிதல் இல்லாததாலதான் பல வீட்டுலயும் பிரச்னை!'' என்றார் விக்ரமன் பெண்களின் உலகத்துக்கு மிக நெருங்கி வந்து.

''முக்கியமானது... ஒருத்தர் மேல ஒருத்தர் வெச்சிருக்கிற நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் நம்மை நம்மளோட ஒரிஜினாலிட்டியோடவும், அன்போடவும் நட்போடவும் காதலோடவும் வெச்சிருக் கும். காதல் குறையாம இருக்கணும்னா... எவ்வளவு பிஸியா இருந்தாலும் குடும்பத்துக்குனு நேரம் ஒதுக்கணும். இது எங்க லைஃப்ல நாங்க பின்பற்றும் ஸ்ட்ரிக்ட் ரூல். அதேமாதிரி குழந்தைகள் வளர்ப்புல நான்தான் செய்யணும், நீதான் செய்யணும்னு இல்லாம ரெண்டு பேரும் எல்லாத்தையும் கலந்து செய்வோம். இதெல்லாம்தான் இந்த பதினாறு வருஷங்களை சந்தோஷமா, இனிமையா, குளிர்ச்சியா கடக்க வெச்சிருக்குனு நம்புறோம்!''

- பரஸ்பரம் முகம் பார்த்து முடிக்கிறார்கள் விக்ரமனும், ஜெயப்ரியாவும்!