Published:Updated:

மங்கலம் பொங்க வைக்கும் ‘மங்கல தேவி’!

இதோ எந்தன் தெய்வம்! - 11ஜி.பிரபு ஆன்மிகம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

வாழ்வில் வஞ்சிக்கப்பட்டு உயிரிழந்து வரலாறாகிவிட்ட பெண்கள்; மற்றவர்களுக்காக உயிர்த் தியாகம் செய்து மனதில் பதிந்துவிட்ட பெண்கள்; கொடுமை கண்டு பொங்கி எழுந்து போர்ப்பரணி பாடிய பெண்கள்... என பல பெண்கள், பல்லாயிரம் ஆண்டுகளாக நம் மக்களின் மனங்களில் தெய்வங்களாக குடிகொண்டிருக்கின்றனர். அதில் பலருக்கும் கோயில்களைக் கட்டி, இன்றளவும் பூஜித்துக் கொண் டிருக்கின்றனர் மக்கள்.

சைவம், வைணவம் என பல பிரிவுகள் உருவாகி, பலவித தெய்வங்களும் தோன்றினாலும்... இத்தகைய 'நாட்டார் தெய்வ வழிபாடு' என்பது, ஆயிரமாயிரம் காலமாக மக்களின் ஊனோடும் உயிரோடும் கலந்த ஒன் றாகவே இன்றளவும் நீடிக்கிறது. அப்படி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் செய்து கொண் டிருக்கும் மங்கலதேவி கண்ணகியை, இந்த இதழில் தரிசிக்கலாம் வாங்க.

இன்றளவும் கற்புக்கு உதாரணமாக சொல்லப்பட்டு வரும் சிலப்பதிகார கதாநாயகி கண்ணகி, தெய்வமானது எப்படி?

சோழ நாட்டின், பூம்புகாரில் கோவலன் எனும் வணிகரின் மனைவியான கண்ணகி, சந்தர்ப்பவசத்தால் கணவரைப் பிரிந்திருக்கும் சூழலில், மாதவி எனும் நடன மங்கை கதைக்குள் வருகிறார். கூடா நட்பால் தன் செல்வம் அனைத்தையும் கோவலன் இழக்க... திருந்தி வரும் கணவனுடன் பிழைப்புக்காக மதுரைக்கு செல்கிறார் கண்ணகி. அங்கே, பாண்டிய மன்னனின் மனைவி கோப்பெருந்தேவியின் காற்சிலம்பை திருடியதாக பொய்க்குற்றம் சாட்டப்பட்டு... மரண தண்டனையில் உயிரை இழக்கிறார் கோவலன். நியாயம் கேட்க சீறிப் புறப்பட்ட கண்ணகி, கணவன் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க... மன்னனும், மனைவியும் உயிரிழக்க... மதுரையையே தீக்கிரையாக்குகிறார் கண்ணகி.

மங்கலம் பொங்க வைக்கும் ‘மங்கல தேவி’!

அதற்குப் பிறகும் உக்கிரம் தணியாத கண்ணகி, தெற்கு திசையில் 14 நாட்கள் நடந்து, கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்கு வருகிறார். வேங்கை மரங்கள் நிறைந்திருந்த அக்கானகத்தில், மலைவாழ் மக்களான குன்றக்குறவர்கள் (வேடர்கள்) அவளை ஆச்சர்யமாக பார்க்கின்றனர். சிறிது நேரத்தில், விண்ணுலகிலிருந்து புஷ்பக விமானத்தில் வந்த கோவலன், கண்ணகியை அழைத்துச் சென்றுவிடுகிறார். இதைக்கண்டு ஆச்சர்யமடைந்த குன்றக்குறவர்கள், அவளை தெய்வமாக பாவித்து 'மங்கல தேவி’ என்று பெயரிட்டு வணங்க ஆரம்பிக்கின்றனர்.

ஒரு சமயம், மலை வளம் காண இப்பகுதிக்கு வந்த சேரன் செங்குட்டுவனிடம், குன்றக்குறவர்கள் இந்த விஷயத்தைக் கூற... வந்தது கண்ணகி என்பதையறிந்து சந்தோஷப்படுகிறார். 'உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்’ எனும் சிலப்பதிகார வாசகத்துக்கு ஏற்ப, அவளுக்கு கோயில் எழுப்ப விருப்பம் கொண்டு... இமயமலையிலிருந்து கல் எடுத்து, அதை கங்கையில் நீராட்டி, கண்ணகிக்கு சிலை வடித்து கம்பம் - கூடலூர் பகுதியில் உள்ள இந்த மலையில் கோயில் கட்டி பிரதிஷ்டை செய்துள்ளார். இப்பகுதியில் கண்ணகி நீராடிய மங்கல தீர்த்தக்குளம் இன்னமும் இருக்கிறது.

காப்பிய நாயகி குடிகொண்டிருக்கும் அந்தக் கோயில் பற்றி நம்மிடம் பேசிய அதன் அறக்கட்டளை நிர்வாகக்குழு உறுப்பினர், பஞ்சுராஜ்... ''இது கண்ணகி கோயில்னு தெரிஞ்சாலும், சேரன் செங்குட்டுவன் கட்டுன கோயில்ங்கறது ஆரம்பத்துல வெளியில தெரியாம இருந்துச்சு. 1963-ம் வருஷம், சில ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகள் நடத்தி, சிலப்பதிகாரத்துல இந்த மலை அமைப்பை இளங்கோவடிகள் எழுதிஇருக்கறத வெச்சு, இந்த மலைதான்னு உறுதிப்படுத்தினாங்க.

மங்கலம் பொங்க வைக்கும் ‘மங்கல தேவி’!

கம்பம் பள்ளத்தாக்குல இருக்குற மக்கள்தான் ஆரம்பத்துல வழிபட்டாங்க. 1893-ம் வருஷத்துல ஆங்கிலேயர் காலத்துல அரசாங்கமே பாதை போட்டுக் கொடுத்துருக்கு. கிட்டத்தட்ட ரெண்டாயிரம் வருஷமா இங்க வழிபாடு நடந்துட்டுருக்கு. முன்ன ஒரு வாரம், பத்து நாள்னு விழா நடந்துட்டு இருந்துச்சு. மொழிவாரி மாநிலங்களா பிரிக்கறப்போ, கோயிலுக்கு போற பாதை கேரளா எல்லைக்குள்ள போயிடுச்சு. அதனால நிறைய கெடுபிடிகள். இப்போ, ஒவ்வொரு வருஷமும் சித்ரா பவுர்ணமி அன்னிக்கு மட்டும்தான் மலைக்கு போய் கும்பிட அனுமதி கொடுக்குறாங்க. அறக்கட்டளை மூலமா வழிபாடு நடத்துறோம்.

சேரன் செங்குட்டுவன் பிரதிஷ்டை பண்ணின அந்த சிலை இங்க இல்லை. அதை உடைச்சுட்டாங்க. அதனால, நாங்க மேல போறப்பவே சிலையைக் கொண்டு போய் ஆகம விதிப்படி பிரதிஷ்டை பண்ணி... சுருளி அருவி தீர்த்தத்துல அபிஷேகம் செஞ்சு, சந்தனக்காப்பு இட்டு, தயிர் சாதம் நைவேத்யம் பண்ணுவோம். சாயங்காலம் ஆகம விதிப்படி செய்ய வேண்டிய விஷயங்களை செஞ்சு முடிச்சு, சிலையைக் கீழ எடுத்துட்டு வந்துடுவோம்.

மங்கலம் பொங்க வைக்கும் ‘மங்கல தேவி’!

பொதுவா எல்லா சமுதாயத்துக்காரங்களுமே கண்ணகியை சக்தி மிக்க தெய்வமா வழிபடறாங்க. வணிகர் குலத்தில் கோவலன் அவதரிச்சதால, காரைக்குடியை சேர்ந்த வணிகர்கள்ல ஒரு பிரிவினர், அவங்களோட குலதெய்வமாவும் கும்பிடறாங்க'' என்று சொன்ன பஞ்சுராஜ்,

''குழந்தை இல்லாதவங்க, பிள்ளை வரம் வேண்டி அங்க இருக்குற மரத்துல தொட்டில் கட்டினா... பிள்ளை வரம் கிடைச்சுடுது. கல்யாணம் ஆகாதவங்க வேண்டிக்கிட்டா... கல்யாணம் ஆகிடுது. இப்படிப்பட்ட பக்தர்கள் கொடுக்கிற நன்கொடையிலதான் மலைக்கு வர்றவங்க எல்லாத்துக்கும் அன்னதானம் கொடுக்கறோம். மங்கல தேவிகிட்ட என்ன பிரச்னைகள சொன்னாலும்... அதை தீத்து வெச்சுடுவா. அதுக்கு சாட்சி... வருஷா வருஷம் கூடிட்டே போற பக்தர்களோட எண்ணிக்கைதான். இந்த வருஷ சித்ரா பௌர்ணமிக்கு, கிட்டத்தட்ட முப்பதாயிரம் பேர் வந்தாங்க'' என்று சொல்லி ஆச்சர்யம் கூட்டினார்!

படங்கள்: வீ.சக்தி அருணகிரி

நிறைவடைந்தது

வழிகாட்டி

டல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 380 அடி உயரத்தில், மேற்கு தொடர்ச்சி மலை மீது அமைந் திருக்கும் கோயில் இது. சித்ரா பௌர்ணமி அன்று மட்டும் குமுளி பேருந்து நிலையத்தில் இருந்து, கோயிலுக்கு ஜீப்கள் இயக்கப்படுகின்றன. மற்ற நாட்களில் அனுமதி இல்லை. பெரும்பாலான பக்தர்கள் மலைப் பாதையில் நடந்தே ஏறி வருகிறார்கள். விழா அன்று ஐந்து கால பூஜைகள் நடக்கின்றன. கணவனைப் பிரிந் திருக்கும் பெண்கள் மீண்டும் ஒன்று சேரவும், தீர்க்க சுமங்கலியாக இருக்க, கோப குணம் குறைய, கணவன் மீதான பாசம் அதிகரிக்க, திருமண பாக்கியம் கிடைக்க என பலவற்றுக்கும் இங்கே வேண்டிக்கொள்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு