பிரீமியம் ஸ்டோரி

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

குட்டீஸ் குறும்பு!

150

குட்டீஸ் குறும்பு!

'அக்கா... எனக்கு ஒரு டவுட்டு!’

பக்கத்து வீட்டு மூன்று வயது சுட்டி ரமோலா, பள்ளி செல்லும் வழியில் ஒரு மாடு சாணம் போடுவதைப் பார்த்துவிட்டாள். உடனே அவளுக்கு ஒரு சந்தேகம்! ஐந்து வயதுடைய தன் அக்காவிடம், ''அக்கா... அமெரிக்கா, ஆஸ்திரேலியால இருக்கற மாடுகள் எல்லாம் சாணி போடுமா?'' என்று அவள் கேட்க, அவளுடைய அக்கா, ''ஊர் உலகத்துல தீனி தின்னுற எல்லா மாடுகளும் சாணி போடும்!'' என்று 'பட்’ என்று பதில் கூற... அருகில் இருந்த அனைவரும் 'பக்’கென்று சிரித்துவிட்டோம்!

- இந்திராணி, சேத்துப்பட்டு

குட்டீஸ் குறும்பு!

'காக்கா... நல்ல காக்கா!’

ஒரு ஞாயிறன்று ஆசை ஆசையாக பிளாஸ்டிக் ஷீட்டில் அரிசி வடகம் பிழிந்து, மொட்டை மாடியில் கொண்டு போய் காய வைத்தேன். அன்று மாலை வடகத்தை எடுக்கச் சென்ற எனக்கு அதிர்ச்சி. முக்கால்வாசி வடகத்தை காகங்கள் கபளீகரம் செய்திருந்தன.

''சே! இந்தக் காக்காங்களே சுத்த மோசம்'' என நான் அங்கலாய்க்க... என் ஆறு வயது

குட்டீஸ் குறும்பு!

பாவனாக்குட்டி, ''அம்மா! காக்கா எல்லாம் நல்ல காக்காதான். நாம பாவம்னு நினைச்சு ஃபுல்லா காலி பண்ணாம, கொஞ்சம் வடகத்தை மிச்சம் வெச்சுருக்குல்ல!'' என்றதும், நான் மனம்விட்டு சிரித்ததுடன், அவளுடைய 'பாஸிட்டிவ் அப்ரோச்’சையும் கண்டு வியந்தேன்!

- ஆர்.விஜயா ரவி, ஈரோடு

மாதாஜி... பிதாஜி... ராஜாஜி!

யு.கே.ஜி படிக்கும் மகன் ராஜாவை, அன்று பள்ளியில் இருந்து அழைக்கச் சென்றிருந்தேன். ஹிந்தி மிஸ் என்னிடம் வந்து, ''உங்க பையன் இன்னிக்கு ஒரு சூப்பர் ஜோக் அடிச்சான்...'' என்றார். நான் ஆர்வமாக அவரைப் பார்க்க, தொடர்ந்த மிஸ்... ''நான் அவன்கிட்ட, 'உங்கம்மாவை நீ எப்படி கூப்பிடுவ..?’னு கேட்டேன். 'மாதாஜி’னு சொன்னான். 'அப்பாவை எப்படிக் கூப்பிடுவ..?’னு அடுத்த கேள்வி கேட்க, 'பிதாஜி’னு சொன்னான். 'உன்னை உங்க வீட்டுல எல்லோரும் எப்படிக் கூப்பிடுவாங்க..?’னு கேட்க, உடனே அவன் யோசிச்சுட்டு 'ராஜாஜி!’னு சொல்ல, சிரிச்சு சிரிச்சு ஸ்டாஃப் ரூமே குலுங்குச்சு!'' என்றார் சிரித்துக்கொண்டே!

- கே.லலிதா, மதுரை

குட்டீஸ் குறும்பு!

'சுத்திட்டும் வரலாம்... கை வீசு!’

என் தங்கையின் பேத்தி பிரதண்யாவை தினமும் இரவில், சின்ன குழந்தைகளுக்கான பாடல்களைப் பாடியபடி தூங்க வைப்பது வழக்கம். ஒரு நாள், நாங்கள் அவள் வீட்டுக்கு சென்றிருந்தபோது, என் தங்கை, அந்தக் குழந்தையைத் தூங்க வைக்க இந்தப் பாடலை பாடினாள்...

''கை வீசம்மா... கை வீசு... கடைக்கு போகலாம் கை வீசு...
மிட்டாய் வாங்கலாம் கை வீசு, மெதுவாய்த் திங்கலாம் கை வீசு...
கோயிலுக்குப் போகலாம் கை வீசு, கும்பிட்டு வரலாம் கை வீசு''

என்று முடித்த அடுத்த செகண்ட், அரைத் தூக்கத்திலிருந்தவள் ''சுத்திட்டும் வரலாம் கை வீசு'' என்று குரல் கொடுத்து முடித்தாள். அன்று மாலை அருகிலிருந்த பிள்ளையார் கோயிலுக்குச் சென்று, பிராகாரத்தை எங்களோடு சுற்றிவிட்டு வந்ததால், பாட்டில் புதிதாக ஒரு வரியை அந்த சூப்பர் சுட்டி சேர்த்ததைக் கேட்டு, எதிர்பாராத இன்ப அதிர்ச்சியுடன் அவளை சேர்த்தணைத்து பூரித்து நின்றோம்!

- வசுமதி கண்ணன், அம்பத்தூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு