பிரீமியம் ஸ்டோரி
##~##

 ''டிசம்பர் 16, 2012... டெல்லியில் ஓடும் பஸ்ஸில், 'பாரா மெடிக்கல்' கல்லூரி மாணவி, ஆறு பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், நாட்டையே உலுக்கி எடுத்தது. இந்த வழக்கில், ஒன்பது மாதங்களுக்குள் தீர்ப்பு எழுதப்பட்டிருக்கிறது.

ஒரு குற்றவாளி தற்கொலை செய்து கொண்டுவிட, மற்றொரு குற்றவாளிக்கு 'சிறுவன்' என்கிற வகையில் மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. மீதம் உள்ள நான்கு பேருக்கும் தூக்குத் தண்டனை அறிவித்திருக்கிறது டெல்லி விரைவு நீதிமன்றம். தீர்ப்புக்கு பெரிய அளவில் வரவேற்பு தரப்பட்டிருக்கும் நிலையில், ஆங்காங்கே லேசாக எதிர்ப்பும் காணப்படுகிறது - 'மரண தண்டனை தேவையில்லை' என்கிற வகையில்!

இதைப் பற்றி, எழுத்தாளர், கவிஞர், வழக்கறிஞர், அரசியல்வாதி, குடும்பத்தலைவி... என்று சில பெண்கள் இங்கே பேசுகிறார்கள்!

மாற்றத்தைக் கொண்டு வருமா... மரண தண்டனை?!

மீனா கந்தசாமி, கவிஞர் மற்றும் எழுத்தாளர், சென்னை:

''டெல்லி மாணவிக்கு நடந்தது மன்னிக்க முடியாதது... ஏத்துக்க முடியாத விஷயம். அதுக்காக அந்த நாலு பேருக்கும் மரண தண்டனை கொடுத்ததை ஏத்துக்க முடியாது. கொடூரமான ஆறு பேர் சேர்ந்து ஒரு பெண்ணை கொலை பண்ணினாங்க. நாமளும் தூக்கு தண்டனைங்கிற பேர்ல கொலை பண்ணத்தான் போறோம். இதுல நமக்கும் அவங்களுக்கு என்ன வித்தியாசம்? அந்த நாலு பேரும், தான் செஞ்சது எத்தனை பெரிய தப்புனு தினமும் நினைச்சு நினைச்சு மனசால சாகுற மாதிரி ஆயுள் தண்டனை கொடுத்திருந்தா வரவேற்றிருப்பேன்.

மாற்றத்தைக் கொண்டு வருமா... மரண தண்டனை?!

டெல்லி சம்பவத் துக்கு பிறகு நம்ம நாட்டுல நடக்குற பாலியல் பலாத்காரத்தோட எண்ணிக்கை குறைஞ்சுடுச்சா என்ன? இந்த தீர்ப்பு வந்த அன்னிக்கு கூட இப்படிப்பட்ட கொடுமை கள் அரங்கேறினதுதான் உண்மை. சொல்லப் போனா... இப்படிப்பட்ட கொடுமைகள் அதிகமாகிட்டுதான் வருது.

அந்த சம்பவம் நடந்தது நாட்டோட தலைநகர்ல அப்படிங்கறதால பெரிய விஷயமா பேசப்பட்டது. ஆனா, நாட்டோட ஒவ்வொரு மூலையிலயும் பெண்கள் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகிட்டுதான் இருக்காங்க. இதையெல்லாம் தடுக்கறதுக்கு ஒரே வழி... பாலியல் விஷயத்துல நம்ம மக்களோட பார்வை மாறுறதும், சட்டங்களை மாத்துறதும் மட்டும்தான்.

திருமணமான எத்தனையோ பெண்கள், இன்னிக்கும் விருப்பம் இல்லாமல் கணவனின் கட்டாயத்தின் பேரில் கற்பழிக்கபட்டுக் கிட்டுதானே இருக்காங்க. இது எல்லாம் மாறணும்!''

முனைவர் கவிதாராணி, தமிழ் ஆசிரியை, குடும்பத் தலைவி, மதுரை:

''மிக சரியான தீர்ப்பு. போர்ல எதிரிகள் கொல்லப்படுறதையும், இந்த நான்கு பேருக்கு கொடுக்கப்பட்டிருக்கிற மரண தண்டனையையும் ஒண்ணாதான் நினைக்கிறேன். ஒரு பொண்ணை பெத்த அம்மாவா என்னால இதுக்கு மேல யோசிக்க முடியலீங்க. அதேசமயம், இங்க தனி மனித ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படணும்... அதேபோல, பொண்ணுங்களுக்கு ஆடை கட்டுப்பாடும் அவசியம்னு நினைக்கிறேன். தவறுகள் நடக்கறதை இதெல்லாம் தடுக்கும்.''

சுகிர்தராணி, சமூக ஆர்வலர்/கவிஞர், சென்னை:

''கேரளாவுல சொந்த அப்பாவே, மகனோட சேர்ந்து ஒன்பதாவது படிக்கும் மகளை பல வருஷமா பாலியல் பலாத்காரம் பண்ணியிருக்கார். இவங்களுக்கு எல்லாம் என்ன தண்டனை கொடுப்பீங்க? இப்படி நம்ம நாட்டுல வெளிய தெரியாத பலாத்காரங்கள் விதவிதமா நடந்துட்டுதான் இருக்கு. 'அதிக மார்க் வேண்டுமா... எனக்கு பணிஞ்சு போ’னு சொல்ற ஆசிரியர், 'வேலையில அடுத்த கட்டத்துக்கு முன்னேற எனக்கு ஒத்துழைப்பு செய்’னு சொல்ற அதிகாரிகள்... இப்படி பலரும் நமக்கிடையே வாழ்ந்துகிட்டுதான் இருக்காங்க. அப்படி பார்த்தா... நாட்டுல பல பேர் மரண தண்டனையிலதான் சிக்கிட்டு இருக்கணும். அதனால எனக்கு இந்த தண்டனையில உடன்பாடில்லை. 'என்னடா இவ இப்படி சொல்றாளே’னு பலருக்கும் என் மேல வெறுப்பு வரலாம். ஆனா, இந்த மரண தண்டனையால பெருசா மாற்றம் எதுவும் ஏற்பட்டுடாதுங்கறதுதான் உண்மை! நம்முடைய கல்வி முறையையும், சட்டத்தை மட்டும் மாத்தினாலே இப்படிப்பட்ட குற்றங்கள் குறையும். அரசாங்கம், சினிமா, மீடியா எல்லாருக்குமே சமூக பொறுப்பு இருக்கணும்.''

மாற்றத்தைக் கொண்டு வருமா... மரண தண்டனை?!

பாலபாரதி எம்.எல்.ஏ, சென்னை:

''பாலியல் பலாத்காரம் செய்த பிறகு, அந்தப் பெண்ணோட பிறப்புறுப்புல கம்பியை செலுத்தின இரக்கமற்ற அந்த கொடூரன்களுக்கு இதைவிட பொருத்தமான தண்டனை தரவே முடியாது. இதுல, 'மைனர்'னு சொல்லியிருக்கிற அந்த பையனோட கொடூரங்கள்தான் அதிகம். அவனுக்கு ஆயுள் முழுக்க சிறை தண்டனை தந்திருக்கணும். இப்ப, பெண்களோட நடத்தையை சொல்லி திட்டுற கேவலமும் அரங்கேறிட்டு வருது. சாதியை சொல்லி திட்டினா... எப்படி தண்டனை உண்டோ, அதேபோல ஒரு பொண்ணோட நடத்தையை கீழ்த்தரமா விமர்சிக்கிற ஆணுக்கும் தக்க தண்டனை கொடுக்கணும்.''

நிர்மலா ராஜேந்திரகுமார், குடும்பத் தலைவி, சென்னை:

''இதுவே ரொம்ப லேட்டுங்க. தினமும் எங்க வீட்டு வயசு பொண்ணை வெளியில அனுப்பி, அவ திரும்புற வரைக்கும் மனசு கிடந்து பதபதைக்குது. முக்கால்வாசி பாலியல் குற்றங்கள், மது அருந்தின ஆசாமிகளாலதான் நடக்குது. அதனால மதுவை அரசாங்கம் ஒழிச்சாலே... இந்த மாதிரியான குற்றங்களைத் தடுத்துடலாம்.''  

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுதா, சென்னை:

''இன்னிக்கு பல காவல் நிலையங்கள்ல வெறும் புகாரோட நிக்கிற பலாத்கார வழக்குகள்தான் அதிகமா இருக்கு. மீடியா வெளிச்சம் பட்டதுனாலதான் டெல்லி மாணவி வழக்குல இந்தத் தீர்ப்பு. இல்லாட்டி இது பத்தோட பதிணொண்ணா ஆகியிருக்கும். இந்தியாவுலதான், ஒரு பொண்ணுக்கு ஏதாவது பிரச்னை வந்தா, உடனே, 'அவ டிரெஸ் பண்றதே சரியில்ல’னு மட்டமா யோசிச்சு பேசுறாங்க. உடைக்கும் பலாத்காரத்துக்கும் சம்பந்தம்னா... ஏன் குழந்தைகள் பலாத்காரம் செய்யப்படுறாங்க. டெல்லி மாணவி சம்பவம் நடந்த அதேசமயத்துல, தூத்துக்குடியில ஸ்கூல் யூனிஃபார்மோட போன ஒரு பெண்ணை பலாத்காரம் பண்ணி கொலை பண்ணினானே ஒரு கொடூரன். அந்த யூனிஃபார்ம் என்ன செக்ஸியான ஆடையா...?''

- மோ.கிஷோர் குமார், நா.சிபிச்சக்கரவர்த்தி

படம்: பா.காளிமுத்து

• பி.பி.சி. தகவல்படி இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்துக்கும் 22 பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

•  நேஷனல் க்ரைம் ரிப்போர்ட் பீரோ தகவல்படி, 2006-ம் ஆண்டில் ஆண்டுக்கு 18,000 ஆயிரமாக இருந்த பாலியல் வழக்குகள், 2012-ல் 24,923 ஆக உயர்ந்திருக்கிறது. 10 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவானால், அதில் 4 வழக்குகளுக்கு மட்டுமே தண்டனை வழங்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு