Published:Updated:

‘பயத்தை விரட்டுங்க... ஐடியாவை மாத்துங்க!’

பேக்கரி தொழிலில் பிரமாத வெற்றி சக்சஸ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

மையல்கட்டு எப்போதும் பெண்கள் வசம் என்றாலும், உணவகம், பேக்கரி என்று தொழில் சார்ந்த சமையல்களில் ஆண்களே அரசர்கள். ஆனால், அந்த இலக்கணத்தை அசைத்து, பேக்கரி தொழிலில் கலக்கி வருகிறார், திண்டுக்கல், தனலட்சுமி.

''கரண்டி பிடிக்கிற திறமையை நம்பி களமிறங்கின நான், இந்த அஞ்சு வருஷத்துல என்னோட பேக்கரி தொழிலை ஏறுமுகமாக்கியிருக்கேன்!'' என்று உற்சாக குரலில் வரவேற்கிறார் தனலட்சுமி.

''கணவர், நகைக்கடையில் வேலை பார்த்தார். ரெண்டு பெண் குழந்தைகள் எங்களுக்கு. வீட்டில் சும்மா இருந்த நான், ஏதாவது தொழில் செய்யலாமேனு யோசிச்சேன். பக்கத்து வீட்டுக் குழந்தைகள் எல்லாரும் பேக்கரி அயிட்டங்களை தினமும் விரும்பி வாங்கிச் சாப்பிடுறதைப் பார்த்து, ஒரு யோசனை கிடைச்சது. வீட்டிலேயே பிஸ்கட், கேக், பிரெட் செஞ்சு பக்கத்து வீடுகள், கடைகளுக்கு கொடுக்க ஆரம்பிச்சேன். குழந்தைகளை டார்கெட் செய்தே இந்த தொழிலை ஆரம்பிச்சாலும், எங்களோட தரமும் சுவையும் பெரியவங்களுக்கும் பிடிச்சுப்போக, தொழிலை விரிவுபடுத்துற தைரியம் கிடைச்சுது'' என்றவர், அதற்குப் பின் கனமான முதலீடு, கடினமான உழைப்பு என்று களத்தில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்.

‘பயத்தை விரட்டுங்க... ஐடியாவை மாத்துங்க!’

''அஞ்சு வருஷத்துக்கு முன்ன 'சூர்யா கேக்ஸ் அண்ட் பேக்கரி’யை ஆரம்பிச்சேன். 15 லட்சம் ரூபாய் முதலீடா தேவைப்பட்டுச்சு. பேங்க்ல லோன் வாங்கி, பேக்கரிக்கான மெஷின்களை வெளிநாட்டுல இருந்து இறக்குமதி பண்ணினோம். ஆரம்பத்துல, 'இவ்வளவு பணம் போட்டு நடத்துறோம்... லாபகரமா பண்ண முடியுமா?'னு பயமாதான் இருந்துச்சு. ஆனா, எனக்குக் கிடைச்ச பணியாட்கள் என்னோட குறிக்கோளுக்கு இணையா உழைப்பை தந்ததால, தேக்கம் இல்லாம முன்னேற்றம் கிடைக்க ஆரம்பிச்சுது'' என்றவர், நிலையான வருமானத்தில் பேக்கரி வந்து நின்றவுடன், தொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல என்ன செய்யலாம் என்று யோசித்திருக்கிறார்.

''ரோட்டுக்கு ரோடு பேக்கரி இருக்கு. ஆனா, நம்ம பேக்கரியை மக்கள் தேடி வர்றதுக்கு என்ன செய்யலாம்னு யோசிச்சேன். அப்போதான் பிறந்தநாள் கேக்குல சம்பந்தப்பட்டவங்களோட போட்டோவை பிரின்ட் பண்ணி கொடுக்குற 'போட்டோ கேக்’ ஐடியா வந்துச்சு. பெங்களூரு, சென்னைனு பெரு நகரங்களில் மட்டுமே கிடைக்கிற இந்த வசதியை, ஒரு வருஷத்துக்கு முன்ன திண்டுக்கல்லுக்கு கொண்டு வந்தேன். இதுமாதிரியான இரண்டாம் கட்ட நகரத்துல இதை செய்து கொடுக்கறதுக்கு செலவு அதிகம்தான். ஆனாலும், வருமானத்தை நிச்சயம் எடுத்துடலாம்னு நம்பிதான் கொண்டுவந்தேன். நல்ல வரவேற்பு கிடைக்கவே... பிரச்னை இல்லாம போயிட்டிருக்கு!'' என்ற தனலட்சுமி, தொழில் விவரங்களையும் பகிர்ந்துகொண்டார்.

‘பயத்தை விரட்டுங்க... ஐடியாவை மாத்துங்க!’

''என்னதான் புதுமையைப் புகுத்தினாலும், வெற்றிக்கு அடிப்படை தரமும் சுவையும்தான். அதுவும் இது உணவுத் தொழில்ங்கறதால, சுத்தம் அவசியம். இங்க பொரும்பாலான பொருள், பால் பயன்படுத்தி செய்றதால, சின்னதா கவனம் சிதறினாலும் எல்லாம் வீணாகிடும். ஃப்ரெஷ் க்ரீம் கேக்தான் எல்லோரும் விரும்புறாங்க. இந்த கேக்ல இருக்கிற பிரச்னை என்னன்னா, கொஞ்ச நேரம் காத்துப் போகிற மாதிரி வெச்சாலும் சுவை மாறிடும். அதனால தயாரிப்போட, பராமரிப்பும் அவசியம்.

அஞ்சு வருஷம் ஆனாலும், இன்னமும் இன்னிக்கு அடிஎடுத்து வெச்ச மாதிரியே தான் உழைக்கிறோம். மக்கள்கிட்ட நன்மதிப்பை அடைய ணும்ங்கிறத குறிக்கோளா வெச்சு தொடர்ந்து முன்னேறிட்டு வர்றோம். அது நிறைவேறினதாலதான் பள்ளி, கல்லூரினு குறைந்த விலையில் பஃப்ஸ், சமோசா மற்றும் பிரெட்னு சப்ளை பண்ற வாய்ப்பும் கிடைச்சுருக்கு'' என்ற தனலட்சுமி,

''தொழில் ஆரம்பிக்கிறது என்பது ரிஸ்க்கான விஷயம்தான். ஆனா, பயத்தை விட்டுட்டு விடா முயற்சியையும், உழைப்பையும் கொடுத்தா... சீக்கிரமே வெற்றியை சந்திக்கலாம்!''

- நம்பிக்கை வார்த்தைகள் சொன்னார் தனலட்சுமி.

- உ.சிவராமன், படங்கள்: வீ.சிவக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு