Published:Updated:

“நீங்கள் அழகு என்பதை நீங்கள் நம்புங்கள்!”

'மிஸ் அமெரிக்கா'வின் மின்னல் செய்தி சக்சஸ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

 'மிஸ் அமெரிக்கா' எனும் மிகப்பெரும் புகழைப் பெற்றிருக்கிறார், ஆந்திரத்தின் விஜயவாடாவை பூர்விகமாகக் கொண்ட அமெரிக்க வாழ் இளம்பெண் நைனா தவுலூரி. ஆனால், 'இந்த கிரீடம், முள்கிரீடமாகிவிடுமோ' என்கிற அளவுக்கு அமெரிக்கர்கள் சிலர், அவரை வாட்டி வதைத்ததுதான் சோதனை!

தவுலூரி ஆடிய நடனம், உடுத்தியிருந்த உடை, அவருடைய நிறம்... இதையெல்லாம் வைத்து, 'அரேபிய அழகி' என்று அவரைத் தவறாக நினைத்ததோடு, 'அமெரிக்காவுக்கு வெள்ளைக்காரப் பெண்தான் மிஸ் அமெரிக்கா’வாக தேர்வாக வேண்டும்’ என்கிற வேகத்தில், கொடுமையான வார்த்தைகளால் சமூக வலைதளங்கள் மூலமாகக் காயப்படுத்தினர். 'மிஸ் அல்கொய்தா' என்று குறிப்பிடும் அளவுக்குக்கூட தரம் தாழ்ந்தனர். ஆனால், அனைத்தையும் அவர் அமைதியாக எதிர்கொண்டது... அந்த நாட்டிலேயே மேலும் ரசிகர்களை ஈட்டிக் கொடுத்திருக்கிறது!

சரி, இதையெல்லாம் விட்டுத்தள்ளுவோம். தவுலூரியின் வாழ்க்கையில் இருந்து, எல்லோரும் படிப்பதற்கு ஏராளமான பாடங்கள் இருக்கின்றன என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயமே! இவர், இன்று 'அமெரிக்க அழகி'... ஆனால், ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு, அவரைப் பார்க்க, அவருக்கே பிடிக்காது. அந்த அளவுக்கு குண்டூஸ். சிறுவயதிலிருந்தே, ஓயாது சாப்பிடும் பழக்கம் இருந்ததால், வளர்ந்த பிறகு, 'புளூமியா'  என்கிற நோயின் பிடியில் சிக்கினார். கூடவே, ஆஸ்துமா வேறு. இத்தனைக்கும் குடும்பத்தில் எல்லோருமே டாக்டர்கள்.

“நீங்கள் அழகு என்பதை நீங்கள் நம்புங்கள்!”

இத்தகைய சூழலில், 'நாம் ஏன் மிஸ் அமெரிக்கா போட்டியில் கலந்து கொள்ளக்கூடாது’ என்கிற ஆசை அவருக்குள் மின்னலைப் போல வெட்டியது என்றால்... பார்த்துக் கொள்ளுங்கள். 'இவருக்கு ஏன் இந்த விபரீத ஆசை?' என்றுதான் பலருக்கும் தோன்றியது. ஆனால், நல்ல எண்ணங்கள் வந்தால்... பாதைகள் தானாகவே திறக்கும் என்பது... இவருடைய விஷயத்தில் உண்மையானது.

ஒரு ஜிம்மில், பருமனாக இருப்பவர்கள் சீராக உடல் எடையைக் குறைப்பதற்கான பயிற்சிக் கொடுக்கும் டியா ஃபேல்கோன் என்ற பெண்மணியைச் சந்தித்தார் தவுலூரி. ஒரு காலத்தில், வேலைக்கே போக முடியாத அளவுக்கு உடல் எடை அதிகரிக்க வீட்டிலேயே அடைந்து கிடந்தவர்தான் இந்த ஃபேல்கோன். மேலும் மேலும் உடல் பெருத்து, 'உடம்பு வெடித்தே செத்து போய்விடுவோம்' என்கி நிலைக்கு வந்த பிறகு... சீஸ் பர்கர், ஹாட் டாக் என்று எது எதெல்லாம் தனக்கு பிடிக்குமோ, அனைத்துக்கும் 'நோ' சொன்னவர், சத்துமிக்க கீரை மற்றும் காய்கறிகளை சாப்பிட ஆரம்பித்தார். உடற்பயிற்சிகள் செய்தார். சில வருடங்களில்... 'இவரா அவர்!' என்று பலரும் திரும்பிப் பார்த்தனர். அதன் பிறகு, முன்பு தான் அவதிப்பட்டது போல அவதிப்படு பவர்களுக்கு உடல் எடையைக் குறைக்க வழி சொல்லும் ஜிம் ஆரம்பித்தார்.  

அத்ததைய அனுபவசாலியை சந்தித்த பிறகு, தவுலூரிக்கு வேறு என்ன தேவையிருக்கிறது..! தொடர்ந்து தவுலூரி காட்டிய தீவிரம்... 'மிஸ் நியூயார்க்’ பட்டத்தை முதலில் பெற்றுத் தந்து... அடுத்த முயற்சியில் 'மிஸ் அமெரிக்கா’!

அழகிப் போட்டிகளைப் பார்க்கும் பெண்கள், தங்களின் பருமனான உடல் பற்றி தாழ்வுமனப்பான்மை அடையக்கூடாது என்கிற எண்ணத்தில், தவுலூரி விடுத்திருக்கும் செய்தி... ''உலகத்தில் இருக்கும் எல்லா பெண்களுமே அழகுதான்; தோல் என்ன நிறமாக இருந்தாலும் அழகுதான்; எடை என்னவாக இருந்தாலும் அழகுதான். உயரம் என்னவாக இருந்தாலும் அழகுதான். நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் திடமாக நம்புங்கள். அது, உங்களை 'உலக அழகி'யாகக்கூட உயர வைக்கும்!''

சொல்வது... சாதித்தவராயிற்றே!

- பி.ஆரோக்கியவேல்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு