Published:Updated:

''ஏழைகளுக்கு கல்வி... ரமணருக்கு கோயில்!''

கலக்கும் கலப்புமண தம்பதிசேவை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

 ன் குடும்பம், அவர்களுடைய மகிழ்ச்சி... என்று மட்டும் வாழ்பவர்களின் எண்ணிக்கைதான் இங்கே அதிகம். இதற்கு மத்தியில், ஊரில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு உணவு, கல்வி என்று வழங்குவதோடு... ரமண மகரிஷிக்கு ஓர் ஆலயத்தையும் எழுப்பியிருக்கிறார்கள் ஒரு எளிய தம்பதி என்றால், ஆச்சர்யம்தானே!

மதுரை, செட்டிக்குளம் கிராமத்தில் வசிக்கிறார்கள் நவுசாத் அலி - மீனா தம்பதி. 'இவர்களின் பெயர்களே, நமக்கு நெகிழ்ச்சியான கதை சொல்லப் போகிறது' என்று யோசித்தபடியே... அழகர்கோயில் செல்லும் நெடுஞ்சாலையில், மாத்தூரிலிருந்து பிரியும் கிளைச்சாலையில் இருக்கும் செட்டிகுளம் சென்று சேர்ந்தோம்.

வறண்டுகிடக்கும் விவசாய நிலங்களுக்கிடையே... பூத்துக்குலுங்கும் செடிகள், சிற்சில மரங்களுக்கு நடுவில் நிற்கிறது... ரமண மகரிஷியின் ஆலயம். பூஜையை முடித்துக் கொண்டு நம்மிடம் வந்த மீனா, ''சொந்த ஊரு மதுரை. காதலுக்கு ஏது மதம், ஜாதி, குலம், கோத்திரம். நானும் அவரும் காதலிச்சோம். இப்ப உள்ள பெற்றோரே காதலை எதிர்க்கிறாங்க. அப்படியிருக்கிறப்ப எங்க காலத்துல, எப்படி இருந்திருப்பாங்க! வேற வழியில்லாம, நாங்களே கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ரெண்டு வீட்டுலயும் சேர்த்துக்கல. டெய்லரான அவர் சம்பாத்தியத்துல வாழ்க்கை ஓட ஆரம்பிச்சுது. ஒரு கட்டத்துல ஊரை விட்டே கிளம்ப வேண்டிய நிர்ப்பந்தம்'' என்று சொல்லும் மீனாவை, அதன் பிறகு வாழ்க்கை தன் சுழலுக்குள் இழுத்துப் போட்டிருக்கிறது.

''ஏழைகளுக்கு கல்வி... ரமணருக்கு கோயில்!''

''செட்டிக்குளம் வந்து சேர்ந்த பிறகுதான், கஷ்டம்னா என்னனு புரிஞ்சுது. பையன் (ரபீக்) பொறந்தான். பிரசவ செல வுக்குக்கூட காசு இல்லாம  கஷ்டப்பட் டோம். அவனுக்கு பால் வாங்கி கொடுக் கறதுல ஆரம்பிச்சு, வீட்டு செலவு வரை தினமும் போராட்டம்தான். அதனால, 'இன்னொரு குழந்தை வேண்டாம்'னு    முடிவெடுத்தோம். டியூஷன் எடுத்த அனு பவம் இருந்ததால, இங்கேயும் டியூஷன் எடுத்தேன். வசதியிருக்கற அப்பா - அம்மாக் கள் கிட்ட மட்டும் பணம் வாங்கிப்பேன். மத்தவங்ககிட்ட வாங்கறதில்ல. இந்த வரு மானம் கொஞ்சம் எங்கள நிமிர வெச்சுது.

சிக்கனமா இருந்து, சேமிச்ச காசை வெச்சு இல்லாதவங்களுக்கு உதவ ஆரம்பிச்சோம். ஆன்மிக ஞானிகளை தேடியும் பயணம் செய்தோம். வாடிப்பட்டியில ஆசிரமம் வெச்சுருக்கற சாஸ்வானந்தா... எங்களுக்கு குரு மாதிரி. அவர்கிட்ட பேசின பிறகு, பகவான் ரமணர் மேல இனம்புரியாத ஈர்ப்பு. எங்க பையனும் எங்கள மாதிரியே வளர்ந்தான். அடிக்கடி திருவண்ணாமலை, திருச்சுழினு போவான். ஒருநாள், 'அம்மா ரமணருக்கு தமிழ்நாட்டுல திருவண்ணாமலை, திருச்சுழியைத் தவிர வேறு எங்கயும் கோயில் இல்ல. நாமளே இங்க கோயில் கட்டலாம்’னு யோசனை சொன்னான். உடனே சாஸ்வானந்தாகிட்ட கேட்டப்ப... 'நல்லபடியா செய்யுங்க. அதன் மூலம் மற்றவர்களுக்கு உதவுங்க’னு ஆசீர்வதிச்சார்'' என்று புன்னகையோடு சொன்னார் மீனா.  

''ஏழைகளுக்கு கல்வி... ரமணருக்கு கோயில்!''

அம்மாவையே அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்த ரபீக், ''அம்மாவோட நகை முதற்கொண்டு எங்களோட கையிருப்பு அத்தனையையும் போட்டு இடம் வாங்கி, ரமணருக்கு கோயில் கட்டினோம். ஆனா, சாமியை பிரதிஷ்டை செய்யுற அன்னிக்கு வர்ற மக்களுக்கு சாப்பாடு போட காசில்லை. என்னோடது, அப்பாவோடதுனு ரெண்டு டூ வீலரையும் வித்து, வந்தவங்களுக்கு வயிறார சாப்பாடு போட்டோம்.

இங்க இருக்கிற மக்கள்ல பெரும்பாலானவங்க கூலித்தொழிலாளிங்கதான். பலர் சமையல் வேலைக்கு போவாங்க. வர்ற சம்பளத்தை பலர் குடிச்சே அழிச்சுடுவாங்க. அப்படிப்பட்ட வீட்டு பசங்களுக்கு இலவச கல்வி கொடுக்க முடிவு பண்ணி, 'உங்க பிள்ளைங்கள, எங்க வீட்டுக்கு அனுப்புங்க'னு சொன்னப்ப, பலரும் தயங்கினாங்க. சிலர் அனுப்பினாங்க. அப்படி வந்த குழந்தைகளுக்கு மூணு வேளையும் சாப்பாடு கொடுத்து கவனிச்சுகிட்டோம். கான்வென்ட் பிள்ளைகளோட போட்டிப்போடுற வகையில படிச்ச அந்த பிள்ளைகள்ல பலர், இப்ப கல்லூரி படிப்பை தொடர்ந்துட்டிருக்காங்க.

இதன் மூலமா இன்னொரு நல்லதும் நடந்திருக்கு. இங்கு வர்ற பிள்ளைகள், தங்களோட வீட்டுல காலை, ராத்திரினு ரமணரோட பாடல்களை பாடுறதால... பல அப்பாக்கள், குடிப்பழக்கத்தை விட்டுட்டாங்க'' என்று சொல்லும் ரபீக், தானும் ஓர் இந்துப் பெண்ணை காதலித்து திருமணம் செய்திருக்கிறார்

நிறைவாக பேசிய நவுசாத் அலி, ''ரமணரோட முதல் பக்தர் மஸ்தான் சாகிபுக்கு, திருவண்ணாமலை பக்கம் தேசூரில் ஆலயம் எழுப்பி, அனைத்து மக்களும் வழிபடுறாங்க. அதேபோலத்தான் நாங்களும் ரமணருக்கு கோயில் கட்டி யிருக்கோம். நாங்க கஞ்சிக்கே வழியில்லாம கஷ்டப்பட்டாலும், இந்த கிராமத்தை உதாரண கிராமமா மாத்துவோம்'' என்று புன்னகையுடன் விடை கொடுத்தார்.

- செ.சல்மான்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு