ஆம்! ஹிதேந்திரன் என்கிற பெயரைக் கேட்கும்போதே நம் அனைவரின் இதயத்திலும் துயரமும் நெகிழ்ச்சியும் கலந்து துடிக்கிறது. சீராட்டிப் பாராட்டித் தோளுக்கு மேல் வளர்த்த தங்கள் செல்ல மகனை.. தங்களின் எதிர்காலத்தை.. எமனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்த அந்தத் தாங்க முடியாத சோகத்திலும், அவனுடைய உடல் உறுப்புக்களை ஆறு பேருக்குத் தானமாகக் கொடுத்த அந்த டாக்டர் தம்பதியை நினைத்து நினைத்து மனம் விம்முகிறது.
செயற்கரிய இந்தச் செயலால் மக்களின் கவனத்தில் பதிந்து விட்ட அந்தப் பெற்றோரை நாம் கவனித்திருந்தோம்.. அடுத்தடுத்து நிகழ்ந்த பத்திரிகையாளர் சந்திப்புகள்.. டிவி பேட்டிகள்.. ஆறுதல் கூட்டங்கள்.. என்று பலவற்றின்போதும் நம்மைப் பெரிதும் கவனிக்கச் செய்தது, ஹிதேந்திரனுடைய தாய் புஷ்பாஞ்சலியின் மௌனம்தான்!
கண்ணீர்க் கடலிலேயே மிதந்து கொண்டிருந்த ஹிதேந்திரனின் தந்தை டாக்டர் அசோகன், ''வாய் விட்டு அழுதுடும்மா புஷ்பா.. இப்பிடி இருக்காத..'' என்று மனைவியைத் திரும்பத் திரும்ப உலுக்கியபோதும், அவர் அழவில்லை.. புலம்பவில்லை.. ஒரு துளி கண்ணீரைக் கூட வெளிப்படுத்தவில்லை. துக்கம் அனைத்தையும் உள்ளுக்குள் விழுங்கி, துக்கம் விசாரிக்க வந்தவர்கள், உறவுக்காரர்கள், ஆறுதல் சொல்ல வந்தவர்கள்.. என்று அத்தனை பேரையும் அந்தப் பெண்மணி, தீர்க்கமான பார்வையுடன் பார்த்தபடி நிற்க, 'பெண் மனதின் ஆழம் இந்த அளவு அதிகமா' என்கிற ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அனைவர் மனங்களிலும் உறைந்து போனது என்னவோ நிஜம்!
''அவள் விகடனுக்காக சந்திக்க வேண்டும்'' என்று கேட்டபோது, மறுப்பையே பதிலாகச் சொன்னவரை வற்புறுத்தி சந்தித்தோம்.
திருக்கழுக்குன்றம் ஆசிரியர் நகர்! பிரதான சாலையில் இரங்கல் பேனர்கள் கட்டப்பட்டிருக்க, ஹிதேந்திரன் வீட்டுக்குள் நுழைந்தோம். ஹாலின் நடுவே படத்தில் மாலைகள் தொங்க புன்னகைத்துக் கொண்டிருந்தார் ஹிதேந்திரன். அந்தப் புண்ணிய ஆத்மாவை வணங்கி விட்டு புஷ்பாஞ்சலியின் முகத்தைப் பார்த்தோம். அதே இறுக்கம்.. அதே தீர்க்கம்!
மெதுவான குரலில் பேசத் தொடங்கினார்..
|