Published:Updated:

டாப் 10 அரசியல் ஆளுமைப் பெண்கள்!

டாப் 10 அரசியல் ஆளுமைப் பெண்கள்!
டாப் 10 அரசியல் ஆளுமைப் பெண்கள்!
டாப் 10 அரசியல் ஆளுமைப் பெண்கள்!
ண்களின் அதிகாரமும் ஆதிக்கமும் நிறைந்த அரசியலில், முட்டுக்கட்டைகள் பலவற்றை தகர்த்தெறிந்து, அரியணையில் அமர்ந்த அசாத்திய அரசியல் பெண் ஆளுமைகள் இவர்கள்...
1. மம்தா பானர்ஜி (மேற்கு வங்க முதல்வர் )
எளிமைக்கு மறுபெயர், மம்தா தீதி. கதர் புடவை, காலில் ரப்பர் செருப்பு... இவ்வளவுதான் மம்தா. மிக எளிமையான குடும்பப் பின்னணிக் கொண்டவர். 15 வயதிலேயே காங்கிரஸ் கட்சியின் மாணவ அணியில் உறுப்பினரானார். பல நிலைகள் தாண்டி ஒரு அதிகாரமிக்க தலைவராய் வளர்ந்தார். இந்தியாவின் முதல் பெண் ரயில்வே அமைச்சர் ஆனவர் இவர்.
பின்னாளில் காங்கிரஸ் கட்சியின் மீது கொண்ட அதிருப்தி காரணமாக திரிணாமுல் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை உறுதியுடன் தொடங்க, ஆதரவாளர்கள் பெருகினர். மேற்கு வங்கத்தை அதிக ஆண்டுகள் ஆண்ட கம்யூனிஸ்ட் கட்சியை, தனியொரு பெண்ணாய் தரையோடு வீழ்த்தி முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். மேற்கு வங்கம் போன்ற ஒரு  மிகப்பெரிய மாநிலத்தை ஆளும் இவரது சிறப்புமிக்க ஆளுமையைப் பாராட்டி, பில் கேட்ஸ் இவருக்குக் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது. திருமணம் செய்துகொள்ளாமல், தனக்கென சொத்து எதுவும் சேர்த்துக்கொள்ளாமல், 61 வயதில் அரசியல் பணிகளில் பரபரப்பாக இருக்கிறார் தீதி! 
2. ஸ்மிருதி இரானி ( கல்வி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்
டாப் 10 அரசியல் ஆளுமைப் பெண்கள்!
இவரை 'ஸ்மிருதி' என்று சொன்னால் பலருக்கும் தெரியாது. ஹிந்தி சீரியல் பிரியர்களுக்கு இவர் 'துளசி'. ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக்கொண்டிருந்தவர், பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து, முழுநேர அரசியலில் இறங்கினார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஸ்டார் வேட்பாளர் ராகுல் காந்தியை எதிர்த்து, அமேதி தொகுதியில் களமிறங்கினார். நூலிழையில் தோல்வியைத் தழுவினாலும்,  மாநிலங்களவை எம்.பி என்பதால், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆனார். 
3. வசுந்தரா ராஜே ( ராஜஸ்தான் முதல்வர் )
டாப் 10 அரசியல் ஆளுமைப் பெண்கள்!
குவாலியரின் ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர். ஆனால் ராஜ வம்சத்துப் பெண் அனுபவிக்கும் சௌகரியங்களை விட்டுவிலகி அரசியல் களத்துக்கு வந்தார். சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர், பல போராட்டங்களைச் சந்தித்து, சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் என வளர்ந்தார். பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 2003 மற்றும் 2013 ம் ஆண்டுகளில் தேர்தலில் போட்டியிட்டு ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வர் ஆனார்.  அடிப்படை வசதிகளில்கூட பின்தங்கிய மாநிலத்தில், ஒரு பெண் முதல்வராவது என்பது எளிதானதல்ல. அதை இரண்டாவது முறையாக சாதித்துக் காட்டிய வசுந்தரா, நம்பிக்கை நட்சத்திரம்! 
4. சோனியா காந்தி (காங்கிரஸ் பொதுச்செயலாளர்) 
டாப் 10 அரசியல் ஆளுமைப் பெண்கள்!
இத்தாலி நாட்டுப் பெண். ராஜீவ் காந்திக்கு மனைவியாகி இந்தியா வந்தார். வெளியுலகத்துடன் தொடர்பே இல்லாமல் இருந்தவர், தன் கணவரின் மரணத்துக்குப் பின் கட்சி, அரசியல் என களத்துக்கு வந்தார். கட்சியின் அடிப்படை உறுப்பினரான 62 நாட்களிலேயே கட்சியின் தலைவர் ஆனார். அயல்நாட்டுப் பெண்ணாக இருந்தாலும், இந்தியாவில் அரசியல் காய்களை துல்லியமாக நகர்த்தி ஆச்சர்யப்பட வைத்தார். பொதுத்தேர்தலில் வென்று பிரதமராகும் செல்வாக்குப் பெற்றாலும், 'இந்தியாவில் பிறக்கவில்லை' என்பதால் எதிர்ப்பு கிளம்ப, முடிவை மாற்றிக்கொண்டார் . இன்றுவரை அந்த வார்த்தைகள் இவரைத் தொடர்ந்துகொண்டிருந்தாலும், அனைத்தையும் கடந்து ஒரு தேசிய கட்சிக்குத் தனித்தன்மையுடன் தலைமை தாங்கி வருகிறார்.
5. மாயாவதி (உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர்)
டாப் 10 அரசியல் ஆளுமைப் பெண்கள்!
ஒடுக்கப்பட்டவர்கள் என நம் நாடு ஒதுக்கிவைத்த ஒரு சமூகத்தில் பிறந்த பெண் புரட்சியாளர், மாயாவதி. இவரது அனல் கக்கும் பேச்சைக் கேட்டு இவரை பகுஜன் சமாஜ்வாதி கட்சியில் இணைத்தார் அக்கட்சியின் அப்போதைய தலைவர் கன்ஷி ராம். அவரது இறுதிச் சடங்கில் ஒரு ஆண் செய்யவேண்டிய அனைத்துச் சடங்குகளையும், பாலியல் பாகுபாடுகளை உடைத்து, தானே செய்தார். 2007-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் ஆனார். பல இடங்களில் ஜாதி வேறுபாட்டை ஒழித்தார். எனினும் வழக்கமாக அரசியலில் எதிர்கொள்ளும் விமர்சனங்களும் தூற்றுதல்களும் இவர் மீது அளவுக்கு அதிகமாகவே எழுந்தன. பெண் என்பதால் பல இடங்களில் ஏளனத்துக்கு ஆளானார். 'விமர்சனங்கள், பிறப்பின் அடிப்படையில் இருக்கக்கூடாது, செயல்பாடுகளின் அடிப்படையில் இருக்க வேண்டும்' என்று நிரூபித்துக்காட்டினார்! 
6. பிருந்தா காரத்  (கம்யூனிஸ்ட் கட்சி )
டாப் 10 அரசியல் ஆளுமைப் பெண்கள்!
இந்தியக் கம்யூனிஸ வரலாற்றிலேயே அக்கட்சி கண்ட முதல் பெண் புரட்சியாளர், பிருந்தா காரத். தொடக்க காலத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரிந்தார்.  விமானத்தில் பணிபுரியும் பெண்கள் புடவை அணிவதால் ஏற்படும் சிரமத்தை தடுக்க, ஸ்கர்ட் அணிந்து பணிபுரிவதற்காக போராடி அனுமதி வாங்கினார். பின்னர் அரசியல் மீது ஆர்வம் கொண்டு கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முறையாக அரசியல் பாடம் பயின்றார். 1980-ம் ஆண்டு பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராகச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்ததில் இவருடைய பங்கு பெரிது. எப்போதும் பெண்கள் முன்னேற்றம், பாலின சமத்துவத்துக்கான போராட்டத்திலேயே இருப்பார். மாநிலங்களவை எம்.பி-யாக தேர்வானபோது மத்திய குழுவுக்கு  தேர்வு செய்யப்பட்டார். ஆனால், 'அந்தக் குழுவில் குறைந்தபட்சம் 5 பெண்கள் இருந்தால்தான் அந்த அங்கீகாரத்தை ஏற்பேன்' என்று போராடி பெண்களை உள்ளே கொண்டு வந்த துணிச்சல்காரர்! 
7. சுஷ்மா ஸ்வராஜ் (வெளியுறவுத் துறை அமைச்சர்)
டாப் 10 அரசியல் ஆளுமைப் பெண்கள்!
25 வயதிலேயே சட்டமன்ற உறுப்பினர் ஆனவர், இந்த வழக்கறிஞர். இந்தியாவின்
இரண்டாவது பெண் வெளியுறவுத்துறை அமைச்சர், 7 முறை நாடாளுமன்ற உறுப்பினர், ஒரு முறை டெல்லி முதலமைச்சர் என சுஷ்மாவின் தலையில் அலங்கரித்த கிரீடங்கள் ஏராளம்.  மிகச்சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருதை பெற்ற முதல் மற்றும் ஒரே பெண் உறுப்பினர். கடந்த நாடாளுமன்ற அவையில் எதிர்க்கட்சித் தலைவராக வீற்றிருந்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பெல்லாரி தொகுதியில் எதிர்த்து நின்றார். எந்த தூண்டுகோலும் இல்லாமல், சுய முயற்சியில் அரசியலில் தனக்கான நிரந்தர இடத்தை ஏற்படுத்திக்கொண்ட சீனியர் பெண்! 
8. ஷீலா தீட்சித்  (டெல்லி முன்னாள் முதல்வர் )
டாப் 10 அரசியல் ஆளுமைப் பெண்கள்!
இவருடைய அரசியல் பிரவேசம் தற்செயலானது. மந்திரியாக இருந்த தன் தந்தைக்குப் பல வகையிலும் உதவியாக இருந்த ஷீலாவின் ஆளுமைத் திறனைக் கண்டு வியந்த அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, இவரை அரசியலுக்கு கொண்டுவந்தார். 40 ஆண்டுகளுக்கு முன்னரே, இளம் பெண்கள் குழுவுக்குத் தலைமை தாங்கி, டெல்லியில் வேலைக்குச் செல்லும் பெண்களின் பாதுகாப்புக்காக பல சட்டங்களைக் கொண்டு வரக் காரணமாக இருந்தார். ஐ.நா. சபையில் இந்தியப் பிரதிநிதியாக ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். தேசிய தலைநகரத்தை முதலமைச்சராக  தொடர்ந்து மூன்று முறை ஆட்சி செய்தார். 15 ஆண்டுகளாக எந்த ராஜதந்திரத்தாலும் இவரை டெல்லி முதல்வர் நாற்காலியில் இருந்து இறக்க முடியவில்லை என்பது வரலாறு!  
9. ஆனந்தி பென் (குஜராத் முதல்வர்)
டாப் 10 அரசியல் ஆளுமைப் பெண்கள்!
சிறந்த தடகள வீராங்கனை. 1960-ம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்தபோது அங்கு படித்த ஒரே மாணவி இவர்தான். பின்னர் பள்ளி ஆசிரியையானார். ஒருமுறை பள்ளி சுற்றுலா சென்றபோது, சர்தார் சரோவர் அணையில் இரண்டு மாணவர்கள் தவறி விழ, உடனே அணையில் குதித்து அவர்களைக் கப்பாற்றினர். இந்த வீரச் செயலுக்காக குடியரசுத் தலைவரிடம் விருது பெற்றார். அப்போதே அவருடைய அரசியல் பிரவேசம் தொடங்கிவிட்டது. பா.ஜனதா. கட்சியில் சேருமாறு அக்கட்சி அழைக்க, அதை ஏற்றுக்கொண்டு களம் இறங்கினார். சீனாவில் நடந்த  சர்வதேச பெண்கள் கருத்தரங்கில், இந்தியாவின் ஒரே பிரதிநிதியாக கலந்துகொண்டார். தேசிய ஒருமைப்பாட்டுக்காக கட்சி களமிறங்கியபோது, குஜராத்திலிருந்து ஒரே பெண் தலைவராக வழிநடத்தினார். அடிப்படை தொண்டரில் இருந்து படிப்படியாக முன்னேறி, இப்போது முதல்வர் பதவியை அடைந்துள்ளார்!
10. ஜெயலலிதா ( தமிழக முதல்வர் )
டாப் 10 அரசியல் ஆளுமைப் பெண்கள்!
தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலமைச்சராக வீற்றிருக்கிறார் ஜெயலலிதா. அ.இ.அ.தி.மு.கவின் நிரந்தரப் பொதுச்செயலாளர். 16 வயதில் கல்லூரியில் படிக்க சீட் கிடைத்தபோது, குடும்பச் சூழலால் சினிமாவுக்கு நடிக்க வந்தார். பின் எம்.ஜி.ஆரால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டார். சந்தித்த அவமானங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. வேறொரு பெண்ணாக இருந்திருந்தால், அரசியலே வேண்டாம் என்று ஓடியிருப்பார். திருமணம் செய்துகொள்ளாமல் பொது வாழ்க்கையிலேயே மூழ்கிவிட்டார். தடைகள் பல கடந்து, தகர்த்து, கருணாநிதி போன்ற அரசியல் ராஜதந்திரிகளுக்கு மத்தியில், தமிழக அரசியலில் தனி ஒருத்தியாக விஸ்வரூபம் எடுத்தார். 68 வயதிலும், சாதனைப் பயணத்தை தளராமல் தொடர்ந்துகொண்டிருக்கிறார், ஜெயலலிதா! 
-தா. நந்திதா 
(மாணவப்பத்திரிகையாளர்)