Published:Updated:

தூங்கா நகரத்தை தூய்மை நகரமாக மாற்ற அபர்ணா என்ன சொல்கிறார்? #CleanMadurai

 தூங்கா நகரத்தை தூய்மை நகரமாக மாற்ற அபர்ணா என்ன சொல்கிறார்? #CleanMadurai
தூங்கா நகரத்தை தூய்மை நகரமாக மாற்ற அபர்ணா என்ன சொல்கிறார்? #CleanMadurai
 தூங்கா நகரத்தை தூய்மை நகரமாக மாற்ற அபர்ணா என்ன சொல்கிறார்? #CleanMadurai

அபர்ணா மதுரைப் பெண். 70வது சுதந்திர தின விழாவில், முதல்வரிடம் ‘சிறந்த இளைஞர் விருது’ பெற்றுள்ளார். வாழ்த்துகளுடன் சந்தித்தோம் இந்த 24 வயது இளம் எனர்ஜியை.

‘‘என் அப்பா மகாராஜன், பிரபல பத்திரிகையில் செய்தியாளரா இருக்கார். அம்மா ரமா பிரபா, கைவினைப் பொருட்கள் பயிற்சியாளர். பி.ஏ., பி.எட்., எம்.ஏ., எம்.ஃபில் படிச்சிருக்கிற நான், இப்போ ஒரு தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியரா வேலை பார்க்கிறேன்.

2௦10ல் கல்லூரியில் முதல் வருடம் படிச்சப்போ, மத்திய அரசின் இளைஞர் நல மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கிவர்ற நேரு யுவகேந்திரா சங்கம் பற்றி தெரியவந்தது. அதன் மூலமா பல சேவைப் பணிகளில் என்னையும் இணைச்சுக்கிட்டேன். எங்க ஏரியாவில் ‘பட்டாம்பூச்சி இளைஞர் மன்றம்’ என்ற பெயரில் ஓர் அமைப்பை நான் தொடங்கினப்போ எனக்கு 19 வயது. அதன் மூலமா பல நல்ல முயற்சிகளை இன்னும் விரிவான தளங்களில் செய்ய முடிந்தது.

எங்க மன்றம் சார்பா உலக சுகாதார நாள், எய்ட்ஸ் ஒழிப்பு தினம் போன்ற முக்கிய தினங்களில் பல பேரணிகளை நடத்தியிருக்கோம். கடந்து ஐந்து வருஷமா தொழில்துறை மேம்பாட்டுப் பயிற்சி நடத்திட்டு வர்றோம். ஏதாவது ஒரு சமூகப் பிரச்னையை மையமா வெச்சு தெருக்கூத்து மூலமா அதைப்பத்தின விழிப்பு உணர்வை மக்கள்கிட்ட ஏற்படுத்திட்டு வர்றோம். ப்ளாஸ்டிக்கின் தீமை, புகையிலையின் தீமை பற்றியெல்லாம் மக்கள்கிட்ட எடுத்துச் சொல்ல, நாடகம் வலிமையான மீடியமா இருக்கு.

ராமேஸ்வரத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றி நாங்க எடுத்துச்சொன்னப்போ, நிறைய பேர் ‘நாங்க வீட்டுக்கொரு மரம் வளர்க்குறோம்’னு எங்ககிட்ட உறுதிகொடுத்துட்டுப் போனாங்க. இந்த மாதிரி நிறைய மாற்றங்களை மக்கள்கிட்ட ஏற்படுத்தியிருக்கிறதை எங்களோட வெற்றியா நினைக்கிறோம்’’ என்று சொல்லும் அபர்ணா, மதுரை ஆட்சியரிடம் ‘சிறந்த இளைஞர்மன்ற விருது’ பெற்றுள்ளார். இவர் ஒரு பட்டிமன்றப் பேச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

 தூங்கா நகரத்தை தூய்மை நகரமாக மாற்ற அபர்ணா என்ன சொல்கிறார்? #CleanMadurai

‘‘பிள்ளைங்க இன்ஜினீயர் ஆகணும், நிறைய சம்பாதிக்கணும்னு எதிர்பார்ப்புகள் இருக்கிற பெற்றோர்களுக்கு மத்தியில, சேவைத்தளத்தில் என்னை ஊக்குவிக்கும் என் பெற்றோராலதான் இன்னைக்கு இந்த விருது எனக்குக் கிடைச்சிருக்கு. சில நற்செயல்களுக்காக உதவிகேட்டுப் போகும்போது கைகொடுத்த உறவினர்கள், நண்பர்களுக்கு நன்றிகள் நிறைய. பெண்களுக்கான விழிப்பு உணர்வு, மதுரையை தூய்மையான மாநகராட்சியாக்குவது... இது ரெண்டும்தான் இப்போ என் எதிர்காலத் திட்டம்

இந்த இரண்டும் நிறைவேற இப்போதைக்கு சில ஐடியாக்கள் இருக்கு.

மதுரையை ஒட்டியிருக்கும் கிராமங்களை தத்தெடுத்து தூய்மைப் பணிகளைப் பிரித்துக்கொள்வது, மதுரைக்கு அழகு சேர்க்கும் வைகை நதியின் அருகே வசிப்பவர்களில் நதியை தூய்மையாக்கும் எண்ணம் இருப்பவர்களைப் பட்டியலிட்டுக் கொள்ளவேண்டும். அவர்களை பல பிரிவுகளாக பிரித்து, தேதி வாரியாக வேலைகளை ஒப்படைப்பது. ஒருவர் மாதத்தில் ஓரிரு நாட்கள் வந்தாலே போதும் என்கிற அளவுக்கு தன்னார்வலர்களை அதிகப்படுத்துவது. சமூகப் பணிகளில் ஈடுபடுவது என்பது பெண்களுக்கு ரொம்பவும் பிடித்தமான ஒன்று. ஆனால் இது முழுமையாக நடைமுறையில் இருப்பதில்லை. பெண்களின் முழு சக்தியையும் இதில் பயன்படுத்துவதும் ஆதரவற்றவர்களுக்கான வேலை வாய்ப்பாக தூய்மைத் திட்டத்தை விரிவு செய்யணும். சேதம் அடைந்தும் பராமரிப்பு இல்லாமலும் கிடக்கும் நம்முடைய பாராம்பரிய கோவில்கள், மண்டபங்களை ஞாயிறு தோறும் சீரமைக்க குழுக்களை உருவாக்க வேண்டும். இன்னும் நிறைய திட்டங்கள் மனசில் இருக்கு. ஆனால் இதையெல்லாம் நல்லவிதமாக நடக்கணும் என்றால் மக்களிடையே மதுரையைத் தூய்மையாக்க வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக உருவாக வேண்டும். அதை ஏற்படுத்த வீதி நாடகங்களை நடத்தவேண்டும்" என்று நம்பிக்கையுடன் தன் திட்டங்களைக் கூறுகிறார் அபர்ணா.

தூங்கா நகரை தூய்மைப் படுத்த நினைக்கும் அபர்ணாவின் எண்ணம் நிறைவேட்டும்.

- வெ.வித்யா காயத்ரி (மாணவப்பத்திரிகையாளர்)