Published:Updated:

‘மாமியாரை ஏன் வில்லி ஆக்கணும்?’- கடுகடு விசு! #mother-in-law-day

‘மாமியாரை ஏன் வில்லி ஆக்கணும்?’- கடுகடு விசு!   #mother-in-law-day
‘மாமியாரை ஏன் வில்லி ஆக்கணும்?’- கடுகடு விசு! #mother-in-law-day

மாமியார்! - உச்சரித்துப் பார்க்கையில் இது ஓர் உறவின் பெயராக மட்டும் தெரிந்தால் இன்னொரு முறை உச்சரியுங்கள் ப்ளீஸ். நீங்கள் திருமணம் ஆனவராக இருக்கலாம், ஆகாதவராகவும் இருக்கலாம். ஆனால் மாமியார் என்கிற வார்த்தையின் வலிமையை நீங்கள் கவனிக்கத் தவறி இருக்க வாய்ப்பில்லை.
அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சித்தி, சித்தப்பா, மாமனார், மைத்துனர் என ஆயிரம் உறவுகள் இருந்தாலும் மாமியார் என்கிற உறவின் உன்னதம் அதை  முழுமையாய் உணரும்போது அலாதியானது.


மாமியார் என்பவள்  நீங்கள் அஞ்சுவதற்கோ அல்லது அவளை விரோதம் பார்க்கவோ,  உருவாக்கப்பட்ட உறவு அல்ல.. நீங்கள் ஆணாய் இருந்தாலும் பெண்ணாய் இருந்தாலும் திருமணத்துக்குப் பிறகு இந்த  உறவு உங்களுக்கு கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால் இந்த உறவை நாம்  முழுமையாய்  நேசிக்கிறோமா?


விளையாட்டுக்குச் சொல்லும்போது கூட காவல்நிலையத்தை ’மாமியார் வீடு’ என்று தான் போகிறப் போக்கில் சொல்லிவிடுகிறோம். அப்படி என்றால் அத்தனை சிக்கலானதா இந்த மாமியார் வீடு?. நிச்சயமாக இல்லை. உளவியல் ரீதியாக பார்த்தோம் என்றால் குடும்ப உறவுகள் எல்லாவற்றிலுமே சிக்கல் இருக்கத்தான் செய்கிறது. அப்பாவுக்கும் பிள்ளைக்கும், அம்மாவுக்கும் பிள்ளைக்கும், சகோதரர்களுக்குள், சகோதரிகளுக்குள், கணவன் மனைவிக்குள் என உறவுச்சிக்கல் எல்லா நிலைகளிலும் சூழல்களைப் பொறுத்து அமைந்தாலும், மாமியார்-மருமகனுக்குமான உறவுச் சிக்கலைக் காட்டிலும் மாமியார்- மருமகளுக்குமான உறவுச்சிக்கல் சற்று அதிகமாய் இருப்பதாய் காண முடிகிறது.


ஒரு பெண் தன் பிறந்த வீட்டில் இருந்து கணவன் வீட்டுக்குச் செல்லும்போது அவள் சந்திக்கும் சூழலே அவளை மாற்றுச் சிந்தனைக்கு உட்படுத்துகிறது. இத்தனை காலமாய் தன்னை விரும்பி நேசித்த அம்மாவைப் போலவே இங்கே ஒரு அம்மா அவள் மகனை, அதாவது அவள் கணவனை நேசிக்கும்போது சின்ன ஏக்கம் அவளை அறியாமலே அவளுக்குள் ஒளிந்து கொள்கிறது. இதேபோலவே தான் இத்தனை காலமாய் நேசித்த தன் மகனை தனக்கு நிகராக கவனிக்கவும், நேசிக்கவும் ஒருத்தி வந்துவிட்டாளே என்ற அன்பின் ஆழம் மாமியாருக்குள்ளும் மெதுவாய் ஒட்டிக் கொள்கிறது. இந்த அன்பின் போட்டி தான் நாளடைவில் மாமியார்- மருமகள் சண்டையாக வேறு சில காரணங்களை வைத்து அமைந்துவிடுகிறது. இந்த இடத்தில் புரிதல் இல்லாத சில விதிவிலக்குகளை விட்டுவிடுவோம்.


முந்தைய காலங்களைக் காட்டிலும் இப்போது மாமியாரை மருமகள்களும், மருமகன்களும்  ’அம்மா’ என்று அழைப்பதை கவனிக்க முடிகிறது. இந்த வார்த்தை மாற்றம் மட்டும் இந்த உறவை வலுபடுத்திவிடுமா என்றால் இதை ஒரு பெருமாற்றத்துக்கான துவக்கமாக எடுத்துக் கொள்ளலாம். குடும்பச் சிக்கல்கள் எதுவாக இருந்தாலும் மாமியாரை ஒதுக்கி வைக்காமல் அவர்களுடன் பங்கெடுப்பது, வெளியிடங்களுக்குச் செல்லும்போது அவர்களை அழைத்துப் போவது, குடும்ப நிர்வாகத்தை அவர்களின் ஆலோசனையுடன் அவர்களுடன் இணைந்து வழிநடத்துவது, மரியாதை குறையாமல் பேசுவது, அவர்கள் நோயுற்ற காலங்களில் அக்கறை எடுத்துக் கொள்ளவது, அதிகம் வேலை வாங்காமல் இருப்பது.. இப்படி பல சூழல்களில் அவர்களை நாம் கவனித்துக் கொள்ள வேண்டியது மிகமிக அவசியம். இது பெண்ணின் மாமியாருக்கு மட்டுமல்ல. ஆணின் மாமியாருக்கும் பொருந்தும்.


’’ மாமியார் என்னும் உறவுக்கு பலம் சேர்க்கிற, அதே நேரத்தில் பயமுறுத்துகிற பங்கை சமூக ஊடகங்கள், திரைப்படங்கள், சின்னத்திரை ஆகியன செய்து வருகின்றன. அதை மக்களிடம் தெளிவாக கொண்டு சேர்ப்பதுதான் படைப்பாளியின் கடமை’’ என்னும் விசு, மாமியார் என்னும் உறவு குறித்து வெளிப்படையாய்ப் பேசுகிறார்.


‘’எனக்கு மொத்தம் மூணு பெண் பிள்ளைங்க. மாமியாரிடம் அம்மா பொண்ணு போலவே இருக்காங்க. அதேபோல என் அம்மா, என் மேல் எடுத்துக் கொள்ளும் அக்கறையை விட அவங்க மருமகள் மேல தான் அதிகமா அக்கறை எடுத்துப்பாங்க. எனக்கு சப்போர்ட் பண்றதைவிட என் மனைவிக்கு பண்றதுதான் அதிகமா இருக்கும். சகலகலா சம்மந்தி,சம்சாரம் அது மின்சாரம், பெண்மணி ஒரு கண்மணி, உரிமை ஊஞ்சலாடுகிறது போன்ற என்னோட நிறைய திரைப்படங்கள்லயும் இந்த உறவுகான புரிதலை என்னால் முடிந்த அளவுக்கு மக்களிடம் சேர்த்திருக்குறதா நம்புறேன்.
தினம் ஒரு ஸ்வாரஸ்யத்தை கூட்டணுங்கிறதுக்காகவே  மாமியாரை வில்லியாகவும் கொடுமைப் படுத்துறவளாவும் காட்டுறதை தொலைக்காட்சி தொடர்கள் நிறுத்திக்கலாம். மாமியார், மருமகள் ரெண்டு பேருமே வீட்ல இருக்குறப்ப ஒளிபரப்பாகும் கற்பனையான சித்தரிக்கப்பட்ட கதாப்பாத்திரங்கள் அதை பார்க்கும் உறவுகளிடம் ஒரு ஆரோக்கியமான சமூகத்தை கொண்டு சேர்க்காது. அதனால் ஊடங்கங்களும் உறவுகளை கவனமாக கையாளணும்’’ என்றார் அக்கறையாய்!.

பெரிதாக ஒன்றுமில்லை. இவ்வளவு தான். மாமியார் என்று நீங்கள் அழைக்கும் நபர் எங்கோ ஒரு வேற்று கிரகத்தில் இருந்து முளைத்தவர் அல்ல...அவர் உங்கள் கணவருக்கு அம்மா. அல்லது உங்கள் மனைவிக்கு அம்மா.
இந்த அம்மாக்களை அலாதியாய் நேசிக்கப் பழகுவோம்!

#mother-in-law-day

- பொன்.விமலா