Published:Updated:

பேருந்துபயணத்தில் பாலியல் தொல்லை... முற்றுப்புள்ளி வைக்கும் 'துர்கா எச்சரிக்கை மணி'!

பேருந்துபயணத்தில் பாலியல் தொல்லை... முற்றுப்புள்ளி வைக்கும் 'துர்கா எச்சரிக்கை மணி'!
பேருந்துபயணத்தில் பாலியல் தொல்லை... முற்றுப்புள்ளி வைக்கும் 'துர்கா எச்சரிக்கை மணி'!

பெங்களூரு மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களை பாலியல் தொல்லை செய்பவர்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் எச்சரிக்கை மணியைப் பொருத்த முடிவெடுத்திருக்கிறது,  மாநகரப் பேருந்து நிர்வாகம். இதற்காக பல வகைகளில் முயற்சி மேற்கொண்டவர் பெங்களூரூவில் வசிக்கும் 'துர்கா இந்தியா' அமைப்பின் நிறுவனர், ஆடிட்டர் பிரியா வரதராஜன். இரண்டு பெண் குழந்தைகளின் தாயான பிரியா வரதராஜனுக்கு பாராட்டுகள் சேர்ப்பித்தோம்!

''2012-ஆம் ஆண்டு டெல்லியில் மாணவி ஜோதி சிங் ஓடும் பேருந்தில் தன் ஆண் நண்பனின் கண்ணெதிரே சமூக விரோதக் கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா எங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்படி ஒரு சம்பவம் நடந்த பின் போராட்டம், இரங்கல் கூட்டம் என நடத்துவதைவிட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்ன செய்ய வேண்டும் என யோசித்தத்தின் விளைவாக, 'துர்கா இந்தியா' தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை ஏப்ரல் 2013ல் ஆரம்பித்தேன். மூன்று வருடங்களுக்கும் மேலாக மக்கள் இயக்கமாகவே இதை நடத்தி வருகிறேன்.

மாநகரப் பேருந்துகளில் பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு அதிகம் ஆட்படுகிறார்கள். பல பெண்கள் மவுனம் காக்கிறார்கள். சிலர் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். பின்விளைவுகளை யோசித்து எந்தப் பெண்ணும் தனக்கு நேரும் கொடுமையைத் தட்டிக்கேட்க முன்வருவதில்லை. ஆனால், குற்றவாளிகள் உடனடியாகத் தண்டிக்கப்படுவார்கள் என்ற சூழல்தானே குற்றங்களைக் குறைக்கும்?  எனவே பெங்களூரூவில் உள்ள எம்.எஸ். இராமையா தொழிற்நுட்ப கல்லூரி மாணவர்களின் உதவியுடன், அதற்குத் தீர்வாக ஒரு எச்சரிக்கை மணியை உருவாக்கினோம்'' என்ற பிரியா, அந்த மணி பற்றிச் சொன்னார்.

''டிரைவர் இருக்கையின் மேல் பேனல் ஒன்றையும், பேருந்தின் உட்புறத்தில் இருபக்கமும் மகளிர் இருக்கைகளில் வரிசையாக ஸ்விட்ச்களையும் பொருத்தினோம். பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளின் கைக்கு எட்டும் உயரத்தில் ஸ்விட்ச்கள் இருக்கும். அவர்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக நேரிட்டால், அந்த ஸ்விட்சை அழுத்தினால் போதும்... பேருந்தின் உட்புறமும் வெளியிலும், தொடர்ந்து 20 வினாடிகளுக்கு எச்சரிக்கை மணி (அலார்ம்) ஒலிக்கும். பேருந்தின் ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தி பிரச்னையைத் தீர்க்க வேண்டும். பின் பேனலில் உள்ள ஸ்விட்சை அழுத்தி எச்சரிக்கை மணியை நிறுத்த வேண்டும்.

பிரச்னை தீர்க்கப்படாதபோது, 10 வினாடிகளுக்கு ஒருமுறை எச்சரிக்கை மணி தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். அதோடு பேருந்தின் உள்ளும் வெளியிலும் பொருத்தியிருக்கும் ஃப்ளாஷ் லைட்கள் சக பயணிகள், பொது மக்கள் மற்றும் போலீஸின் கவனத்தையும் ஈர்க்கும்'' என்று பெண்களின் கைகளுக்குக் கிடைத்திருக்கும் அந்த ஒலி ஆயுதம் பற்றிச் சொன்னவர்,

''முதலில் பெங்களூரூ அரசியல் விவகாரக் குழுவிடம் இந்த எச்சரிக்கை மணிக்காக முறைப்படி அனுமதி பெற்றோம். கர்நாடக போக்குவரத்துத்துறை அமைச்சரும் தன் இசைவையும் ஆதரவையும் தெரிவித்தார். ஆனாலும் மாநகரப் பேருந்து நிர்வாகம் சம்மதம் தெரிவிக்கவில்லை. நாங்கள் விடாமல் தன்னார்வத் தொண்டர்களின் உதவியுடன் இந்த முயற்சி குறித்த விழிப்பு உணர்வு பிரசாரங்களைச் செய்தோம். இணையதளங்களின் மூலம் இதற்கான ஆதரவு கோரி தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தோம். பலகட்ட முயற்சிகளுக்குப் பின் மாநகரப் பேருந்து நிர்வாகம் இதை ஏற்று, தன் சுற்றறிக்கையின் மூலம் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பணியாளர்களுக்கு இந்த எச்சரிக்கை மணி குறித்து விளக்கிக் கூறினர்'' என்ற பிரியா,

''முதற்கட்ட சோதனை முயற்சியாக ஐந்து பேருந்துகளில் மட்டும் வெவ்வேறு வழித்தடங்களில் எச்சரிக்கை மணியைப் பொருத்த அனுமதி பெற்றோம். பின் சர்வேக்களின் மூலம் பயணிகளின் கருத்தை அறிந்தோம். இந்த ஆண்டு இறுதிக்குள் 500 மாநகரப் பேருந்துகளில் இந்த எச்சரிக்கை மணியைப் பொருத்த முடிவெடுத்து ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டிருக்கிறார்கள் மாநகரப் பேருந்து நிர்வாகிகள்.

இந்தியா முழுவதும் எல்லா நகரங்களிலும் பேருந்துகளில் மட்டுமின்றி மெட்ரோ ரெயில், ஆட்டோ மற்றும் டாக்ஸிகளில் இந்த எச்சரிக்கை மணியைப் பொருத்த எங்களால் இயன்ற முயற்சிகளை செய்து வருகிறோம். பெரும் தொழில் நிறுவனங்கள் உதவினால் இந்த தொழிற்நுட்பத்தை எல்லா நகரங்களுக்கும் எளிதில் விரிவுபடுத்தலாம்'' என்கிறார் பிரியா வரதராஜன்.

பெண்களுக்கான இந்த பாதுகாப்பு ஒலி விரவட்டும் நாடெங்கும்!

- ஶ்ரீலோபாமுத்ரா