Published:Updated:

பெண் குழந்தைகளிடம் பெற்றோர் சொல்லவேண்டிய, சொல்லக்கூடாத விஷயங்கள்! #GoodParenting

பெண் குழந்தைகளிடம் பெற்றோர் சொல்லவேண்டிய, சொல்லக்கூடாத விஷயங்கள்! #GoodParenting
பெண் குழந்தைகளிடம் பெற்றோர் சொல்லவேண்டிய, சொல்லக்கூடாத விஷயங்கள்! #GoodParenting

பெண் குழந்தைகளிடம் பெற்றோர் சொல்லவேண்டிய, சொல்லக்கூடாத விஷயங்கள்! #GoodParenting

பெண் குழந்தைகளுக்கு இன்றைய காலகட்டத்தில் தவறாது சொல்லிக்கொடுக்க வேண்டிய, சொல்லிக்கொடுக்கக் கூடாத விஷயங்களைப் பட்டியலிடுகிறார்,

உளவியல் நிபுணர் நப்பின்னை.

செல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்கள்!

* ''தன்னை எல்லா சூழல்களிலும் தானே பார்த்துக்கொள்ள, தற்காத்துக்கொள்ளத் தேவையான அடிப்படை விஷயங்களை நிச்சயம் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

* எடுத்த எடுப்பிலேயே ஒருவர் மீது அளவுகடந்த நம்பிக்கை காட்டுவதோ அல்லது வெறுப்பைக் காட்டுவதோ கூடாது, மற்றவர்களிடம் இருக்கும் குறைகளைவிடவும், நல்ல விஷயங்களை முதன்மையாக எடுத்துக்கொண்டு, யார் மனதும் புண்படும்படி நடந்துக்கொள்ளக் கூடாது என்பதைப் புரியவைக்க வேண்டும்.

* நியாயமான முறையில் தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான ஆற்றலும், மனநிலையும் உருவாகும் படி அவர்களை பக்குவப்படுத்த வேண்டும். பெண் குழந்தையின் ஒவ்வொரு நல்ல முயற்சியையும் மனதார பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும்.  

* பலதரப்பட்ட சூழல்களையும் சந்திக்க வேண்டிய இந்த உலகில், புதிய மனிதர்களிடம் எளிதாகப் பழகுவது, அதே சமயம் தன் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வழிமுறைகளை ஏற்படுத்திக்கொள்வது பற்றிச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் பள்ளி, கல்லூரி, வேலை, திருமணம் என பல புதிய சூழல்களை அடுத்தடுத்து சந்திக்கும் பெண்கள், அவற்றை தயக்கமின்றி எதிர்கொள்வதுடன், தங்கள் திறமைகளை பலரும் பாராட்டும் வகையில் வெளிப்படுத்துவார்கள். 

* பெற்றோர், சகோதர-சகோதரிகள், நண்பர்கள், நலம் விரும்பிகள் என அனைத்து உறவுகளிடமும், நட்பிடமும் அன்பாக, எதிர்பார்ப்பு இல்லாத சிநேகத்தை ஏற்படுத்திக் கொள்ள ஆலோசனைகளைச் சொல்ல வேண்டும். மேலும் பெற்றோரிடம், குறிப்பாக தன் தாயிடம் எந்த விஷயத்தையும் வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ள அறிவுறுத்த வேண்டும். அதற்கான இணக்கமான, புரிதலுடன் கூடிய சூழலையும் உருவாக்க வேண்டும்.

சொல்லக்கூடாத விஷயங்கள்!

* பெண் குழந்தைகளுக்கு அச்சம் தரும், அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும் வகையிலான செயல்களை சொல்வதோ, செய்வதோ கூடாது. 

* ஆண் குழந்தைக்கு, பெண் குழந்தையைவிட அதிக முக்கியத்துவம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆண் குழந்தை பிறந்த உடன், மூத்த பெண் குழந்தை மீது கவனம் குறைந்துபோகும் சூழலுக்கு இடம் தரக் கூடாது. ஆணும் பெண்ணும் சரிசமம் என்பதை வாய் வார்த்தையாகச் சொல்லாமல், அதனை அவர்களே உணரும் வகையில் பெற்றோர்களின் வளர்ப்பு இருக்க வேண்டும். மேலும், மூத்த பெண் குழந்தை அதிக பொறுப்புடன், விட்டுக்கொடுத்து போகவேண்டும், வீட்டில் வேலைகள் செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறி, அந்தச் சிறுமிக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

* 'எதிர்த்துப் பேசாம நான் சொல்றதை மட்டும் கேளு' என்று பெண் குழந்தைகளிடம் அதிகாரம் செலுத்தாமல், ஒரு செயலால் விளையும் நன்மை, தீமைகளை அவர்களுக்கு அன்புடன் புரியும்படியாக சொல்லிக் கொடுக்க வேண்டும். மேலும், எப்போதும் பெண் குழந்தைகளை கண்காணித்தபடியே இருந்தால், அவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ள மாட்டார்கள். இதனால் அவர்களின் தனித்திறமைகள் வெளியே தெரியாமலும், சுய சிந்தனை வளராமலும் போகலாம். எனவே, அவர்களை சுதந்திரமாகச் சிந்திக்க, செயல்படவிடவேண்டும்.

* கிரிக்கெட், ரோபாட்டிக்ஸ், கராத்தே என்று தனக்கு ஆர்வமுள்ள ஒரு விஷயத்தை பெண் குழந்தை கற்றுக்கொள்ள விரும்பும்போது, 'அதெல்லாம் பொண்ணுங்களுக்கு சரிப்பட்டு வராது' என்று கூறி மறுப்பது நியாயம் அன்று. இன்றைய உலகில் ஆண்களுக்கானது என்று எந்தத் துறையும் இல்லை. அவர்கள் விரும்பும் துறை எதுவாக இருந்தாலும், அதில் அவர்கள் முன்னேற உறுதுணையாக இருக்க வேண்டியது பெற்றோர் பொறுப்பு. 'ஆண், பெண் பாகுபாடற்ற சமுதாயத்தில் உன் திறமையை முழுமையாக வெளிப்படுத்தினால் நிச்சயம் வெற்றி பெறலாம்' என ஊக்கம் கொடுக்க வேண்டும்.

* ஆண் குழந்தை அழுதால் தவறு எனச் சொல்பவர்கள், பெண் குழந்தைக்கு அதையே அடையாளமாக, அவர்களின் ஆயுதமாக கைகொள்ளும்படி அவர்களை வளர்ப்பது தவறு. 'அழுகையால் எந்தக் காரியமும் முடியாது. திறமையும், தைரியமும், முயற்சியும் மட்டுமே நீ வேண்டுவதை பெற்றுத் தரும்' என்று சொல்லி வளர்க்க வேண்டும்.'' 

- கு.ஆனந்தராஜ்

அடுத்த கட்டுரைக்கு