Published:Updated:

என் மனைவி

என் மனைவி

என் மனைவி

தமிழ், தெலுங்கு, இந்தி எனக் கலக்கும் மாஸ் டைரக்டர் ஏ.ஆர். முருகதாஸ். 'என் மனைவி’க்காக அவர் பகிர்ந்த வார்த்தைகளில் நிறைந்திருந்தன, பெண்மையைத் தன் பாணியில் அந்த மெகா டைரக்டர் புரிந்து கொண்ட பரவசமும், பக்குவமும்!

'' 'ரமணா’ படத்துக்காக, என்னோட சொந்த ஊரான கள்ளக்குறிச்சி கடை வீதியில ஒரு நாள் ஷூட் பண்ணினேன். வரிசையா பஸ், கார், பைக் எல்லாம் நின்னு டிராஃபிக் ஜாம் ஆயிடுச்சு. அப்படி நின்ன ஒரு பஸ்ல 'என் ஆளும்’ இருந்திருக்காங்க. அப்ப, அது எனக்குத் தெரியாது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதை ஒரு 'ஓபனிங்’குக்காக சொல்றேன்!

##~##

'ரமணா’ ரிலீஸ் ஆகி, எனக்கு நல்ல பெயர் கிடைச்சுது. 'பையனுக்கு கல்யாணத்தை முடிச்சுடணும்’னு வீட்டுல எடுத்த முடிவுக்கு நானும் தயாராகிட்டேன். ஆனா, பொண்ணுதான் கிடைக்கல. வீட்டுல பார்த்துப் பார்த்து சலிச்சுட்டாங்க. சினிமாவுல இருக்கறது நிறைய பேருக்கு சரினு தோணல போல. டிவி-யில நிகழ்ச்சிகள், சீரியல்ல வர்ற பொண்ணுங்கள எல்லாம் பார்த்து, 'டேய், இந்தப் பொண்ணு நல்லாயிருக்காடா, பார்க்கலாமா?’ங்கற அளவுக்கு பொண்ணு பஞ்சமா போயிடுச்சு.

அந்தச் சமயத்துல எங்க ஊர்ல ஒரு கும்பாபிஷேகம். நானும் போயிருந்தேன். அப்பத்தான் 'அவங்கள’ பார்த்தேன். 'என்ன படிக்கிறீங்க?’னு விசாரிச்சா, பளிச்சுனு 'எம்.எஸ்சி. இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி’னு சொன்னாங்க. நான் விபூதிய பூசிக்கிட்டு வீட்டுக்கு வந்த கையோட, 'ரம்யாவைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்’னு சொன்னேன். என்னோட மச்சான், அவங்க வீட்டுக்குப் போய் பெண் கேட்டார். பொண்ணு வீட்ல அத்தனை பேருக்கும் ஷாக். 'என்னடா, நேத்துதான் பார்த்தார்... இன்னிக்கு பெண் கேட்டு வர்றாங்க’னு ஆச்சர்யம். பொண்ணு யோசிச்சு சொல்ல  ஒரு மாதம் டைம் வேணும்னு சொல்லிட்டாங்க.

அப்புறம் அவங்ககிட்ட போன்ல பேச ஆரம்பிச்சேன். எடுத்த படம், எடுக்கப் போற படம், கதைகளைஎல்லாம் சொல்ல ஆரம்பிச்சேன். 25 நாள்லயே ஓ.கே! ஊருலதான் கல்யாணம்.

என் மனைவி

இதுவரைக்கும் தனியா இருந்து பழகியாச்சு. இப்போ கல்யாணம் செய்தாச்சு. அசிஸ்டென்ட் டைரக்டரா இருந்து கஷ்டப்பட்ட நாட்கள்ல... 'காலையில எங்க சாப்பிடுவோம், மதியம் யாரு சாப்பாடு தருவாங்க, ராத்திரி சாப்பிட ஏதாச்சும் கிடைக்குமா?'னு யோசனை ஓடிக்கிட்டு இருக்கும். அதெல்லாம் கடந்த காலமாகி, நமக்கான சாப்பாட்டை தருகிற கைகள் இப்போ தெரிஞ்சு போச்சு. ஆனா, எப்படி எப்படிஎல்லாம் வாழலாம்னுதான் ஆரம்பத்துல தெரியல.

சினிமா பத்தி அவங்ககிட்டே கல்யாணத்துக்கு அப்புறமா பேசல. முழுக்க குடும்பத்தைப் பத்தின பேச்சு மட்டும்தான் அதிகமா இருக்கும். சமையல் பத்தி உடனே விமர்சனம் பண்ணிடுவேன். படிப்புல கவனமா இருந்த  பொண்ணுங்கறதால, சமையல் அவங்களுக்கு அவ்வளவா கை வராத காலம். இருந்தும் குறை சொல்வேன். மனசு கோணாம குறை சொல்றது எப்படினு தெரியாம போனதுதான் துரதிர்ஷ்டம். ஆனாலும், எல்லாத்தையும் பொறுமையா கடந்தாங்க ரம்யா.

'கஜினி’ ரிலீஸானதும், முதல் நாள் படத்தைப் பார்த்துட்டு, என்னோட குறைகள, வரிசையா அடுக்கி வெச்சாங்க. அதையெல்லாம் இந்தி 'கஜினி’யில் மாற்றினது வேற விஷயம்!

நாட்கள் கழிய கழிய நிறைய கத்துக்கிட்டேன். வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும்போது அதன் உண்மைகள் வேற மாதிரியிருக்கு. அதிக வேலை. மனைவிகிட்டே நிலைமையைச் சொல்லி புரிய வைக்க முடிஞ்சுது. 'அதேபோல நீங்க என்னைப் புரிஞ்சுக்கறதும் அவசியம்’னு அந்த பக்குவத்தை எனக்குள்ள அழகா வளர்த்தாங்க என் மனைவி. மனசு புரிஞ்ச நாட்கள்ல, அன்பு வளர்ந்தது. அவங்க கருவுற்றாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்தது.

நாலஞ்சு மாசம் கழிச்சு துடிச்சுப் போய் ஒரு நாள் ராத்திரி எனக்கு போன். வெளியிலிருந்து ஓடி வந்தேன். அபார்ஷன் ஆகியிருந்தது. குழந்தை பெத்துக்கற வலியும், அபார்ஷனும் ஒண்ணுதான்னு அப்பதான் எனக்குத் தெரிஞ்சுது. 70 வயசுல இறந்தாலும், 120 நாள்ல இறந்தாலும் மரணம் ஒண்ணுதான்னு புரிஞ்சது. என் அம்மா, அக்கா, மனைவி மேலே வெச்சிருந்த மரியாதை கூடுது. உடற்கூறு தெரியாம, உண்மை புரியாம வளர்ந்திருக்கோமேனு மனசு அல்லாடுச்சு. அம்மாவை ஆராதிக்க தோணுச்சு. அக்காகிட்டே 'எப்படியிருக்க’னு உட்கார்ந்து பேசத் தோணுச்சு. அதுவரைக்கும் பார்த்த மனைவி வேற மாதிரி தெரிஞ்சாங்க. அவங்களை இன்னும் ரசிக்க, மதிக்க ஆரம்பிச்சேன்.

அடுத்த தடவை மறுபடியும் அவங்க தாய்மை அடைஞ்சாங்க. அப்போ சிரஞ்சீவியை வெச்சு தெலுங்குல 'ஸ்டாலின்'னு ஒரு படம் பண்ணிக்கிட்டு இருந்தேன். திடீர்னு ஒரு ராத்திரி 'அன்பா பேசுங்க’னு போன்ல கூப்பிடுவாங்க. 'நம்மோட வேலைப் பளுவுக்கு நம்மள பலி கொடுத்துட்டு, அன்பை கேட்டு வாங்கற அளவுக்கு அவங்கள தவிக்க வெச்சுட்டோமே'னு மனசு பதறுச்சு. அப்புறம் ரொம்ப நேரம் பேசினேன்.

என் மனைவி

பிரசவ நாளை கணிச்சு சென்னைக்கு வரத் திட்டமிட்டிருந்தேன். முன்னாடியே குழந்தை பிறக்க, மறுநாள் வந்து என் மகன் 'ஆதித்யா'வைப் பார்த்தேன். அடுத்து இப்போ 'அஷிதா'ன்னு ஒரு பொண்ணு.

இப்போ அழகான, முழுமையான குடும்பமாகியிருக் கோம். நான் பொறுப்பான குடும்பஸ்தனாகிஇருக்கேன். என் தொழிலைப் பத்தி இப்போ முழுசா தெரிஞ்சுட்டிருக்காங்க என் மனைவி. என் குடும்பத்தோட நான் இருக்கற நேரங்கள்ல, நல்ல புருஷனா, நல்ல தகப்பனா மட்டும்தான் இருப்பேன். டைரக்டர்னு எந்த அடையாளத்தையும் சுமந்துட்டு இருக்கமாட்டேன்.

பரஸ்பர மரியாதை, ஒரு நேரம் கோபம்னாலும் மறு நேரம் சரண்டர், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கறதுனு நானும் என் மனைவியும் அழகா நடத்திட்டு இருக்கோம் வாழ்க்கையை.

என்னைப் பொறுத்தவரை குடும்பத்துல எந்த விஷயத்தையும் ஒருத்தர் 'பாயின்ட் ஆஃப் வியூ’ல பார்க்கக் கூடாது. இன்னொருத்தர் கேரக்டர் எப்படி, அவங்க வளர்ந்த விதம் எல்லாத்தையும் பார்த்து அனுசரிக்கணும். அவங்கள மதிச்சாலே போதும்... அவங்க, நம்மள கொண்டாடுவாங்க. ஆம்பளைங்க பொதுவா பிரியத்தை உள்ளே போட்டு பூட்டி வெச்சுக்குவாங்க. தயவு பண்ணி அது வேண்டாம். பிரியம்ங்கறது உணர வேண்டியது மட்டுமல்ல... வெளிக்காட்டப்பட வேண்டியதும்கூட.

திருமண பந்தத்தைப் பொறுத்தவரை முழுமையான சமர்ப்பணம்; முழுமையான தன்னிறைவு... இது இருபாலருக்கும் பொது. நானும் ரம்யாவும் நம்பற மந்திரம் இதுதான்!''

சந்திப்பு: நா.கதிர்வேலன்  ஏ.ஆர்.முருகதாஸ்