Published:Updated:

முள் பாதை போட்ட 'மிஸ்டு கால்'!

கூடவே ஒரு குற்றவாளி!ஆபத்துகளை அடையாளம் காட்டும் அலர்ட் தொடர்

 இர.வரதராஜன்

முள் பாதை போட்ட 'மிஸ்டு கால்'!

இன்றைய உலகில் மனிதனின் இரண்டாவது இதயம், செல்போன்! இதுவன்றி இங்கு பலருக்கும் இயங்குவதில்லை பொழுது! ஆனால், சைபர் குற்றவாளிகளும், நவீன ரோமியோக்களும் அந்த செல்போனை பயன்படுத்தி, இளம் பெண்களையும், குடும்பப் பெண்களையும் தங்கள் வஞ்சக வலையில் வீழ்த்திக் கொண்டிருப்பதுதான் கொடுமை. இதற்காக அவர்கள் பயன்படுத்தும் ரிமோட்... 'மிஸ்டு கால்’!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'மிஸ்டு கால்' காதல் வலையில் விழுந்து ஏமாந்த பெண்களின் எண்ணிக்கை இன்று ஏராளம். மணமுடிக்க இருந்த மகளைக் காணாமல் மனமொடிந்து போய் எங்களிடம் வந்த பெற்றோரின் பரிதவிப்புக்கும், அப்படி ஒரு 'மிஸ்டு கால்'தான் காரணம்!

அரசு அதிகாரி அவர். இன்ஜினீயரிங் படித்த ஒரே மகளுக்கு, வரன் பார்த்து நிச்சயித்தார். திருமணத்துக்கு ஒரு வாரம் முன்பு ஷாப்பிங் சென்ற மகள் வீடு திரும்பவில்லை. திருமணம் நின்று, அவமானத்தில் கூனிக்குறுகி போனார். மகளின் செல்போனோ... தொடர்ந்து ஸ்விட்ச் ஆஃப். போலீஸுக்குப் புகார் கொடுத்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டு மாதங்கள் உருண்டோடிய நிலையில்தான், எங்களிடம் வந்தார்.

##~##

முதல்கட்ட விசாரணையில் அவளுடைய இ-மெயில் ஐ.டி., அவளுக்கு நெருக்கமான ஒரு ஆணின் பெயர் ஆகியவற்றை அறிந்து கொண்டோம். காதலிக்கும் பெண்கள், குறிப்பிட்ட சில வார்த்தைகளையே இ-மெயிலுக்கு பாஸ்வோர்டாக வைப்பது, பொதுவான வழக்கமாக இருக்கிறது. அதையே சாதகமாக்கிக் கொண்டு, அந்தப் பெண்ணின் இ-மெயில் முகவரியைத் திறக்கும் முயற்சியில் இறங்கிய எங்களுக்கு வெற்றி கிடைத்தது! அவளுக்கு வந்த, அவள் அனுப்பிய மெயில்களை பார்வையிட்ட தன் மூலமாக, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தின் பொறியியல் கல்லூரியில் அவள் வேலை பார்ப்பது தெரிந்தது.

24 மணி நேரத்துக்குள் பெற்றோருடன் அங்கு சென்று, மடக்கிப் பிடித்தோம்! தாயைக் கட்டிக்கொண்டு, கண்ணீருடன் சொன்னாள் தான் காதல் வயப்பட்ட கதையை. நிச்சயம் முடிந்திருந்த நேரத்தில், தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட நம்பரிலிருந்து மிஸ்டு கால் வந்திருக்கிறது. ஒரு வாரம் பொறுத்தவள், அது யாரென்பதை அறிய அந்த நம்பருக்கு அழைத்திருக்கிறாள். எதிர்முனையில் அது ஏற்கப்படவில்லை. அதேசமயம், மீண்டும் மிஸ்டு கால் விளையாட்டு தொடர்ந்திருக்கிறது. இப்படியே ஒரு மாதம் அவளின் ஆர்வத்தைத் தூண்டி, பைத்தியமாக்கி, இறுதியில் ஒருநாள் போனில் அன்பொழுக பேசியிருக்கிறான். அப்பெண்ணும் தமிழ் சினிமா போல எந்த லாஜிக்கும் பார்க்காமல் வலையில் விழுந்து விட்டாள்!

''இப்ப அவர்கூடத்தான் இருக்கேன். இன்னும் கல்யாணம் முடியல. அவருக்கு சில கமிட்மென்ட்ஸ் இருக்காம். அதுவரைக்கும் இந்த காலேஜ்ல வேலை பார்த்திட்டிருக்கேன்...'' என்றாள்.

அவனைப் பற்றி எங்கள் நிறுவனத்துக்கு அங்கிருந்த தொடர்புகள் மூலம் விசாரித்தபோது, பல பெண்களை தன் வலையில் விழ வைக்கும் 'மிஸ்டு கால் ரோமியோ’ என்பது தெரிந்தது. இதைச் சொன்னதும்... அவனிடமிருந்து பிரிக்கும் முயற்சி என்று ஆத்திரப்பட்டாள்.

முள்ளை முள்ளால் எடுப்பது போல், ஓர் இளம் பெண்ணை, தினமும் தொடர்ந்து பத்து, பதினைந்து முறை அவனுக்கு மிஸ்டு கால் கொடுக்க வைத்து, அவனைப் பைத்தியமாக்கினோம். இறுதியில் ஒரு நாள் அவனுடைய போனை அந்த இளம் பெண் அட்டெண்ட் பண்ண, ''நான் பலரை பைத்தியமாக்கிஇருக்கிறேன்.  இப்போது உன்னிடம் நான் பைத்தியமாகிப் போனேன். எங்கு மீட் பண்ணலாம்..?'' என்றெல்லாம் அவன் பேசியதை பதிவு செய்ததுடன், அந்தப் பெண்ணை அவன் சந்தித்தபோது எடுத்த புகைப்படங்களையும் மிஸ்டு காலில் ஏமாந்த பெண்ணிடம் காட்டினோம். தான் தன் வாழ்க்கையை எவ்வளவு சிக்கலாக்கிக் கொண்டுள்ளோம் என்பதை உணர்ந்து, தன் பெற்றோருடன் ஊர் மீண்டாள் ஊர், உலகம் புரியாத அந்தப் பெண்!

இதோ... ஊர், உலகம் என்ன என்பதைத் தெள்ளத் தெளிவாக அறிந்தவர்தான் அந்த பெண் டாக்டர். ஆனால், செல்போன் மூலம் வந்தது அவருக்கும் ஆபத்து. தொடர் செக்ஸ் தொல்லை தந்த மனித மிருகங்கள், அதற்கு காரணகர்த்தாவாக திரை மறைவில் இருந்து செயல்பட்ட மர்ம மனிதரின் யூகித்துப் பார்க்க முடியாத குரூர முகம்..?

                             - திகில் பரவும்...

உஷார்!

பெண்கள் தங்களுக்கு வரும் மிஸ்டு கால்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முன்பின் தெரியாத எண்களிலிருந்து வரும் எந்த மிஸ்டு காலையும் பொருட்படுத்த வேண்டாம். சில ஆண்கள் பெண்களுக்கு போன் செய்து, ''உங்க நம்பர்ல இருந்து எனக்கு ஒரு 'மிஸ்டு கால்’ வந்ததே...'' என்பதாகச் சொல்லி பேச்சை ஆரம்பிப்பார்கள். அப்படிப்பட்ட அழைப்புகளிடம், ''இல்லையே... நீங்க எந்த ஊரு... நான் கோவை...'' என்று இழுக்காமல், ''நான் யாருக்கும் கால் பண்ணல. இன்னொரு முறை எனக்கு கால் பண்ண வேண்டாம்...'' என்று கண்டிப்புடன் இணைப்பை துண்டித்துவிடுங்கள்.

அறிமுகமில்லாத எண்களிலிருந்து எஸ்.எம்.எஸ்-ம், ஃபார்வேர்டு மெஸேஜும் வந்தால் அவர்களுக்கு பதிலளிக்கவோ, அவர்களுடன் பேசவோ முயற்சிக்க வேண்டாம். தொடர்ந்து, மிஸ்டு கால், எஸ்.எம்.எஸ். போன்றவை வர ஆரம்பித்தால், வீட்டிலுள்ள ஆண்களிடம் விஷயத்தைச் சொல்லி, அவர்களை அந்த எண்ணில் பேசி விசாரிக்க சொல்லலாம். அடுத்த கட்டமாக, காவல்துறையை அணுகலாம்!

ஓவியம் : அரஸ்