Published:Updated:

கோட்டையம்மா !

அருள் தரும் அம்மன் உலா

கோட்டையம்மா !

கோட்டையம்மா... திண்டுக்கல் மற்றும் சுற்று வட்டார மாவட்ட மக்களின் நம்பிக்கை நாயகி! ஆம்... அவர்களின் உடம்புக்கு ஏதாவது என்றால்... கோட்டை மாரியம்மன் கோயிலில் வழங்கப்படும் தீர்த்தம்தான் அருமருந்து!

இப்படியரு அற்புதத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கும் கோட்டையம்மா... நகரின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் மலையின் அடிவாரத்தில் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருளிக் கொண்டிருக்கிறாள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அவள், இங்கே வந்து சேர்ந்த கதையே சற்று வித்தியாசமானதுதான்!

இஸ்லாமிய மன்னர் திப்பு சுல்தான், 1788-ம் ஆண்டுவாக்கில் திண்டுக்கல் மலைமீதிருக்கும் கோட்டையிலிருந்தபடி இரண்டு ஆண்டு காலம் ஆட்சி செய்தார். அந்தக் காலகட்டத்தில் மலைக்குக் கீழேயுள்ள மைதானம்தான் அவருடைய படை வீரர்களின் பயிற்சிக் களம். அடிக்கடி நடந்த போர்களில் இழப்புகள் தொடர்ந்து கொண்டே இருந்தன.

##~##
'போருக்குப் புறப்படும் முன்பாக நாம் வழிபட்டுச் செல்ல ஒரு கோயில் இல்லை. அதுதான் இழப்புகளுக்குக் காரணம்' என்று நம்பிய வீரர்கள், அதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து படைவீரர் ஒருவரின் மீது வந்த அம்மன், ''நான் இங்கேயே... உங்களுடன்தான் இருக்கிறேன். என்னை ஒரு கல்லில்கூட உங்களால் காண முடியும்'' என்று சொல்லியிருக்கிறாள்.

அதன்படி நடப்பட்ட கல்லில் இருந்து கொண்டே அன்னையவள் நிகழ்த்திய அற்புதங்கள் நாளுக்கு நாள் பரவி, பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது. மலைக்கோட்டை, அதிலிருப்பவர்கள் மற்றும் அவர்களுடைய படை வீரர்கள் என்று அனைவரையும் காப்பாற்றியதால் 'கோட்டையம்மா' என்று அழைக்க ஆரம்பித்தனர்.

கோட்டையம்மா !

அன்று, வெறும் கல்லாக எழுந்தவள்... இன்று, 300 வருட பழமை மிக்க கற்சிற்பமாக வீற்றிருக்கிறாள். கீற்றுக் கூரையாக இருந்த கோயில், பரந்து விரிந்து மிகப் பெரிய மண்டபங்களோடு கூடிய கோயிலாக மாறியிருக்கிறது.

சென்னையில் இருந்து வந்திருந்த ஜானகி முத்து, ''நான் சென்னைப் பொண்ணு. என் கணவர், இந்த ஊர்க்காரர். புகுந்த வீட்டு சாமி இது. எங்க வீட்ல எந்த விசேஷமும் ஆத்தா சந்நிதியிலதான் நடக்கும். எங்க குழந்தைங்களுக்கு மொட்டையடிச்சு இவ சந்நிதியில வெச்சு காது குத்தியிருக்கோம். இனி, ஆயுசுக்கும் நோய் நொடி அண்டாம இவங்கள அவ காப்பாத்துவா'' என்று ஆத்தாளின் பெருமை பாடினார்.

பக்தர்கள் கொண்டு வரும் இளநீர், பால், நெய், தயிர் ஆகியவை அபிஷேகம் செய்யப்பட்ட பின்பு, ஒரு பாத்திரத்தில் சேகரிக்கப் படுகிறது. அந்தத் தீர்த்தம்தான், நோய் தீர்க்கும் அருமருந்தாக அனைவராலும் அதிசயிக்கப்படுகிறது. குறிப்பாக, அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு, அந்த தீர்த்தம் குணமளிக்கிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த ஊரில் இருக்கும் இஸ்லாமியர்களில் பலரும்கூட, அம்மை நோய் தீர்க்க இந்தத் தீர்த்தத்தை வாங்கிச் செல்கின்றனர்.

திருமணம் ஆகவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறவர்கள் சில மாதங்களில் கழுத்தில் தாலியுடன் வந்து அம்மனுக்கு ஒரு புடவையைச் சார்த்தி நன்றி சொல்கிறார்கள். மாங்கல்ய பலத்தைக் காத்தவளுக்கு, மாங்கல்யத்தையே காணிக்கையாகக் கொடுக்கிறார்கள் பெண்கள்.

கோட்டையம்மா !

ஆத்தாளின் முகம் பார்த்துவிட்டு தெளிவோடு திரும்பினார் தேனியைச் சேர்ந்த ராஜேஸ்வரி. ''என் தம்பி சிங்கப்பூர்லயும், தங்கச்சி பஹரைன்லயும் இருக்காங்கனா... இவ கொடுத்த வரம்தான் அது. தங்கச்சிக்கு குழந்தை இல்லைனு அம்மன்கிட்ட வந்து மனமுருக வேண்டிக்கிட்டு, ஒரு எலுமிச்சம் பழம் வாங்கிட்டுப் போனா... அவளுக்கு குழந்தை பாக்கியம் அருளின ஆத்தாளோட கருணையை என்னனு சொல்ல?!'' என்றார் ராஜேஸ்வரி நெகிழ்ந்து.

கோட்டையம்மா !

காலையில் எந்த அலங்காரமுமின்றி இருக்கும் அன்னை, மதியம் சர்வ அலங்கார தேவதையாகக் காட்சி தருகிறாள். அதிலும் செவ்வாய்க்கிழமை வெள்ளி கவசத்திலும், வெள்ளிக்கிழமை தங்க கவசத்திலும் காளியின் உருவம்போல் எட்டுக் கைகளுடன் காட்சி தரும் அன்னையின் அழகைக் காண... கண்கோடி வேண்டும்.

மார்ச் 9,10,11 தேதிகளிலும், அக்டோபர் மாதம் 2,3,4 தேதிகளிலும் காலை 6.20 மணிக்கு சூரியக்கதிர்கள் அம்மன் முகத்தில் படும் அற்புத நிகழ்வும் இங்கு நடக்கிறது! மாசி மாதம் முப்பது நாளும் அன்னையின் வாசலில் ஆயிரமாயிரமாக பக்தர்கள் அணி திரளுகின்றனர். அது அவளின் உற்சவ காலம்!

கோயிலின் தலைமை பூசாரி நாகராஜன், ''இவ காலடியில வெச்சு எடுத்த எலுமிச்சம் பழமும், அவளுக்கு அபிஷேகம் செஞ்ச தீர்த்தமும்தான் பிரசாதம். அது பில்லி சூனியத்தை விரட்டும், தீராத நோயைத் தீர்க்கும், குடும்பச் சிக்கலை சுமுகமாக்கும், தொழிலை வளர்க்கும், வேலையை வாங்கிக் கொடுக்கும், இன்னும் கேட்டதெல்லாம் தரும். அதனாலதான் அவளை நாடி ஆயிரக்கணக்கானோர் வந்துட்டே இருக்காங்க!'' என்றார் பரவசத்தோடு.

- சக்தி வருவாள்...

கரு.முத்து
படங்கள்: வீ.சிவக்குமார்