Published:Updated:

குழந்தைகள் பாதுகாப்புக்கு நாம் என்ன செய்ய வேண்டும்

குழந்தைகள் பாதுகாப்புக்கு நாம் என்ன செய்ய வேண்டும்
News
குழந்தைகள் பாதுகாப்புக்கு நாம் என்ன செய்ய வேண்டும்

குழந்தைகள் பாதுகாப்புக்கு நாம் என்ன செய்ய வேண்டும்


பெண்ணாகப் பிறப்பது அப்படியொரு குற்றமா என பெண் இனத்தையே நடுங்கவைக்கிறது தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்புணர்வு கொலைகள். வயது வித்தியாசம் இல்லாமல் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ளன வக்கிர எண்ணங்கள். பிரச்னைகள் வெளிச்சத்துக்கு வரும்போதுதான் பதைபதைக்கிறோம். செய்த தவறை மறைப்பதற்காக குழந்தைகள் எரித்துக் கொல்லப்படுகின்றனர். இத்தகைய அபாயமான சூழலில், பெண் குழந்தை வளர்ப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியுள்ளது. குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதில் பெற்றோர் பங்கு முதன்மையாக இருக்கிறது. சமூகம், அரசு, பள்ளி என ஒருங்கிணைந்து குழந்தைகள் பாதுகாப்பில் செயல்பட வேண்டிய தேவை உள்ளது. பள்ளி, மாலை வகுப்பு, விளையாட்டு, உறவினர் வீடு என்று உங்கள் குழந்தை எங்குச் சென்றாலும் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது அவசியம். அதோடு குழந்தைகளுக்கும் அவர்களின் வயதுக்கு ஏற்ப சில விஷயங்களை கற்றுத்தர வேண்டியுள்ளது.

* உங்களிடம் கேட்காமல் குழந்தைகள் யாருடனும் தனியே வெளியில் செல்லக் கூடாது.

* உங்கள் குழந்தைகளுக்கான பாதுகாப்பற்ற சூழல் குறித்து பேசிவிடுங்கள். அந்த மாதிரியான சூழலில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க, அல்லது தப்பிக்க என்ன செய்யலாம் என்று குழந்தையிடம் கேட்கலாம். நீங்களும் சில வழிகளை ஆலோசனையாக சொல்லலாம். தினம் நடக்கும் ஒரு சில சம்பவங்களை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

* யார் நல்லவர், யார் கெட்டவர் என்று கண்டறிவதில் குழந்தைகள் சிரமப்படுவார்கள். பாலியல் வன்கொடுமைக்கு குழந்தைகளை உள்ளாக்குபவர்கள் முதலில் மிகுந்த அன்புடன் பழகுவதோடு, அதிகபட்சமாக பரிசுகள் வாங்கித் தருவதையும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். பிரச்னைக்குறிய நபர்களை உங்கள் குழந்தைகளுக்கு புரியும் வகையில் அறிமுகம் செய்யலாம். அவர்களது தொடர்பு வட்டத்தில் இதுபோல யாராவது நடந்துகொள்கின்றனரா என்பதையும் விசாரிக்கவும்.
 
* பாதுகாப்பற்ற நபர்களின் அணுகுமுறை குறித்தும் குழந்தைகளுக்கு புரியவைக்க வேண்டும். அவர்களது உடலை தேவையின்றி தொட முயற்சிப்பவர்கள், உடலைப் பற்றியும், உடல் உறுப்புகளைப் பற்றியும் பேசுவது, தொடுவது மற்றும் அது தொடர்பான படங்களைக் காட்டுபவர்களிடம் இருந்தும் விலகியிருக்க வேண்டும். அவர்களிடம் 'நோ' சொல்வதுடன் அதுகுறித்து நம்மிடம் தெரிவிக்க வேண்டும் என்பதையும் அறிவுறுத்தலாம். 

* தெரிந்த மற்றும் தெரியாத நபர்கள் எந்தெந்த வழிகளில் குழந்தைகளை தன்வசப்படுத்துகின்றனர் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். தனியாக இருக்கும்போது நொறுக்குத்தீனி கொடுப்பது, கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போன்ற செயல்களில் யாராவது ஈடுபட்டால், சத்தமிட்டு அந்த இடத்தைவிட்டு வெளியேற வேண்டும். இதுபோன்ற ஆட்களை நம்பி செல்லக் கூடாது. இதுபோன்ற சம்பவங்களை உடனடியாக உங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் எனச் சொல்லுங்கள்.

* உங்கள் குழந்தையின் உடல் குழந்தைக்கே சொந்தமானது. அதைத் தொட யாருக்கும் உரிமையில்லை என்பதைப் புரியவைக்கலாம். உடைகளுக்குள் மறைக்கப்படும் இடங்களைத் தொட கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது. குழந்தைகளை குளிக்க வைக்கும்போது, யார் எந்த இடத்தை தொடக்கூடாது என்பதை குழந்தைகளுக்குப் புரியும் வகையில் எடுத்துக் கூறலாம். 

* ஒருவேளை பாதுகாப்பற்ற சூழலில் மாட்டிக்கொண்டால், என்ன செய்ய வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுங்கள். முதலில், சத்தமாக நோ சொல்ல வேண்டும். அந்த இடத்தைவிட்டு ஓட வேண்டும். வெளியில் வந்த உடன் நம்பிக்கையான நபர்களிடம் உதவி கேட்கலாம். குறிப்பாக, குழந்தைகளை வைத்திருக்கும் பெண்ணிடம் அடைக்கலம் தேடலாம். 

* இன்றைய குழந்தைகளின் மாலை நேரத் தேடல் கூகுளில் நடக்கிறது. ஆன்லைன் குற்றங்களில் இருந்தும் உங்கள் குழந்தையைப் பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். செல்போன், ஆன்லைன் என பிஸியாக இருக்கும் சூழலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கற்றுக்கொடுக்கலாம்.

* தன்னை பாதுகாத்துக்கொள்வது என்பது ஒரு நாளில் நடத்தக் கூடிய பாடம் மட்டும் அல்ல. குழந்தைகள் வாழ்க்கை முழுவதும் எந்தெந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை எப்போதும் பழக்கப்படுத்தலாம். 

 - யாழ் ஸ்ரீதேவி