Published:Updated:

வாலியிடம் சிக்கிய கிளி !

வாலியிடம் சிக்கிய கிளி !

என் டைரி - 241  

நிறைய படித்து, நல்ல வேலையில் சேர்ந்து... என்றெல்லாம் கனவு கொண்டிருந்தவள் நான். ஆனால், மேல்நிலைப் பள்ளியைத் தாண்டிய கையோடு, 'நல்ல வரன்' எனச் சொல்லி திருமணத்தை முடித்துவிட்டனர்.

வாலியிடம் சிக்கிய கிளி !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''மேற்கொண்டு படிக்கறதுனா படி...' என்று கைக்குள் வைத்து தாங்கும் கணவர், என் முகம் லேசாக வாடினாலும்கூட ''உடம்புக்கு முடியலையாம்மா..?'' என்று விசாரிக்கும் மாமனார், ''கஷாயம் வெச்சு தரட்டுமா..?'' என்று தலைகோதும் மாமியார் என அன்பின் வனமாகவே புகுந்த வீடு இருந்ததால், படிக்கவில்லையே என்ற கவலைகள் எல்லாம் பறந்தோடிவிட்டன! ஆனால், நாட்கள் செல்ல செல்லத்தான்... எனக்கு வில்லனும் அந்த வீட்டுக்குள்ளேயேதான் என்பது புரிந்தது. அது... என் கணவரின் தம்பி. கிட்டத்தட்ட 'வாலி' படத்து அஜீத்!

நான்கு வயது மூத்தவனான அவன், ''நீங்க என்னைவிட இளையவங்க தெரியுமா..?'' என்று திருமணமான புதிதில் கேலி பேசியதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், இந்த ஒன்றரை வருடத்தில் அவனின் எண்ணம் ஆரோக்கியமாக இல்லை.

மற்றவர் முன்னிலையில் 'அண்ணி’ என்று அழைப்பவன், தனியாக இருக்கும் தருணங்களில், 'நீங்க... வாங்க...’ என்றே அழைக்கிறான். ''இந்த சுடிதார் ஸ்டிச்சிங் நச்சுனு இருக்கு...'' என்றெல்லாம் அவ்வப்போது அவனிடமிருந்து வரும் பர்சனல் கமென்ட்ஸ்... அதிர வைக்கிறது. கூடவே... 'குறுகுறு’வெனக் குடையும் பார்வை வேறு. சாப்பாடு பரிமாறும்போதெல்லாம் ''போதும்...'' என்று வேண்டுமென்றே என் கைகளைப் அழுந்தப் பிடிக்கும் அவனின் செயல், அருவருப்பு கொள்ளச் செய்கிறது. குடும்ப அமைதி கெட்டுவிடக் கூடாது என்று எல்லாவற்றையும் வேதனையுடன் விழுங்கிக் கொண்டுஇருக்கிறேன்.

சமீபத்தில் ஒரு நாள்... வீட்டில் யாருமில்லாத சூழலில் என் அறையில் இருந்தேன். மனதுக்குள் ஏதோ உந்த, சட்டெனத் திரும்பிப் பார்த்தால்... சலனமில்லாமல் நின்று கொண்டுஇருந்தான். திடுக்கிட்ட என்னிடம், ''டீ போட்டுக் கொடுங்க...'' என்றான் பதறாமல். ''முதல்ல வெளிய போ... இனிமே என் அறைக்குள்ள அனுமதிஇல்லாம வராதே...'' என்று கத்தித் தீர்த்தேன். இதை, என் கணவரிடமோ, பெற்றோரிடமோ அவன் சொல்லி இருந்தால், 'நாமதான் தப்பா நெனச்சிட்டமோ’ என மனசு உறுத்தியிருக் கும். ஆனால், எப்போதும்போல கள்ளச் சிரிப்புடன் திரிகிறான் அவன்.

குடும்ப நிம்மதிக்காக, சொந்த நிம்மதியை இழந்து கொண்டிருக்கும் எனக்கு விடுதலை எப்படி தோழிகளே?

- ஊர், பெயர் வெளியிட விரும்பாத வாசகி

மனம் தெளிந்து, மனதைத் திறி !'

சிநேகிதிக்கு...சிநேகிதிக்கு...   வாசகிகள் பக்கம்

என் டைரி 240-ன் சுருக்கம்...

''காதல் திருமணம் செய்துகொண்டு, இரண்டு குழந்தைகள் மற்றும் கணவரோடு வெளிநாட்டில் வசிக்கிறேன். 20 ஆண்டுகள் உருண்டுவிட்ட நிலையில், இந்தியா சென்று திரும்பிய கணவர், சதா சர்வகாலமும் போனில் பேசியபடியே இருக்கிறார். கேட்டால், 'பழைய நண்பர்களின் நட்பைப் புதுப்பித்திருக்கிறேன்’ என்கிறார். ஐந்தாறு பெண்களிடம் அடிக்கடி பேசுவதாகத் தெரிகிறது. அவர் என்னை விட்டு விலகுவது போலவும் தோன்றுகிறது. ஒருவேளை நான்தான் தேவையில்லாமல் பீதிக்குள்ளாகிறேனா என்றும் புரியவில்லை. இதிலிருந்து மீள வழி சொல்லுங்கள் தோழிகளே!''

ஐம்பதை நெருங்கி  இருக்கும் உன் கணவரின் தோழிகள், தங்கள் கடமைகளை முடித்து, லைஃப்பில் செட்டிலாகி ஹாயாக இருக்கின்ற நேரம் இது. 'பேச ஆள் இல்லையே’ என்று மனம் ஏங்கித் தவிக்கும். அப்படித்தான் உன் கணவர் அகப்பட்டிருக்கக்கூடும். அநாவசியமாக சந்தேகப்பட்டு, உன் நிம்மதியைக் கெடுத்துக் கொள்ளாதே.

அதேசமயம், ''நண்பர்களாக இருந்தாலும், நீண்ட நேரம் பேசினால், அவர்களுடைய அந்தரங்கம் மட்டுமில்லை, நம்முடைய அந்தரங்க விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும். இதெல்லாம் வேண்டாமே...'’ என்று நாசூக்காக எடுத்துச் சொல். நிச்சயம் புரிந்துகொள்வார்.

- கீதா பிரேமானந்த், சென்னை-68

ஒன்றாக ஓடித் திரிந்து, சாப்பிட்டு, படித்த ஜாலியான அந்த இளமைக்கால நட்பு வட்டத்தை திடீரென்று பார்க்கும்போது, இனம் புரியாத பாசம் எல்லோருக்கும் இருக்கவே செய்யும். அவருடைய பெண் நண்பர்களும் ஐம்பதைத் தொடுபவர்களாகத்தான் இருக்க வேண்டும். அவர்களுக்கும் குடும்பம் என்று இருக்கும். எனவே, உங்களுடைய வீணான பயத்தை முதலில் விட்டொழியுங்கள். அதோடு மனதை நல்ல விஷயங்களின் பக்கம் திருப்புங்கள். நடப்பதெல்லாம் நல்லவையாகவே நடக்கும்.

- எஸ்.செல்வி சீனிவாசன், எஸ்.வி நகரம்

உங்கள் கணவர், இளமைக்காலத் தோழிகளுக்கு உண்மையாக உதவுபவராககூட இருக்கலாம் அல்லவா? உங்களிடம் சொன்னால், அது புதிதாக ஏதாவது பிரச்னையை உண்டு பண்ணிவிடக்கூடும் என்று பயந்து, 'காலம் பார்த்து பகிர்ந்து கொள்ளலாம்' என்று நினைத்திருக்கலாம். குழம்பிய மனதில் என்றும் நல்ல எண்ணங்களும், நல்ல சிந்தனைகளும் தோன்றாது என்பார்கள். எனவே, மனம் தெளிந்த பின் அவருடன் மனம் திறந்து வெளிப்படையாகப் பேசி, பிரச்னைக்கு தீர்வைத் தேடுங்கள். மனதில் போட்டுக் குழப்பிக் கொண்டே, விஷயத்தைப் பூதாகாரப்படுத்திவிடாதீர்கள்.

- பானு பெரியதம்பி, சேலம்