Published:Updated:

வைரல் வீடியோ தந்த வாய்ப்பு...ஜி.வி பிரகாஷ் இசையில் பாடும் மாற்றுத்திறனாளி ஜோதி!

வைரல் வீடியோ தந்த  வாய்ப்பு...ஜி.வி பிரகாஷ் இசையில் பாடும் மாற்றுத்திறனாளி ஜோதி!
வைரல் வீடியோ தந்த வாய்ப்பு...ஜி.வி பிரகாஷ் இசையில் பாடும் மாற்றுத்திறனாளி ஜோதி!

வைரல் வீடியோ தந்த வாய்ப்பு...ஜி.வி பிரகாஷ் இசையில் பாடும் மாற்றுத்திறனாளி ஜோதி!

ஒவ்வொருக்குமே தன் கனவு கைகூட பல்வேறான சிரமங்களை கடக்க வேண்டி இருக்கும். தடைகளை உடைத்து சோதனைகளைக் கடந்து வெற்றி இலக்கை அடைவது என்பது அத்தனை சுலபமானது அல்ல. அதிலும் ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் சவால்களை சந்திப்பதே சிரமமாக இருக்கும் போது, பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிப் பெண்ணான ஜோதியின் பயணம் வியக்க வைக்கிறது.


தந்தையின் துணையில்லாமல்  தாயின் அரவணைப்பில் வளர்ந்த ஜோதி சென்னையை சேர்ந்தவர். குறையென்பதெல்லாம் உடலுக்கு மட்டும் தான். மனசுக்கு அல்ல...என்பதை ஜோதி பாடும் போது புரிந்து கொள்ள முடிகிறது.

ஜோதியிடம் பேசினோம்.

’’ எனக்கு எல்லாமே அம்மாவும், தாத்தா பாட்டியும் தான். சின்ன வயசுல இருந்தே எனக்குப் படிக்கப் பிடிக்கல. அதனால ஸ்கூலுக்குப் போகலை. அப்புறம் 13 வயசுல அடையார் , இசைக்கல்லூரியில சேர்த்துவிட்டாங்க. அங்க தான் மியூசிக் படிச்சிட்டு இருக்கேன். இப்ப எனக்கு 16 வயசாகுது. ஒரு நாள் சர்ச்சுல பாடினேன். அதைப்பாத்துட்டு எல்லாரும் பாராட்டினாங்க. அதுக்கப்புறம் ஒரு நிகழ்சியில பாட சொன்னாங்க. அப்படி நான் பாடுனதை வீடியோ எடுத்து ஆன்லைன்ல போட்டிருந்தாங்க. அதுக்கப்புறம் தான்  இப்ப என்னை ஜி.வி. பிரகாஷ் சார் பாட கூப்பிட்டிருக்கார்’’ என்னும் ஜோதியின் பேச்சில் இன்னும் மழலை மாறவில்லை.

’கண்ணம்மா...கண்ணம்மா அழகு பூஞ்சிலை’  என ’றெக்க’ திரைப்படப் பாடலை உணர்ந்து உள்வாங்கிப் பாடும் இவரின் குரல் சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அப்படி ஷேர் செய்யப்பட்ட வீடியோவைப் பார்த்த ஜி.வி.பிரகாஷ்   ’அடங்காதே’ என்னும் திரைப்படத்தில் ஜோதிக்கு பாட வாய்ப்பளிக்கப் போவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்க, செம குஷியில் இருக்கிறார் ஜோதி.

‘’ஜோதி பிறந்த சமயம், பிரசவத்துல இருந்த சிக்கலால ஆக்சிஜன் குறைபாடு ஏற்பட்டு அவளுக்கு பார்வை குறைபாடு உண்டாகிடுச்சு. இப்ப அவளால வெளிச்சத்தை மட்டும்  ரொம்ப லேசா உணர முடியுமே தவிர எதையுமே பார்க்க முடியாது. அவளுக்கு 16 வயசு ஆனாலும் அதுக்கான மனநிலையில இப்ப இல்ல. ஆனா என்னால இப்பவும் நம்ப முடியலை. அவளுக்குப் பாடும் சக்தி மட்டும் அபூர்வமா இருக்கு. இந்த நேரத்துல ஜோதிக்கு வாய்ப்பு கொடுத்த ஜி.வி.பிரகாஷ் சார், கூட இருந்து உதவி செஞ்ச எல்லாருக்கும் நன்றி சொல்லிக்குறேன்’’ என்னும் ஜோதியின் தாய் கலைச்செல்வி,  பேசும் போதே அவரையும் அறியாமல் வந்துவிழுகின்றன கண்ணீர்த்துளிகள்.

 இசைக்கலூரியில் கடந்த 3 ஆண்டுகளாக  படித்து வரும் ஜோதிக்கு அவரின் ஆசிரியர்கள் அனைவரும் பக்க பலமாய் இருந்து வருகிறார்கள். காலையில் எழுந்து குறைந்தது 3 மணி நேரமாவது இசையைப் பற்றிய குறிப்புகள் எடுத்துக் கொள்வதுடன், தன் தாயின் உதவியுடன் தான் பாடும் பாடலை வாட்ஸ்அப் மூலம் அனுப்பி தனக்கு தெரிந்தவர்கள் பலரிடமும் கருத்து கேட்டு தன்னை மெருகேற்றிக் கொள்வதுடன், தன்னிடம் சந்தேகம் கேட்கும் பலருக்கும் அதை சொல்லிக் கொடுத்தும் வருகிறார் ஜோதி.
சின்னதான வண்ண துளி தான். அதில் தூரிகையைத் தோய்த்து ஓவியம் செய்வதில் தான் கலைஞனின் கைவண்ணம் இருக்கிறது. அந்த நயம் ஜோதிக்கு இயல்பாய் வாய்த்திருக்கிறது.

வாய்ப்பு என்கிற ஒன்று இல்லாமல் போனால் இங்கே யாரும் வெளிச்சத்துக்கு வந்துவிட முடியாது. ஜோதிக்கு வாய்ப்பளித்து அவர் வாழ்வில் ஜோதி ஏற்றும் இசையமைபாளர் ஜி.வி.பிரகாஷுக்கு நம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

அவர் பாடிய 'கண்ணம்மா... கண்ணம்மா...' பாடல் தான் தற்போதைய வைரல்

.

- பொன்.விமலா

அடுத்த கட்டுரைக்கு