Published:Updated:

“நாட்டுப்புறக் கலைல இருக்கிற பொண்ணுகளுக்கு சாப்பாட்டுக்கே வழியில்ல!” - கலங்கும் சின்னப்பொண்ணு

“நாட்டுப்புறக் கலைல இருக்கிற பொண்ணுகளுக்கு சாப்பாட்டுக்கே வழியில்ல!” - கலங்கும் சின்னப்பொண்ணு
“நாட்டுப்புறக் கலைல இருக்கிற பொண்ணுகளுக்கு சாப்பாட்டுக்கே வழியில்ல!” - கலங்கும் சின்னப்பொண்ணு

'நாட்டுப்புறம்'  என்ற வார்த்தையே ஒரு காலத்தில் தகுதிக் குறைவாகப் பார்க்கப்பட்டது. வெஸ்டர்ன், ஹைபிரேட் வகையறாக்களைப் பின்தொடர்ந்த கூட்டம், இன்று நாட்டு மாடுகளைக் காக்க வேண்டும் என்று போராட்டக் களம் கண்டுள்ளன. ஜல்லிக்கட்டை மீட்டதோடு, பாரம்பரியத்தை நோக்கி நகர்த்தி இருக்கிறது. நாட்டுக் காய்கறி, நாட்டுக் கோழி, நாட்டு மாடு என மண் சார்ந்த, தமிழ் மரபு சார்ந்த வாழ்க்கைக்குப் பலரும் மாறிக்கொண்டிருக்கிறார்கள். நம் மரபான வாழ்வின் சாரங்களை, அடுத்தடுத்த தலைமுறைக்கும் கொண்டுசெல்பவை நாட்டுப்புறக் கலை வடிவங்கள். விவசாய நிலத்தில் அடையாளமற்று உழைப்பது போலவே, நாட்டுப்புறக் கலையில் உள்ள பெண்களின் நிலையும் மோசமாக உள்ளது. நாட்டுப்புறக் கலையை நம்பியிருந்த பல பெண்கள், இன்று சாப்பாட்டுக்கே வழியில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கலங்குகிறார், பின்னணிப் பாடகி சின்னப்பொண்ணு. இவரும் நாட்டுப்புறப் பாடல் சினிமாவுக்குப் பரிசளித்த இசைப் பறவையே. 

நாட்டுப்புறக் கலைஞர்களுக்காக தமிழக அளவில் இயங்கும் தமிழ்நாடு நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் பெருமன்றத்தின் தலைவராக, பாடகி சின்னப்பொண்ணு நியமிக்கப்பட்டுள்ளார். தனது எனர்ஜெட்டிக் குரலால் தமிழ் மனங்களைக் கட்டியிழுத்த இந்தப் பாடகி, விருதுகளையும் குவித்துள்ளார். அதிரடி இசைப்பாடல், நாட்டுப்புறப் பாடல் என, மயக்கும் குரலால் கிறங்கடித்த சின்னப்பொண்ணு, நாட்டுப்புறக் கலைஞர்களுக்காகக் களம் இறங்கியுள்ளார். இதுகுறித்து சின்னப்பொண்ணு நம்மோடு பேசினார்.

‘‘நாட்டுப்புற இசைதான் என்னோட மூச்சு. அதுதான் என்னோட அடையாளமும். தனி மனுஷியா என்னால முடிஞ்ச வரைக்கும் அந்தக் கலைக்கு உண்மையா இருந்திருக்கேன். சினிமாவிலும் நாட்டுப்புறப் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கு. அப்படியான பாடல்கள் ஹிட் அடிக்குது. புதுசா சில பெண்கள் நாட்டுப்புற வாசனையோடு பாடவும் வர்றாங்க. விருதுகள், பாடல்கள்னு ஏதோ செய்திருக்கிறதா மனசுக்குள் நினைச்சுட்டு இருக்கேன். நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் சேர்ந்து, தமிழ்நாடு நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் பெருமன்றத்தோட தலைவரா என்னைத் தேர்ந்தெடுத்திருக்காங்க. கடைசி வரைக்கும் ஒரு தொண்டனா இருந்துட்டுப் போறேனேனு சொல்லிப்பார்த்தேன். ஆனா, தலைவர் பொறுப்பு வந்திருக்கு. 

மாவட்டம், மாவட்டமா போய் நாட்டுப்புறக் கலைஞர்களைச் சந்திச்சு, உதிரியா சிதறிக்கிடக்கிறவங்களை ஒருங்கிணைச்சுட்டு வர்றேன். ஆயிரக்கணக்கில் உறுப்பினர்கள் சேர்ந்திருக்காங்க. நாட்டுப்புறப் பாடல், நடனம், இசைக் கலைஞர்னு பலரும் வெவ்வேறு அடையாளங்களோடு தனிச்சு இருக்காங்க. இதில், பெண் கலைஞர்களோட நெலமை ரொம்ப மோசமா இருக்கு. நடிப்பு, பாடல், ஆடல்னு எந்தத் துறையில் இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கிற வரைக்கும்தான் வருமானம்.

குடும்பம், குழந்தைனு ஆனதும் பலரும் கலையைவிட்டு விலகிப் போயிடுறாங்க. குறிப்பிட்ட வயசுக்கு மேல எந்த வேலையும் செய்ய முடியாத நாட்டுப்புறப் பெண் கலைஞர்கள் பலர், சாப்பாட்டுக்கே வழியில்லாம இருக்கிறதைப் பார்த்து கலங்கிப்போனேன். நான் வாங்கிய பதக்கங்களும் பாராட்டுகளும் அர்த்தம் இழந்துபோனதாக நினைக்கிறேன். இவங்க பசியைத் தீர்க்க முடிஞ்சா அதுவே மிகப்பெரிய சாதனையாக இருக்க முடியும். ஒரு பெண்ணாக இதைப் பெரும் பொறுப்பாகவே நினைக்கிறேன். நம்ம மண் சார்ந்த பாரம்பரியம், நமது கலைகளில்தான் இருக்கு. அந்தக் கலை வடிவங்களை அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டுபோகும் பொறுப்பை இவங்க சுமந்துட்டு இருக்காங்க. இவங்களைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்தால், நாட்டுப்புறக் கலைகளும் அழிஞ்சுடும். 

முதல் கட்டமாக, நலிந்த கலைஞர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அடிப்படை வசதிகளைச் செய்துதரவும் திட்டமிட்டு இருக்கிறோம். நாட்டுப்புறக் கலையை நம்பிய ஒருவர்கூட பசியோடு தூங்கக் கூடாதுங்கிற எண்ணம், என்னைத் தூங்கவிடாமல் விரட்டுது. நாட்டுப்புறக் கலையை நம்பி வரும் பெண்கள் அடையாளப்படுத்தப்படணும், திறமைக்கான மரியாதை கிடைக்கிறதோட, அவங்க வாழ்நாள் முழுக்க பசி இல்லாமல் இருக்கணும். அதுதான் என் ஆசை’’ என்று மனம் வெதும்புகிறார் சின்னப்பொண்ணு.

- யாழ் ஶ்ரீதேவி