Published:Updated:

பிணி தீர்க்கும் பனிமய மாதா !

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் !

பிணி தீர்க்கும் பனிமய மாதா !

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் !

Published:Updated:
பிணி தீர்க்கும் பனிமய மாதா !

''பனிமய அன்னையின் புதுமை வரம்மிக்க சுரூபத்தின் பாதம் கழுவிய தண்ணீரை, ஆழ்ந்த நம்பிக்கையோடு மக்கள் குடிக்கிறார்கள். அன்னைக்கு எதிரே தொங்க விடப்பட்டுள்ள விளக்கிலிருந்து எண்ணெயை எடுத்துச் சென்று உடலில் பூசுகிறார்கள். பிணியுற்றோர் பக்தியோடு ஜெபமாலையை தலையில் வைத்து மன்றாடிக் குணம் பெறுகிறார்கள். குழந்தை வரம் எதிர்பார்க்கும் பெண்கள் கருத்தரிக்கின்றனர். பிரசவச் சிக்கலில் இருப்போர், சுகப்பிரசவம் அடைகிறார்கள். பனிமய அன்னையின் மீது வைத்துள்ள பக்தியினால் மக்கள் இப்படி பற்பல அற்புதங்களை, அனுபவங்களைப் பெற்று வருகிறார்கள்!'

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- தூத்துக்குடி நகரில் ஆட்சி செய்யும் தூய பனிமய மாதா பற்றி, கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு முன்பு சுவாமி பிரான்ஸிஸ் வைஸ் எனும் ஆங்கிலேயர் குறிப்பிட்டிருக்கும் செய்தி இது. இன்று, அன்னையிடம் சரணடைந்து கொண்டிருக்கும் லட்சோப லட்சம் பக்தர்களின் அனுபவ மொழியும் இதுவே!

இந்து, முஸ்லிம் என பிற மதங்களைச் சேர்ந்தவர்களில் பலரும்கூட, தங்களின் பாதுகாவல் தெய்வமாக பாதம் பணியும் அன்னையின் ஆதிமூலம், அத்தனை பரவசமானது! அது ஒரு வரலாறும்கூட!

1535-ம் ஆண்டில் தூத்துக்குடி மீனவர்களுக்கும், இன்னுமொரு பிரிவினருக்கும் இடையே இனச் சண்டை வெடித்தது. வரிவசூல் துறை அதிகாரியான ஜான் டி ரோஸ் என்ற ஆங்கிலேயரிடம் மீனவர்கள் முறையிட, அவர்களைக் காப்பாற்றியிருக்கிறார் ரோஸ். அந்த நன்றிக் கடனுக்காக 22 கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் ஒட்டுமொத்தமாக கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்தனர்! இவர்களுக்காக 1538-ம் ஆண்டில், கொச்சி, பங்கு குருவான பேதுரு கொன்சால்வஸ் என்பவர் தூத்துக்குடி கடற்கரையில் ஓர் ஆலயத்தை அமைத்தார். அதுதான் இந்த பனிமய மாதா ஆலயம்! கூரைக் கட்டடமாக இருந்த அந்த ஆலயம், 1713-ம் ஆண்டில் சுவாமி விஜிலியுஸ் மான்சி என்பவரால் புதிதாக மாற்றிக் கட்டப்பட்டது. அதுதான் தற்போது கடற்கரையோரம் கடலைப் பார்த்தவாறு மிகப் பிரமாண்டமாக எழுந்து நிற்கும் பேராலயம்! இதன் 425 ஆண்டு விழாவை முன்னிட்டு, கடந்த 2007-ம் ஆண்டு மத்திய அரசு சிறப்பு தபால் தலை வெளியிட்டு பெருமைப்படுத்தியது!

பிணி தீர்க்கும் பனிமய மாதா !

கடலை நோக்கியவாறு ஆறடி உயரத்தில், இடது கையில் குழந்தை யேசுவையும்... வலது கையில் மாதுளம்பழத்தையும் ஏந்தியபடி நிற்கிறாள் பனிமய மாதா. கழுத்தில் முத்து மாலை, தலையில் தங்கக் கிரீடம் என்று தாங்கி நிற்கும் அவள் அழகையும், பேராலயத்தின் எழிலையும் காண்பவர்கள்... தங்களை மறக்கிறார்கள்.

''அன்னையின் கருணையினால் குணம் பெற்றவர்கள், பலன் பெற்றவர்கள் தொடர்ந்து ஆலயத்துக்கு வந்து சாட்சியம் அளித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று, நேற்றல்ல, அன்னை இங்கு வந்தருளிய நாள் முதல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது'' என்று நெகிழ்ந்து போய் சொன்ன பேராலய அதிபர் வில்லியம் சந்தானம், உதாரணமாக ஒரு சம்பவத்தை விவரித்தார். அது -

''ஆரம்பத்தில் சிறிய கூரை கொட்டகைதான் கோயில். விஜிலியுஸ் மான்சி அதில்தான் தங்கியிருந்தார். 1707-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாலாம் தேதியன்று கோயிலில் இடி விழுந்தது. ஊரையே உலுக்கிய இடிச் சத்தம் கேட்டு பதறி ஓடிவந்தனர் ஊர்மக்கள். ஆனால், அந்தப் பேரிடியை தான் வாங்கிக் கொண்டு, மான்சி மற்றும் அவருடைய இரண்டு உதவியாளர்களையும் சிறு காயம்கூட இல்லாமல் காப்பாற்றினாள் அன்னை. அதற்கு நன்றிக் கடனாகத்தான் பெருமுயற்சி எடுத்து பேராலயம் கட்டி முடித்தார் மான்சி. அதற்குப் பிறகுதான் அன்னையின் மகிமையை முழுமையாக உணர்ந்தார்கள் தென்பகுதி மக்கள்.''

'அது சரி, மரியாள்தானே அன்னையின் பெயர்... அதென்ன பனிமய மாதா?' என்ற கேள்வி எழுகிறதுதானே!

அதற்கும் பதில் தந்தார் வில்லியம் சந்தானம்... ''உலகிலேயே முதன்முதலில் ரோம் நகரில் உள்ள எஸ்கலின் என்ற குன்றின் மீதுதான் மரியன்னைக்கு ஆலயம் கட்டப்பட்டது. அன்னையே பிரசன்னமாகி ஆலயம் கட்டப்பட வேண்டிய இடத்தையும், அமைப்பையும் பனியாக பெய்வித்து அடையாளம் காட்டினாளாம். அதனால், அவளை 'பனிமய மாதா' என்று அழைக்கின்றனர். தூத்துக்குடியில் அன்னையின் ஆலயம் கட்டி திறப்பு விழா, திருவிழா நடத்தப்பட்டது... எஸ்கலின் குன்றில் உள்ள பனிமய மாதாவின் திருநாளான ஆகஸ்ட் ஐந்தாம் தேதிதான். அதன் பொருட்டே... இவளையும் பனிமய மாதா என்றே அழைக்கின்றனர்'' என்று சொன்னவர், அன்னையின் அருள் பற்றியும் பேசினார்.

''பனிமய மாதாவின் பாதம் ஜெபிக்கும் பெண்கள், தங்கள் கையில் இருப்பதை

பிணி தீர்க்கும் பனிமய மாதா !

காணிக்கையாகக் கொடுத்து, அன்னைக்கு அணிவிக்கப் பட்டிருக்கும் சேலையை வாங்கிச் செல்கிறார்கள். அதை உடுத்தினால்... திருமணத் தடை, குழந்தைப்பேறு சிக்கல், நோய்கள் என்று எல்லாமும் சரியாகிவிடும் என்பதுதான் காரணம். பிரார்த்தனை நிறைவேறி அன்னைக்கு புதிய சேலை கொண்டுவந்து அணிவித்து மனம் மகிழ்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதிலிருந்தே அந்த உண்மையை உணரலாம்'' என்றார் பெருமையோடு!

ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கத் தேரில் மாதா பவனி வரும் உற்சவம், வெகு பிரசித்தம். ஆண்டுதோறும் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி, இங்கே நடக்கும் பெருவிழாவை, தென் மாவட்டத்தில் நடக்கும் மிகப்பெரிய மத நல்லிணக்க விழா என்றே சொல்லலாம்! அனைத்து மதத்தைச் சேர்ந்த அன்னையின் பக்தர்கள் காணிக்கை களோடு வந்து வழிபடுகிறார்கள். இத்திருவிழா சமயத்தில், உலகெங்கும் பரவி வாழ்ந்து கொண்டிருக்கும் தென்மாவட்ட மக்கள் இங்கே திரள்வது சிறப்பு. அவர்கள் கொண்டு வரும் பால்குடங்கள் கொடி மரத்தினருகே வைக்கப்பட்டு, அனைவருக்கும் அந்தப் பால் பிரசாதமாகத் தரப்படுகிறது. அதை வீட்டுக்கு எடுத்துச் சென்று குடும்பத்தோடு அருந்தினால்... குடும்பம் செழிக்கும்... உடல் நலம் மேன்மையுறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!

கணவர் பியோ மற்றும் குழந்தை மேரிமிதுலாவுடன் அன்னையின் ஆலயத்தை வலம் வந்து கொண்டிருந்த ஜமிலாவின் அனுபவமே, அன்னையின் அருட்கொடைக்கு சமீபத்திய சாட்சி!

பிணி தீர்க்கும் பனிமய மாதா !

''திருமணம் ஆன கொஞ்ச நாள்லயே எங்க ரெண்டு பேருக்கும் இடையில ஏகப்பட்ட பிரச்னை. எல்லா விஷயத்துலயும் கருத்து வேறுபாடு வந்து ரெண்டு பேரும் மோதிக்குவோம். ஒரு கட்டத்துல தனித்தனியா பிரியவே செஞ்சுட்டோம். ஆனா, அது தேவைஇல்லாத பிரிவுனு தெரிஞ்சதால... மாதாவோட தீவிர பக்தையான நான், அவகிட்ட வந்து, எங்கள சேர்த்து வைக்கணும்னு வேண்டிக்கிட்டேன். அவரும் இதே மாதாவோட பக்தர்தான். என்னை மாதிரியே அவரும் வேண்டியிருக்கார். சீக்கிரத்துலயே மறுபடியும் சேர்ந்துட்டோம்.

அதுமட்டுமில்லாம, அவளோட கருணையால சீக்கிரமே கர்ப்பமும் ஆனேன். பிரசவத்தையும் சுகமாக்கினா. இப்போ ரெண்டாவது முறையாக கர்ப்பம். இந்தத் தடவையும் சுகப்பிரசவத்தை நடத்தி வைப்பா என் தாய்'' என்று நம்பிக்கையோடு சொன்னார் ஜமிலா.

ஒவ்வொரு நாளும் மாலை ஐந்து மணிக்கு பேராலயத்துக்கு வந்து இரவு எட்டு மணி வரை ஜெபிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார் 73 வயதான ஜெனோரா. ''நாங்க கோவாவில் குடியிருந்தோம். கப்பல்ல வேலை பார்த்த என் கணவர், ஒரு விபத்துல இறந்த பிறகு பிள்ளைகளை கூட்டிட்டு இங்கேயே வந்துட்டேன். அவர் போனதிலிருந்து எனக்குத் துணையா இருக்கறது இந்த அன்னைதான். இவளோட கொடையால என் குழந்தைகளுக்கு செய்ய வேண்டியதைஎல்லாம் நல்லபடியா செய்து முடிச்சுட்டேன். இப்போ... இவளே கதினு கிடக்கேன்'' என்றார் ஜெனோரா நெக்குருகி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism