Published:Updated:

"சிங்கிள் உமனாக இருப்பது வலிமை"-சொல்கிறார்கள் பிரபஞ்ச அழகியும், பிரபலங்களும்! #celebrate women

"சிங்கிள் உமனாக இருப்பது வலிமை"-சொல்கிறார்கள் பிரபஞ்ச அழகியும், பிரபலங்களும்! #celebrate women
"சிங்கிள் உமனாக இருப்பது வலிமை"-சொல்கிறார்கள் பிரபஞ்ச அழகியும், பிரபலங்களும்! #celebrate women

"சிங்கிள் உமனாக இருப்பது வலிமை"-சொல்கிறார்கள் பிரபஞ்ச அழகியும், பிரபலங்களும்! #celebrate women


திருமண வாழ்க்கையின் சகிப்புத்தன்மை வேலிக்குள் சிக்க விரும்பாமல், அதில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ளும் சுதந்திர சிறகு வளர்த்துக்கொள்கிறார்கள் சில பெண்கள். 'சிங்கிள் உமன்' என்ற ஸ்டேட்டஸ் உடன், தாங்கள் வாழ விரும்பும் வாழ்வை வாழ்கிறார்கள். இன்னொரு பக்கம், இணைந்த திருமண பந்தத்தின் அர்த்தம் பொய்க்கும்போது, அதிலிருந்து வெளிவரும் துணிச்சலை சில பெண்கள் பெறுகிறார்கள். 'சிங்கிள் பேரன்ட்' ஆக, தங்கள் குடும்ப வாழ்வின் நீட்சியான குழந்தைகளை வளர்க்கும் பெரும் பொறுப்பை நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறார்கள். அப்படியாக, நம் சமுதாயத்தில் ஒரு பெண் தனித்து வாழ்வது என்ற அசாத்தியத்தை, 'ஏன் முடியாது?' என்று நிகழ்த்திக்காட்டிக்கொண்டிருக்கும் நம் சமகாலத்து சாதனை மனுஷிகள் இவர்கள். தங்களை மட்டுமே நம்பி வாழும் அவர்களின் அனுபவங்கள், அவர்களின் வார்த்தைகளில்... 

பாலபாரதி, (முன்னாள் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர்), சிங்கிள் உமன்
''பொது வாழ்க்கைக்கு வர வேண்டும் என்று முடிவு செய்தபோது அதில் முழுமையாக ஈடுபட நினைத்தேன். குடும்பம் என்று வரும்போது அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ய சுயநலமாக செயல்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படலாம். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. பொது மனுஷி என்று முடிவு செய்த பின்னர் குடும்ப அமைப்புக்குள் அதற்கான சுதந்திரத்தை நாம் முழுமையாக எதிர்பார்க்க முடியாது. அதனால் நான் திருமணமே செய்து கொள்ளவில்லை. நான் நினைத்த வாழ்வை வாழ்ந்திருப்பதாக திருப்தி அடைகிறேன். எனது குடும்ப உறவுகளும், நான் சார்ந்திருக்கும் இயக்கத் தோழர்களும் எனது எண்ணத்தை ஏற்றுக் கொண்டனர். நேர்மையான என் அரசியல் வாழ்க்கைக்கு தனி மனுஷியாக இருப்பது ஒரு பலம்!''

கவுதமி, நடிகை, சிங்கிள் பேரன்ட்
''ஆரம்பத்தில் இருந்தே சிங்கிள் பேரன்டிங் லைஃப் ஸ்டைல்ல தான் இருக்கேன். வாழ்வின் நெருக்கடியான நேரங்களில் மகளுக்காகவே கடுமையான முடிவுகளை எடுத்திருக்கிறேன். எனக்கான விருப்பங்களுக்கு இந்த வாழ்க்கை முறையில் இடம் இருக்கு. அதேபோல் என் பெண்ணுக்காக நிறைய நேரம் செலவிட முடியுது. என் பெண் அவள் விருப்பப்படி வளர்றா. அந்த அனுபவமே எனக்கு ரொம்ப மகிழ்ச்சியைக் கொடுக்குது. என் வேலை, என் பயணம் எல்லாவற்றையும் திட்டமிடுவதில் எனக்கு எந்த இடையூறும் இல்லை. இயல்பான சுதந்திரம் இந்த வாழ்க்கையில் கிடைச்சிருக்கு. பிரச்னை யாருக்குத்தான் இல்லை? சவால்களைத் தாண்டிப் போறதும், அதற்காகத் தன்னை தயார் படுத்திக்கிறதும்தான் பெண்ணை வலிமைப்படுத்துது. தன் குழந்தைக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கிற அத்தனை பெண்களையும் நான் வணங்குகிறேன். சவால்களைப் பார்த்து எந்தப் பெண்ணும் மனம் சோர்வடைய வேண்டாம். அதை எதிர்கொண்டு வெல்வதற்காக வலிமைப்படுத்திக் கொள்ளுங்கள். எல்லா நாளுமே பெண்களுக்கான தினமே!" 

அருள்மொழி, வழக்கறிஞர், சிங்கிள் பேரன்ட், 
‘'பெண்களுக்குத் திருமண வாழ்வே வேண்டாம் என்று சொல்லவில்லை. சில நேரங்களில் பெண் அதை விட்டு வெளியில் வர வேண்டிய சூழல் ஏற்படும்போது திடமாக முடிவெடுக்க வேண்டும். உடன்பாடு இல்லாத ஒரு குடும்பத்தில் வாழ்வது பாம்புகள் உள்ள குடிசைக்குள் வாழ்வதுபோல அபாயகரமானது என்று வள்ளுவரே கூறியுள்ளார். கணவன், மனைவிக்குள் உள்ள முரண்பாடு குழந்தைகளையும் பாதிக்கிறது. இக்கட்டான சூழலில் பெண்கள் குடும்ப அமைப்பை விட்டு வெளியில் வருவதே சரியானது. 

நாம் தனியாக இருக்கிறோம் என்ற எண்ணமே பெண்ணைக் கொன்று விடும். எனவே, அந்தத் தனிமையை தன்னம்பிக்கை உள்ளதாக மாற்றிக்கொள்வது அவசியம். 'சிங்கிள் பேரன்ட்' ஆக இருக்கும்போது அதற்கான பொறுப்புகளும், சுமையும் கூடும். அந்த வாழ்வில் பெண்ணுக்குக் கிடைக்கும் சுதந்திரம் அந்தச் சுமையை இல்லாமல் செய்துவிடும். தனித்து வாழும் பெற்றோராக இருக்கும்போது, தான் சார்ந்த உறவுகளைப் பெண்கள் அனுசரித்துக்கொள்ளலாம். ஆனால் தனக்கான முடிவுகளை அவர்கள் எடுக்கும்படி விட்டுவிடக் கூடாது. தன் வாழ்வு சார்ந்து முடிவெடுக்கும் உரிமை அவளிடமே இருக்க வேண்டும். 

தனித்து வாழும் பெற்றோர் வாழ்வில், அவர்களின் குழந்தைகள் பொறுப்பை உணர்ந்து வளர்கின்றனர். தாய் தன் முழுமையான அன்பையும் குழந்தையுடன் பகிர்ந்துகொள்ள முடியும். நிபந்தனையற்ற அன்புத் தாய்க்கும் குழந்தைக்குமான அன்பின் பிணைப்பை அதிகரிக்கிறது. பெண்ணுக்கு சவால்கள் வரும்போதுதான் அவர்கள் அதை எதிர்த்துப் போராட தன்னை தயார்படுத்திக்கொள்கிறார்கள். அது அவர்களை தன்னம்பிக்கை மிக்க பெண்களாக மாற்றுகிறது. இப்படி வாழத் துணிந்த பெண்களே உதாரண மனுஷிகள் ஆக முடியும்!'' 

சுகிர்தராணி, கவிஞர், பள்ளி ஆசிரியை, சிங்கிள் உமன் 


'' 'சிங்கிள் உமன்' ஆக வாழ்வதில் ப்ளஸ், மைனஸ் ரெண்டும் இருக்கு. நான் அப்பாவைப் பார்த்து வளர்ந்த பொண்ணு. சுதந்திரமா வாழணும் என்ற எண்ணம் அப்படி வந்ததுதான். என் பெண் என்னைப் பார்த்து வளரணும்னு ஒரு விருப்பம் இருந்தது. ஆனால் தனிப் பெண்ணான இந்த வாழ்க்கையில் அது சாத்தியப்படலை. இன்னொரு பக்கம் இப்படியான ஒரு வாழ்க்கையில் என்னால நிறைய எழுத முடிஞ்சிருக்கு. எனக்குப் பிடிச்ச வாழ்க்கைய ரசிச்சு வாழ முடியுது. தைரியமாவும், தன்னம்பிக்கையோடவும் ஓடிட்டிருக்கேன். இந்த ரெண்டு விஷயங்களும் எல்லாக் காலத்திலும் எனக்கு வாழ்க்கைய உற்சாகமாக வாழ்ந்து பார்க்கிற அனுபவங்களைக் கொடுத்திருக்கு!''

சுஸ்மிதா சென், சிங்கிள் உமன், சிங்கிள் பேரன்ட் 
'பிரபஞ்ச அழகி' பட்டம் வென்ற சுஸ்மிதா சென், இன்று வரை 'சிங்கிள் உமன்'. இரண்டு பெண் குழந்தைகளைத் தத்து எடுத்து வளர்க்கும் 'சிங்கில் பேரன்ட்'டும் கூட. 'ஏன் இன்னும் சிங்கிளா இருக்கீங்க?' என்ற கேள்வி அவரைத் துரத்திக் கொண்டே இருந்தாலும் அவர் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. சிங்கிள் வுமன் ஸ்டேட்டஸ் பற்றிய அவரது சமீபத்திய எண்ணப் பதிவு, இந்தியப் பெண்களை புருவம் உயர்த்த வைத்துள்ளது. ‘'இந்தியாவில் ஒரு பெண் தனியாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதை பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பெண், சார்ந்து வாழ்வதே  மகிழ்ச்சி என்பதுதான் இங்கு போதிக்கப்பட்ட விஷயம். 'ஏன் இன்னும் தனி மனுஷியா இருங்கீங்க?' என்று கேட்கிறார்கள். நானும் அவர்களைப் பார்த்து இப்படிக் கேட்கிறேன், ‘ஏன் ஒரு பெண் தனி மனுஷியாக இருக்கக் கூடாது?’. நான் மற்றவர்களின் வாழ்க்கைத் தேர்வை மதிக்கிறேன். எனது வாழ்க்கைத் தேர்வில் தெளிவாக இருக்கிறேன். நான் ஒரு நெருப்பு. இதுவரை நெருப்புடன் சேர்ந்து வாழும் ஆண்மகனை நான் சந்திக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்!" 

ஆணோடு இணைந்து வாழ்ந்தாலும், தனித்து வாழ்ந்தாலும் நாம் தனி மனுஷிகள்தான். நமக்கான விருப்பங்கள், ஆசைகள், ஏக்கங்கள், ரசனைகள், கொண்டாட்டங்கள்... அனைத்தும் நமக்கானவை. ஆம்... சுதந்திரம் நமது பிறப்புரிமை! 

மகளிர் தின வாழ்த்துகள் தோழிகளே!  

- யாழ் ஶ்ரீதேவி

அடுத்த கட்டுரைக்கு