Published:Updated:

வாயில்லா மனிதர்களின் வாய்ஸ் !

வாயில்லா மனிதர்களின் வாய்ஸ் !

பிரீமியம் ஸ்டோரி

 வே.கிருஷ்ணவேணி

 ''நீதிமன்றங்களில், தங்கள் கூற்றினை எடுத்துரைத்து நியாயம் கேட்கும் நிரபராதிகளுக்கு நீதி கிடைப்பதற்கே... ஆயிரம் தடங்கல்கள் இருக்கின்றன இங்கு. இதில் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர் தங்கள் பக்க நியாயங்களை, உண்மைகளை அந்த வழக்குரையாடும் அறைகளில் எடுத்து வைத்து தீர்ப்பு கோருவது, மிகமிகச் சிக்கலானது. அவர்கள் குரலாக அந்த சபையில் வாதாடுவதுதான், இனி என் வேலை!''

- திடமான குரலில் ஆரம்பிக்கிறார் வழக்கறிஞர் ஷபானா, சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள, காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோருக்கான தமிழகத்தின் முதல் மற்றும் ஒரே வழக்கறிஞர் (பேனல் அட்வகேட் ஃபார் டெஃப் அண்ட் டம்)!

வாயில்லா மனிதர்களின் வாய்ஸ் !
ஷபானா
##~##

வார்த்தைகளைச் சுருக்கியே பேசுகிறார் ஷபானா. ''சென்னைதான் சொந்த ஊர். அப்பா, போஸ்டல் டிபார்ட்மென்ட்டில் வேலை பார்க்கிறார். அம்மா, இல்லத்தரசி. தம்பி, தனியார் நிறுவனத்துல வேலை பார்க்கிறான். அப்பாவுக்கு நிறைய நண்பர்கள். எனக்கு பெயர் வைத்தபோது, என்னை அவரின் நெருங்கிய நண்பர் ஜோசப் அங்கிளின் மடியில் உட்கார வைத்துதான் பெயர் வைத்தார்கள். அங்கிளுக்கு பிறவியிலேயே காது கேட்க, வாய் பேச முடியாது. ஆனாலும் தன் மடியில உட்கார வைத்து கண்கள் கலங்க, 'ஷபானா’ என்று தன் மனதால் என் காதுக்குள் பேசியபோதுதான், ஒலியற்ற மனிதர்களுக்கும் எனக்குமான முதல் இழை பின்னப்பட்டிருக்க வேண்டும்''

- மனதிலிருந்து வந்தன வார்த்தைகள்.

''நான், என் வீட்டில் இருந்ததைவிட, பக்கத்திலிருந்த ஜோசப் அங்கிள் வீட்டில் இருந்ததுதான் அதிகம். அவருடைய இரண்டு தம்பிகளுக்கும்கூட அவரைப் போலத்தான். அதனால், அவர்களுடைய சைகை மொழி, சின்ன வயதிலிருந்தே மிகப் பரிச்சயமாகி விட்டது'' என்ற ஷபானா,

''எனக்கு விவாதங்கள் பிடிக்கும். விவாதிக்கவும் பிடிக்கும். எனவேதான் சட்டம் படித்து... சென்னை, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் என்.சந்திரசேகரன் சாரிடம் ஜூனியராக இருக்கிறேன்'' என்ற ஷபானா, 'பேனல் அட்வகேட்' எனும் இந்த வாய்ப்பு கிடைக்கக் காரணமான அந்த முக்கிய சம்பவத்தைக் கூறினார்.

''நான், ஒரு ஃப்ரெஷராக நீதிமன்றம் சென்றிருந்த நேரம் அது. அன்று, நீதிமன்றத்தில் வழக்குரைக்கும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நபரைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. நீதிபதிகள் கேள்விகள் கேட்க, அவர் பதில் சொல்லவில்லை. அவருக்காக வாதாடிய வக்கீல், அவரின் காதருகில் சென்று சத்தமாகப் பேசினார். அதற்கும் மௌனமாகவே இருந்தார். பார்வை யாளராக இருந்த எனக்கு... அவர் பேச இயலாதவர் என்பது அப்போதுதான் புரிந்தது. சட்டென எழுந்து அவரின் கூற்றுக்களைக் கேட்டுச் சொல்ல, நீதிபதிகளிடம் அனுமதி கேட்டேன். இவர் பெயர் பச்சையப்பன். இவருடைய தந்தை எல்லா சொத்துக்களையும் பச்சையப்பன் பெயரில் எழுதி வைத்துவிட்டு இறந்துவிட, பச்சையப்பனின் சகோதரர்கள் அந்தச் சொத்துக்களுக்காக இவரை கடத்திச் சென்று கட்டிப் போட்டிருந்தனர். அதிலிருந்து தப்பியது... அதற்காக இந்த வழக்கைத் தொடர்ந்திருப்பது வரை அவருடைய சைகைகளை நான் ஒலியாக மொழி பெயர்க்க, பச்சையப்பனுக்கு நீதி கிடைத்தது. குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைத்தது. எனக்கு நீதிபதிகளின் பாராட்டு கிடைத்தது!''

- சிரிக்கிறார் ஷபானா!

''இது நடந்தது 2009-ல். அதிலிருந்து காது கேட்க, வாய் பேச இயலாதவர்களின் வழக்குகள் நீதிமன்றத்துக்கு வரும்போதெல்லாம், என்னை அவர்களுக்கான வழக்கறிஞராக வாதாட நீதிமன்றமே பரிந்துரைக்கும். அவர்களின் மனதை நான் வழக்குக்காகப் பேசும்போதெல்லாம், வார்த்தைகள் அற்று, என் கை பிடித்து, கண்களில் நீர் நிறைத்து அவர்கள் எனக்கு நன்றி கூறும்போது... நான் அடையும் நெகிழ்ச்சி வார்த்தைகளில் கூற முடியாதது. இப்படியான அவர்களுக்கான என் தொடர் பங்களிப்பை அங்கீகரிக்க, நீதிமன்றமே என்னை 'பேனல் அட்வகேட் ஃபார் டெஃப் அண்ட் டம்’ பதவிக்கு பரிந்துரைத்தது. சில நாட்களுக்கு முன்தான் தமிழக அரசிடமிருந்து பணிக்கான ஆர்டர் கைகளில் கிடைக்கப் பெற்றேன்'' எனும்போது, ஷபானாவின் முகத்தில் பெருமித சிரிப்பு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு