Published:Updated:

ஆத்தா...கோழி வளர்த்தா..!

ஆத்தா...கோழி வளர்த்தா..!

பிரீமியம் ஸ்டோரி

கோவிந்த் பழனிச்சாமி

ஆத்தா...கோழி வளர்த்தா..!

''உழைச்சு சாப்பிடற சோறுதான் உடம்புல ஒட்டும்... சும்மா கெடைக்கிற சோறு சோம்பேறிக்குத்தான் சொந்தம்!''

- இப்படி தத்துவம் பேசுகிறார் தனக்கென இருக்கும் சிறு கூட்டில் கால் நீட்டி, காலம் கடத்தும் 80 வயது பொன்னாயி பாட்டி. இவருடன் கொஞ்சம் பேசினால், பாட்டிகளே இல்லாமல் போய்விட்ட பட்டணத்து வீட்டுக்காரர்களுக்கு அந்த ஏக்கம் தணியும்!

கோபிசெட்டிபாளையம் அருகில் இருக்கும் சுள்ளிக்கரடு கிராமத்தில் வசிக்கும் பொன்னாயிக்கு... மகன், மகள், பேரன், பேத்தி என்று உட்கார வைத்து உபசரிக்க உறவுகள் பல உண்டு. என்றாலும், இந்த 80 வயதிலும் சொந்தக்காலில் நிற்கிறார்!  

''இடுப்பு எலும்பு தேய்ஞ்சு போற அளவுக்கு நெனவு தெரிஞ்ச நாள்ல இருந்து இந்த செம்மண் பூமியில மண்ணக் கௌறி... மானாவாரியா வெள்ளாம எடுத்தோம். போகம் தவறாம மழை பொழிஞ்ச காலமது. எப்பவும் அடுத்தவுக கைய நம்பி வாழக் கூடாது. நம்மால முடிஞ்ச அளவு வருமானம் பார்க்கணும்.

நாட்டுக்கோழி நாலும், சேவல் ஒண்ணும் இப்ப வளர்க்கறேன். காலையில தொறந்துவிட்ட அஞ்சு உருப்படியும் காடு, மேடுனு மேய்ஞ்சு... வயித்தை ரொப்பிடும். சோளம், கம்புனு

##~##

கொஞ்சம் கூப்பிட்டு கொடுப்பேன். 6 மாசத்துல 4 கோழியும் சேர்ந்து 60 முட்ட போடும். சராசரியா 40 குஞ்சுக பொறிக்கும். 3 மாசத்துல நல்ல தீனி சாப்பிட்டு, ஒன்றரை கிலோவுக்கு மேல எடை வரும். இப்ப உயிர் எடையே கிலோ 150 ரூபாய்க்கு போயிட்டிருக்கு. 40 கோழிய வளர்த்து மெள்ள மெள்ள... வித்துடுவேன். 4 மாசத்துல சராசரியா 6 ஆயிரம் ரூபாய் வருமானம் பார்ப்பேன்.

சேவக் கோழியா இருந்தா... அதுகள ஒரு வருஷம் வளர்த்தவொடன... கட்டுச்சேவல்காரங்க (சண்டைக் கோழி) வந்து... அவுங்க தேடுற ரக சேவலா இருந்தாக்கா... 3,000 ரூபாய் கூட கொடுத்து வாங்கிட்டுப் போறாங்க. சாமிக்கு நேர்த்திக்கடன் செய்றவங்களும் நல்ல விலை கொடுத்து வாங்கிட்டுப் போவாங்க. தாய்க் கோழிகள குறிப்பிட்ட வருஷத்துக்கு ஒரு தடவை மாத்திக்கிடணும், சேவலையும்தான். என்ன... நோய், நொடி இல்லாம எல்லா குஞ்சுகளும் நல்லா தீனி எடுத்து வளரணும். அம்புட்டுத்தான்!''

- பாட்டியின் முகச் சுருக்கங்களில் வழிகிறது சிரிப்பு!

''கடைசி வரைக்கும் யாருக்கும் கஷ்டம் கொடுக்காம இருக்கணும். இலவசமா எதையும் வாங்கக்கூடாது. நம்ம காசுல சாப்பிடற சோத்துக்கு ருசி மட்டுமில்ல, ரோஷமும் அதிகம்! ஒரு வயக்காட்டுப் பாட்டிக்கே இம்புட்டு முடியுதுனா..?''

- வாக்கியத்தை நிறைவு செய்யாமல், முறத்தில் இருந்த அரிசியை பாட்டி எடுத்து வீச... 'கொக்கரக்கோ’ என ஓடி வந்தன கோழிகள்!  

'நம்மால என்ன பண்ண முடியும்..?’ என்று சோர்பவர்களுக்கு, இந்த 'பகல் கோழி'களின் கூவலில் ஒரு புதிய விடியல் கிடைக்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு