Published:Updated:

'உலகத்தின் ஜன்னலைத் திறந்தது ஹெர்பல் நாப்கின்!' - திருச்சி வள்ளியின் திக்கெட்டிய சாதனை!

'உலகத்தின் ஜன்னலைத் திறந்தது ஹெர்பல் நாப்கின்!' - திருச்சி வள்ளியின் திக்கெட்டிய சாதனை!
'உலகத்தின் ஜன்னலைத் திறந்தது ஹெர்பல் நாப்கின்!' - திருச்சி வள்ளியின் திக்கெட்டிய சாதனை!

'உலகத்தின் ஜன்னலைத் திறந்தது ஹெர்பல் நாப்கின்!' - திருச்சி வள்ளியின் திக்கெட்டிய சாதனை!

குறைந்த படிப்பு, வறுமையான நிலை என இருக்கும் பலருக்கும் பொருளாதார வாழ்வையும் சுயமரியாதையையும் அளிப்பது சுயதொழில். அதிலும், பெண்கள் சுயதொழிலில் இறங்கும்போது, அவர்களுக்கே உரிய பொறுப்புணர்வுடன் செயல்பட்டு, வேகமாக வெற்றி பெறுகிறார்கள். அப்படி, இயற்கை பொருள்களைப் பயன்படுத்தி, ஹெர்பல் நாப்கின் தயாரிப்பில் அசத்திவரும் திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்த வள்ளி கணேசன், தன்னுடைய வெற்றி அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். 

"சுயதொழில் ஆர்வம் எப்படி வந்துச்சு?"
''நான் பிளஸ் டூ வரை படிச்சு இருக்கேன். திருமணமாகி மூன்று குழந்தைகள் பிறந்த நிலையில் குடும்பத்தில் ரொம்பவே வறுமை. குழந்தைகளின் படிப்புச் செலவுக்குப் பணம் இல்லை, சாப்பிடவும் கஷ்டமான நிலை, உறவுகளின் நிகழ்ச்சிகளுக்கும் போக முடியலை. என் பொண்ணு இன்ஜினியரிங் படிக்க பணம் இல்லாமல் கஷ்டபட்டப்போ, சொந்தக்காரங்க பலரிடம் கேட்டும் உதவி கிடைக்கலை. அப்போதான், எப்படியாச்சும் சுயதொழிலில் முன்னேறி, பெரிய நிலைக்கு வரணும்னு முடிவெடுத்தேன். எஃப்.எம் நிகழ்ச்சி ஒன்றின் வாயிலா சுயதொழில் வாய்ப்புகளைப் தெரிஞ்சுக்கிட்டேன். தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் அமைப்பு பற்றியும், அதன் தலைவர் மணிமேகலை மேடத்தைப் பற்றியும் தெரிஞ்சுக்கிட்டேன். அவங்களைச் சந்திச்சு ஆலோசனை கேட்டேன். அவங்க உதவியால், நாப்கின் தயாரிக்கும் பயிற்சியில் கலந்துக்கிட்டேன். அப்புறம், வங்கியில் 15,000 ரூபாய் லோன் வாங்கி, சொந்தமா நாப்கின் தயாரிக்க ஆரம்பிச்சேன். தொழிலில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்திச்சு, இப்போ நல்ல நிலையில இருக்கேன்.'' 

"மூலிகை நாப்கின் தயாரிப்பு யோசனை எப்படி வந்துச்சு?"
''முதலில், சிறிய தையல் மிஷின் மூலமாவும், அடுத்து கூடுதலான லோன் வாங்கி பெரிய தையல் மிஷின் மூலமாவும் நாப்கின் தயாரிச்சதில் பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டியதா இருந்துச்சு. பிளாஸ்டிக் நாப்கின் பயன்படுத்தும் பெண்கள் பலருக்கும், பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படுவதாக சொன்னாங்க. நாம் செய்யும் தொழிலில் கஷ்டமரின் உடல்நலம் ரொம்பவே முக்கியம் என்பதை உணர்ந்தேன். அதனால், கூடுதலான பயிற்சி, என்னுடைய சொந்த முயற்சி மூலமாக, வேப்பிலை, துளசி, கற்றாலைகளைப் பயன்படுத்தி மூலிகை நாப்கின் தயாரிச்சேன். அந்த மூலிகைகளில் இருக்குறம் ஈரப்பதமும் பிரச்னையை ஏற்படுத்தவே, அதுக்கு மாற்றுத்தீர்வை யோசிச்சேன். அப்படித்தான் மூலிகைகளை பவுடராக மாற்றி, அதைப் பஞ்சுகளின் மீது தூவி, பாக்கெட்டாக விற்பனை செய்ய ஆரம்பிச்சேன்.'' 

"மூலிகை நாப்கினுக்கு வரவேற்பு எப்படி இருந்துச்சு?"
''பிளாஸ்டிக் இல்லாமல் பஞ்சுடன் முழுக்க இயற்கை மூலிகைப் பொருள்களைப் பயன்படுத்துறதால் பெண்களுக்கு வரக்கூடிய வெள்ளைப்படுதல், கர்ப்பப்பைப் பிரச்னைகள் குறைஞ்சுது. அதை, எங்களின் மூலிகை நாப்கினைப் பயன்படுத்தின பெண்களே சொன்னாங்க. மூலிகை நாப்கினுக்கான தேவையும் அதிகமாச்சு. உள்ளூர், வெளியூர், வெளி மாநிலங்களுக்கும் சப்ளை செய்ய ஆரம்பிச்சேன். பல ஊர்களுக்குச் சென்று பயிற்சி வகுப்புகளும், மாணவிகள் பலருக்கும் நாப்கின் தயாரிப்பைப் பற்றியும் சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சேன்.''

"இப்போது உங்க குடும்ப நிலை எப்படி இருக்கு?"
''இப்போ, இந்தத் தொழிலில், என்னுடைய பொண்ணு, ரெண்டு பசங்களும் படிப்பு நேரம் போக மற்ற நேரங்களில் உதவி செய்றாங்க. பஞ்சு வெட்டுறது, டைலரிங், மூலிகைப் பொடி சேர்ப்பது, ஃபினிஷிங், கவர் போடுறதுனு எல்லா வேலைகளிலும் உதவியா இருக்காங்க. அதனால், தொழில் டெவலப் ஆகி எங்க குடும்பம் நல்ல நிலைக்கு வந்திருக்கு. பல பெண்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைக் கொடுத்துட்டு இருக்கேன். போன வருஷம் நேபாளம் போய், அங்கே ஒரு கருத்தரங்கத்துல நிறையப் பெண்களுக்கு நாப்கின் தயாரிப்புப் பற்றி சொல்லிக்கொடுத்தேன். அங்கே படிக்கவே தெரியாத பல பெண்களும் சுயதொழில் செஞ்சு உயர்ந்த நிலைக்கு வந்திருக்குறதை கண்கூடப் பார்த்தேன். பிளஸ் டூ வரைக்கும் படிச்சு இருக்கிற நம்மால் இந்தத் தொழிலை இன்னும் பெரிய நிலைக்கு கொண்டுவர முடியும்னு தோணுச்சு. கூடுதல் உற்சாகத்தோடு தொழிலில் ஈடுபட்டுட்டு இருக்கேன். பெண்கள் எல்லோரும் சுயதொழில் செஞ்சா, யாருடைய தயவையும் எதிர்பார்க்காம சிறப்பா செயல்பட முடியும். முன்னேற முடியும். வறுமையில் இருக்கும் பெண்களுக்கு நாப்கின் தொழில் செய்ய இலவசப் பயிற்சி கொடுக்க நான் எப்பவும் தயாரா இருக்கேன்'' என்று சொல்லி நெகிழவைக்கிறார் வள்ளி கணேசன். 

தொகுப்பு : கு.ஆனந்தராஜ்
படம்: எம்.ஜி.மணிகண்டன்

அடுத்த கட்டுரைக்கு