Published:Updated:

அருள் தரும் அம்மன் உலா !

வெட்டுடையாளே !

பிரீமியம் ஸ்டோரி

கரு.முத்து

அருள் தரும் அம்மன் உலா !

 ''தாயே நான் வலிமையில்லாதவள் என்பதால், நியாயம் என் பக்கம் இருந்தும்...  தொல்லை தருபவர்களிடமிருந்து மீள முடியவில்லை. நீதான் தட்டிக் கேட்க வேண்டும்!''...

''எனக்குச் சேர வேண்டியதை தர மறுப்பவர்களை நீதான் கேட்க வேண்டும் ஆத்தா!''...

''அம்மா, என் கணவனை மயக்கிஇருப்பவர்களிடமிருந்து அவரை எனக்கு மீட்டுத் தா!''...

- இப்படி எண்ணற்ற கோரிக்கைகளோடு நிற்பவர்கள்...

''ஆத்தா... அவன் என் பணத்தை திருப்பிக் கொடுத்துட்டான். அதனால அவனை விட்டுடு''...

''என் கணவர் என்னுடன் மீண்டும் சேர்ந்துவிட்டார். உனக்கு நன்றி''...

- ஏற்கெனவே கொடுத்திருந்த முறையீட்டை 'வாபஸ்’ வாங்குபவர்கள்... என்று அன்னை வெட்டுடையார் காளி சந்நிதியில் அனுதினமும் கூட்டம் நெரித்தபடியேதான் இருக்கிறது!

##~##

தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு பிரிந்த பங்காளிகள், மாமன் - மச்சான் ஆகியோர் அம்மன் அருளால் ராசியாகி ஒன்றாகச் சேரும் 'கூடுதல்’ நிகழ்ச்சி வெள்ளி, செவ்வாய், ஞாயிறு ஆகிய தினங்களில் நடைபெறுகிறது. அப்போது அங்கே எழும் குதூகலம்... எழுத்தில் வடிக்க முடியாதது.  

தன் பக்தர்கள் சாதாரணமாக முறையிடும்போது எதிரிகளை சாத்வீகமாக எதிர்கொள்ளும் அன்னை, அவர்களே... எதிரிகளின் தாள முடியாத துன்பத்தால் தன் சந்நிதி வந்து காசு வெட்டிப் போட்டு முறையிட்டால்... அந்த எதிரிகளின் உயிரைப் போக்கும் அளவுக்கு உக்கிரமாக மாறிவிடுகிறாள். பொய்யாக சத்தியம் செய்வோரை... 'உண்டு, இல்லை' என்று ஆக்கவும் தவறுவதில்லை!

இப்படி உலக நீதிமன்றமாக விளங்கிக் கொண்டிருக்கும் வெட்டுடையார் காளி வீற்றிருப்பது... சிவகங்கை மாவட்டம், அரியாக்குறிச்சியில்தான்! தமிழ்நாடு மட்டுமல்ல... உலகெங்கும் இருக்கின்ற தமிழர்களும் தேடி வந்து கொண்டேஇருக்கிறார்கள் அன்னையை!

அருள் தரும் அம்மன் உலா !

பரமக்குடி பக்கமுள்ள பொன்னக்கனேரியில் இருந்து குடும்பத்துடன் வந்திருந்தார் வசந்தா. ''பதினாறு வருசமா குழந்தையில்ல. நாங்க போகாத மருத்துவமனை இல்ல, பார்க்காத டாக்டர் இல்ல. 'உங்களுக்கு எந்தக் குறையும் இல்ல'னுதான் சொன்னாங்க. ஆனா, குழந்தைப்பேறு மட்டும் கிடைக்கல. சொந்தக்காரங்கதான், 'வெட்டுடையார் காளியை வேண்டிக்கிட்டு வாங்க’னு சொன்னாங்க. நாங்களும் அம்மனை சரணடைஞ்சு பிள்ளை வரம் கேட்டோம். அடுத்த வருஷமே அவளைப் போலவே அழகான பொம்பளைப் பிள்ளை பொறந்துடுச்சு. இவளப் போல கருணை தெய்வம் வேற இல்ல!'' என்று மெய்யுருகினார் வசந்தா.

கருணை பொழிபவளாக இருந்தாலும் கர்ப்பகிரகத்தில் உக்கிர தோற்றத்தில்தான் இருக்கிறாள் அன்னை. காரணம்... இவள், மகிஷாசுரமர்த்தினியின் வடிவமாயிற்றே!

தேவர்களையும் மனிதர்களையும் துன்புறுத்தி வந்த சண்டாசுரனை அழிக்க வேண்டி அன்னையை நாடினர் தேவர்கள். அன்னையும் அவனை யுத்தத்தில் அழித்தொழித்தாள். அப்போது தேவர்கள் தங்கிய இடம்தான் 'தேவகோட்டை'. அவர்கள் தேவியை கண்ட இடம்தான் 'கண்டதேவி'. சண்டாசுரனின் தேர்க்கொடி முறிந்த இடம் 'கொடிக்குளம்'. பூமழை பொழிந்த இடம் 'பூங்குடி'. அன்னை ஆசுவாசமாக உட்கார்ந்த சாந்தமான இடம்தான் இந்த 'அரியாக்குறிச்சி'! பிறகு, காளையார்கோவில் சென்று, காளீசரை வேண்டி கரிய உருவம் நீங்கப் பெற்று உமாதேவியாக மாறினாள் என்பது புராண வரலாறு!

அருள் தரும் அம்மன் உலா !

அய்யனார் கோயிலுக்கும் பெண்களுக்கும் ஏழாம் பொருத்தம். ஆனால், இங்கே அன்னை வீற்றிருப்பதே... அரியாக்குறிச்சி அய்யனார் கோயிலில்தான். இந்தக் கோயிலில் காளியின் சக்தியும் இருப்பதை உணர்ந்து, சந்நிதி உருவாக்கி பீடம் அமைத்து அந்தக் காலத்திலிருந்தே வழிபாடு செய்திருக்கிறார்கள் பூசாரிகள். அதையே  தொடர்கிறார்கள் அவர்களின் வழித்தோன்றல்களாக இருக்கும் இன்றைய பூசாரிகள்!

அருள் தரும் அம்மன் உலா !

சுதந்திரப் போராட்ட வரலாற்றோடு இணைந்த ஒரு கதையும் ஆவணங்களில் இருக்கிறது அன்னையின் வரலாறாக! 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சிவகங்கைச் சீமையை ஆண்டுகொண்டிருந்த முத்துவடுகநாதர், ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டார். அவருடைய மனைவி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் மூலம் தப்பிச் சென்றார். அவரைத் துரத்தி வந்த ஆங்கிலேய படை, அரியாக்குறிச்சியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த உடையாள் என்ற கன்னிப் பெண்ணிடம், 'ராணி எந்தப் பக்கமாக சென்றாள்?’ என்று கேட்க, நாட்டுப்பற்று மிகுந்த உடையாள் 'சொல்லமாட்டேன்!’ என்று பதிலளித்தாள். உடனே அவள் தலையை வெட்டி வீழ்த்தியது ஆங்கிலேய படை.

வெட்டுபட்ட உடையாளை, தெய்வமாக போற்றி வணங்க ஆரம்பித்தது சிவகங்கைச் சீமை. 'வெட்டுபட்ட உடையாள்' என்பதுதான் வெட்டுடையாளாக மாறியது. தன் மண்ணைக் காக்க உதவிய அன்னை, இன்று வரை மக்களையும் காத்து வருகிறாள் என்பதுதான் அந்த ஆவணச் செய்தி!

''செவ்வாய்தோஷம், மாங்கல்யதோஷம் என்று திருமணம் ஆகாதவர்கள் யாராக இருந்தாலும், குறைகளை முறையிட்ட ஒரு வருடத்துக்குள் நிச்சயம் மணம் முடியும். குழந்தையில்லை என்று வருகிறவர்களை அடுத்த வருடமே பெற்றோராக மாற்றுகிறாள் அன்னை. நஷ்டமடைந்த தொழிலை லாபமாக்கி அதில் தனக்கு பங்கும் பெறுகிறாள். இப்படி எதிலும் நீதிமானாக விளங்கும் அன்னையின் அருட்கருணை, அளவில்லாதது!'' என்று பரவசமாகிறார் பூசாரிகளில் ஒருவரான சந்திரன்.

எப்படி செல்வது?

சிவகங்கையில் இருந்து தொண்டி செல்லும் சாலையில், 13-வது கிலோ மீட்டரில் இருக்கிறது கொல்லங்குடி. அங்கிருந்து தெற்கே இரண்டு கிலோமீட்டரில் இருக்கிறது அரியாக்குறிச்சி. ஷேர் ஆட்டோக்கள் கிடைக்கும். காரைக்குடி - காளையார் கோவில் வழியாக வும் செல்லலாம்.

கோயில் திறந்திருக் கும் நேரம்:

காலை 6 முதல்

மாலை 6 மணி வரை. மதியம் நடை சாத்தும் வழக்கமில்லை.

கோயில் தொலைபேசி எண்: 93633-34311

 - சக்தி வருவாள்...
படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு