Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன !

அனுபவங்கள் பேசுகின்றன !

பிரீமியம் ஸ்டோரி

தியேட்டர்காரர்களே கவனியுங்கள்!

அனுபவங்கள் பேசுகின்றன !
##~##

குடும்பத்துடன் சினிமா பார்க்கச் சென்றிருந்தோம். நியூஸ் ரீல் ஓடிக் கொண்டிருந்ததால் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. இருட்டில் தட்டுத் தடுமாறி சீட் பிடித்து நாங்கள் அமர்ந்தபோது, என் பேரன் 'ஆ...’ என்று வலது கை ஆள்காட்டி விரலைப் பிடித்துக் கொண்டு அலறினான். செல்போன் வெளிச்சத்தில் பார்த்த போது... ரத்தம் கொட்டிக் கொண்டுஇருந்தது. பதறிவிட்டோம் நாங்கள். சீட்டில் உடைந்து நீட்டிக் கொண்டுஇருந்த தகரத்தின் வேலைதான் அது. ரத்தம் கொட்டுவது நிற்காமல்இருக்கவே... அவசரமாக ஆஸ்பத்திரி சென்று சிகிச்சை அளித்தோம்.

அந்த தியேட்டரில், நிறைய சீட்கள் இப்படி ஆபத்தை ஏற்படுத்துபவையாகவே இருந்தன. டிக்கெட்டில் அச்சிடப்பட்டதைவிட அதிகமாக கட்டணம் வசூலித்து, காசு பார்ப்பதில் குறியாக இருக்கும் தியேட்டர்காரர்கள், குறைந்தபட்சம்... சீட்களையாவது சரியாக வைத்திருக்க வேண்டாமா?

- ஏ.ஜாஸ்மின், சத்தியமங்கலம்

சுவர் இருந்தால்தான் சித்திரம்!

அனுபவங்கள் பேசுகின்றன !

என் நண்பரின் மகன், சமீபத்திய ப்ளஸ் டூ பொதுத்தேர்வில், 1,100 மதிப்பெண்கள் எடுத்திருந்தான். அவன் பெற்றோர் இதற்காக அவனைப் பாராட்டாமல், ''உன்னை டாக்டராக்கணும்னுதானே பெரிய ஸ்கூல்ல இவ்வளவு செலவழிச்சுப் படிக்க வெச்சேன். இதெல்லாம் ஒரு மார்க்கா..? நம்ம சொந்தக்காரங்கள்ல எத்தனை பேர் டாக்டரா இருக்காங்க பார்த்தியா..? இப்போ இந்த மார்க்குக்கு யார் உனக்கு மெடிக்கல் சீட் கொடுப்பா..? எக்கேடும் கெட்டுப் போ’ என்று தினமும் திட்டிக் கொண்டே இருக்கின்றனர். நல்ல மார்க் எடுத்தும் அதுக்கான பாராட்டு கிடைக்காமல், மாறாக இப்படி கேவலமாக தன்னை திட்டுவதால் மனம் வெறுத்துப் போன பையன், ஒரு ஜடமாக நடமாடி வருகிறான். அப்படியும் அடங்காத அவன் பெற்றோர், 'படிக்கற நேரத்துல படிக்காம விட்டுட்டு, இப்போ ஃபீல் பண்ணினா மார்க் வந்துடுமா..?’ என்று மேற்கொண்டும் வறுத்தெடுக்கின்றனர்.

பொதுத்தேர்வு மதிப்பெண்கள் மட்டுமே ஒருவரின் வாழ்க்கைக்கான அளவீடு அல்ல, மருத்துவம் மட்டுமே படிப்பல்ல. எத்தனையோ படிப்புகள் இருக்கின்றன வாழ்வை வளப்படுத்த என்று தினம் தினம் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பலரும் அறிவுரை சொன்னபடிதான் இருக்கின்றனர். இத்தகைய பெற்றோர்... அதையெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை. 'அவங்க நல்லதுக்காகத்தானே சொல்றோம்...’ என்ற வாதத்துடன் வரும் பெற்றோர்களே... 'சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்' என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்!

- அ.வள்ளி, திண்டிவனம்

உள்ளாடை உபத்திரவம்!

அனுபவங்கள் பேசுகின்றன !

சமீபத்தில் நானும் என் தோழியும் அவளுடைய மூன்று வயது மகளுடன் கடைக்குச் சென்றோம். அப்போது குழந்தை அசௌகரியமாகவே காணப்பட்டது. 'என்னாச்சு..?’ என்று நான் தோழியிடம் கேட்க, ''தூக்கத்துல எழுப்பி கூட்டிட்டு வந்ததால சிணுங்கறா...'' என்றாள். ஆனால், குழந்தை சிணுங்கிக் கொண்டே இருந்ததால் கீழே இறக்கிவிட்டு நடக்க வைக்க, வீறிட்டு தொடர்ந்து அழுதது குழந்தை. செய்வதறியாது குழந்தையை தூக்கிக்கொண்டு அவசரமாக ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்த நாங்கள், பூச்சி ஏதாவது கடித்துவிட்டதா என்று அவள் உடைகளை களைந்து பார்க்க, அப்போதுதான் காரணம் புரிந்தது. குழந்தையின் ஜட்டியை சிறிய ரக க்ளிப் போட்டு காயப்போட்ட என் தோழி, துணிகளை எடுக்கும்போது அதை க்ளிப்புடன் எடுத்து, அப்படியே மடித்தும் வைத்திருக்கிறாள். கிளம்பிய அவசரத்தில் கவனிக்காமல் க்ளிப்புடன் ஜட்டியை குழந்தைக்கு மாட்டி விட, குழந்தை துன்பத்துக்கு ஆளாகிஇருக்கிறது. குழந்தைகளின் ஆடைகள், உள்ளாடைகள் விஷயத்தில் கவனம் பெண்களே..!

- அபிக்ஷா மெர்லின், சேலம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு