Published:Updated:

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1

அவர்கள் 'சுயம்பு'வாக உருவெடுக்கட்டுமே !

 சிகரத்தை நோக்கி சிறகடிக்க வைக்கும் தொடர்

குழந்தை மனநல மருத்துவர் ஜெயந்தினி

ஸ்கூலில் இருந்து களைப்பாக வந்த ஷாலினி, அரை மணி நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தாள். பிறகு, ''அம்மா டிரெஸ் மாத்தி விடுங்க'' என்றாள். மாற்றிவிட்ட அம்மா, ''ஷாலு, டிபன் சாப்பிடு, டியூஷனுக்கு நேரமாச்சு'' என்றபடியே ஊட்டிவிட்டார். பாடப் புத்தகங்களை பையில் அடுக்கி, அவளைக் கைப்பிடித்து அழைத்துச் சென்று, டியூஷனில் விட்டார்.

இரவு மணி ஏழு மணிக்கு திரும்பச் சென்று அழைத்து வந்து, சாப்பாடு ஊட்டிவிட்டு, வாயைத் துடைத்துவிட்டு படுக்க வைத்தார். பக்கத்திலேயே படுத்து, பாட்டுப் பாடி ஷாலினி அயர்ந்து தூங்குகிறாள் என்பதை உறுதி செய்த பின்தான் எழுந்து வந்தார்... கிச்சனுக்கு மீதமிருக்கும் வேலைகளை முடிக்க.

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1

ஷாலினி படிப்பது, எட்டாம் வகுப்பு!

##~##

''ஏழாவது, எட்டாவது படிக்கிற என் பையனுக்கும் பொண்ணுக்கும்... இதேமாதிரிதான் நான் பண்றேன். இதுல என்ன தப்பு?'' என்கிற பெற்றோரா நீங்கள்? உங்கள் குழந்தை எதிர்காலத்தில் எந்த சுய விருப்பங்களும், சுய தேடல்களும் இல்லாமல், தன்னம்பிக்கை கொஞ்சமும் இல்லாமல் எல்லாவற்றுக்கும் அடுத்தவரின் உதவியை எதிர்பார்த்து இருக்க நீங்கள் விரும்பினால்.... இந்தச் செயல்களைத் தொடருங்கள்.

அப்படியன்றி... மிடுக்கான, தன்னம்பிக்கை நிறைந்த, எந்த அசாதாரண சூழ்நிலையையும் எதிர்கொள்ளக் கூடியக் குழந்தையாக வளர்க்க விரும்பினால்... குழந்தையே சுயமாக சில வேலைகளைச் செய்வதற்கு அனுமதியுங்கள். அதுதான் குழந்தையின் பண்பை, ஆளுமையை வளர்க்கும் காரணி! அவனுடைய உலகத்தில் அவனே போரிடவும், போட்டியிடவும், வெற்றி பெறவும், தோல்வியை கம்பீரமாக எதிர்கொள்ளவும் கற்றுக் கொடுங்கள்; அவனாகவே கற்றுக் கொள்ளவும் அனுமதியுங்கள். அதன் முலம்தான் அவனுடைய பலமும் பலவீனமும் அவனுக்கே புரிய வரும்.

உதாரணமாக, ஓவியப் போட்டியில் கலந்துகொள்ள விரும்புகிறாள் உங்கள் ஆசை மகள் என்றால், முதலில் அனுமதியுங்கள். ஒரு விஷயத்தில் பங்கெடுப்பதுதான் முக்கியம். அதில் வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் இரண்டாம் பட்சம்தான் என்பதை அவளுடைய அனுபவத்தின் வாயிலாகவே கற்றுக் கொள்வதுதான் எந்தச் செயலிலும் தொடர்ந்து போராட வைக்கும். ஒருவேளை உங்கள் மகள் அந்தப் போட்டியில் தோல்வி அடைந்துவிட்டால், ''அந்த டீச்சருக்கு கலரிங் சென்ஸே கிடையாது. நீ எவ்வளவு நல்லா பண்ணியிருந்தே...'' என்று நெகட்டிவ் கமென்ட்ஸ் கொடுக்காதீர்கள். இது, தன் இயலாமைக்கு அடுத்தவர் மேல் பழி சொல்லும் குணத்தை குழந்தைக்குக் கற்றுக்கொடுக்கும். அது தீவிரமானால், குறுக்கு வழியில் வெற்றியைப் பெறுவதற்கான சிந்தனையில் ஆழ்ந்துவிடும்.

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1

உங்கள் அணுகுமுறையும் வார்த்தைகளும் நேர்மையாகவும் நேர்மறையாகவும் இருப்பது, உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை கம்பீரமாக மாற்றும் வல்லமை கொண்டது. ''நீ அழகா வரைஞ்சிருந்தேடா... ஆனா, ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்கின பொண்ணு கலர் பண்றதுல ஸ்கோர் பண்ணிட்டா. அடுத்த முறை நீயும் கவனமா பண்ணினா கண்டிப்பா பரிசு உனக்குத்தான்'' என்று அவளுடைய ஓவியத்தின் மீதான நேர்மையான விமர்சனம், அவளுக்கு அந்தப் பிழையை உணர வைத்து, அடுத்த முறை திருத்தச் செய்யும்தானே?!

சரி, ஒரு பரிசோதனை. இந்தக் குணங்கள் உங்கள் குழந்தைகளிடம் இருக்கிறதா..?

1-3 வயதில் பிடிவாதம் நிறைந்தவளாக, எதற்கெடுத்தாலும் மூச்சைக் கட்டி, அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறாளா? தன் விருப்பத்துக்கு எதிராக எது நடந்தாலும் அழுகிற 'சென்ஸிடிவ்’ குழந்தையா?

 3-9 வயதில் உள்ள குழந்தை, வீடியோ கேம்ஸ் வாங்கித் தரவில்லை என்று ஊரே கேட்கும்படி கத்திக் கத்தி அழுது, தரையில் மண்டையைப் போட்டு முட்டிக் கொள்கிறதா, கடித்துத் துன்புறுத்துகிறதா?

 9 வயதுக்கு மேற்பட்ட குழந்தை, மற்றவர்களை அடிப்பது, பொருட்களை உடைப்பது என்றிருக்கிறதா..?

10 வயதுக்கு மேற்பட்ட குழந்தை, வீட்டில் உள்ளவர்கள் ஒரு வார்த்தை சொன்ன தற்காக முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சாப்பிடாமல் அடம் பிடிக்கிறதா?

'ஆமாம்... ஆமாம்!’ என்றால் பயந்து விட வேண்டாம். எப்போதாவது ஒருநாள் என்றால்... அது குழந்தைக்குரிய இயல்பு; நோ பிராப்ளம். எப்போதுமே இப்படித்தான் என்றால்... குழந்தையிடம் பிரச்னை என்று அர்த்தம். அதை தீர்ப்பதற்கான வழிகளை செய்யுங்கள்... அன்போடும் அக்கறையோடும்!

- வளர்ப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு